Friday 7 October 2016

அரபி மொழியில் திருக்குறள் பாடும்பேராசிரியர்..!!


திருக்குறளை அரபி மொழியில் மொழி பெயர்த்து, அதை சவுதி அரேபியாவில் நடந்த மாநாட்டில் அரங்கேற்றி பலரின் பாராட்டை பெற்று வந்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் ஜாகீர் உசேன். சென்னை பல்கலைக்கழகத்தில் அரபி மொழி பாடத் திட்டக்குழு தலைவராக பணியாற்றும் ஜாகீர், திருக்குறள் மட்டுமின்றி ஆத்திசூடியையும் அரபியில், மொழிபெயர்த்திருக்கிறார். அதுமட்டுமின்றி... சவுதி அரேபியா, கேரள மாநிலம் கோழிக்கோடு போன்ற இடங்களில் நடந்த சர்வதேச அரபி மொழி மாநாட்டில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் இலக்கியங்களை காட்சிப்படுத்தி, உலக கவிஞர்களின் முன்னிலையில் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்திருக்கிறார். இதுபற்றி ஜாகீரிடம் பேசுவோம்...

‘‘தமிழக அரசு, திருக் குறளை அரபி மொழியிலும், சீன மொழியிலும் மொழி பெயர்க்க 2011–ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப் படையில் சீனமொழிப் பெயர்ப்பை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மேற் கொண் டது. அரபி மொழிப்பெயர்ப்பை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலில் நான் மேற்கொண்டேன். 2 ஆயிரம் நூற்றாண்டுகள் பழமையான திருக்குறளை அரபியில் மொழிபெயர்ப்பது, மிகவும் சவாலாக இருந்தது. திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கும் அறநெறிகளை இலக்கிய சுவை குறையாமல், அரபி மொழியில் சொல்லவேண்டியிருந்தது. அதை கச்சிதமாக செய்திருக்கிறோம். 7 வார்த்தைகள், 2 அடியில் அடைபட்டு கிடக்கும் பெரிய பெரிய அறநெறி கருத்துகளை புதுக்கவிதை நடையில் மிகவும் எளிமையாக சொல்லி இருக்கிறோம். இதனால் விளக்க உரை இல்லாமலேயே, அரபி திருக்குறளை எளிதில் புரிந்துகொள்ள முடியும்’’ என்று மொழி பெயர்ப்பின் அம்சங்களை கூறும் ஜாகீர், அரேபியர்களின் வழக்கத்தில் இல்லாத ஒரு சில தமிழ் வார்த்தைகளுக்கு மாற்றாக ஒரு சில அரேபிய வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்.
‘‘திருவள்ளுவர், ‘அமிழ்தம்’ என்ற வார்த்தையை பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் ‘அமிழ்தம்’ என்பது அரேபியர்களுக்கு பழக்கமில்லாத வார்த்தை. அதனால் அதற்கு பதிலாக அரேபியர்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் படியான ‘ஹவ்ளுல் கவ்தர்’ (சொர்க்கத்தின் நீர்தடாகம்) என்ற வார்த்தையை பயன்படுத்தி புரிய வைத் திருக்கிறேன். திருக்குறளின் இலக்கிய சுவை குறைபடாமலும், அரபிக்கவிஞர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வடிவிலும் மொழி பெயர்ப்பு பணிகளை மேற்கொண்டோம். இதற்காக அரபி தமிழ் கவிஞர்களிடம் ஆலோசித்து தகுந்த வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறோம்’’ என்று கூறுபவர்... 2015–ம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடந்த அரேபிய கலை மாநாட்டில் காமத்து பாலை படித்து காட்டி அரேபியர்களை கவர்ந்திருக்கிறார்.
‘‘திருக்குறளை, அரபி மொழியில் மொழிபெயர்த்தபோது சிலர் என்னிடம் நெருடலாக சில கேள்விகளை எழுப்பினார்கள். ஏனெனில் ஒழுக்கக்கட்டுப்பாடு நிறைந்த சவுதி அரேபியாவில்... காமத்து பால் அதிகாரங்களை ஏற்றுக் கொள்வார்களா..? என்பது அவர்களுடைய சந்தேகமாக இருந்தது. ஆனால் இத்தகைய கருத்துகளுக்கு அரபிக்கவிஞர்கள் இடம்கொடுக்கவில்லை. காமத்து பாலை கவிஞர்கள் கலைப்பார்வையில், ரசித்தனர். பெண்கள் குழுமியிருந்த கலை மாநாட்டில் காமத்து பாலையும் படிக்க சொல்லி இலக்கிய நடையை ரசித்து பாராட்டினர்’’ என்றவர்... அரேபிய மாநாட்டில் திருக் குறளை திருக்குறள்டல் வடிவில் சமர்ப்பித்துள்ளார். இவர் தமிழ் மொழியில் திருக் குறளை பாட... மற்றொருவர் அரபி மொழியில் திருக்குறளை பாடி... அவையை அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.
‘‘சவுதி அரேபியாவில் மட்டுமல்ல, கோழிக்கோட்டில் நடந்த அரபி கலை மாநாட்டிலும், மொழி பெயர்க்கப்பட்ட திருக் குறளுக்கு ஏக வரவேற்பு கிடைத்தது. உலகின் புகழ்பெற்ற கவிஞர்களும் திருக்குறளுக்கு எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தனர். அரபி மொழியில், திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் பல அரேபிய இலக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சிகளையும் நடத்துகிறார்கள்.  
இது தமிழுக்கு கிடைத்த பெருமை. தமிழ் இலக்கியங்களுக்கு கிடைத்த பெருமை. இதுபோல நிறைய தமிழ் இலக்கியங்களை மொழிப்பெயர்ப்பு செய்து, தமிழர்களின் பெருமையை உலகிற்கு வெளிக்காட்ட வேண்டும். இதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்தாலும் தமிழர்களாகிய நமக்கும் இதில் பங்கு இருக்கிறது. அதனால் தமிழ் இலக்கியங்களை பிரபலமான மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யலாம்’’ என்று பெருமிதத்தோடு பேசும் ஜாகீர் உசேன், சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர். கல்வி பணி... மொழி பெயர்ப்பு பணிகளை தாண்டி... அரபி மொழியில் ஆராய்ச்சி கட்டுரை களையும் எழுதியுள்ளார்.
சுமார் 25 நாடுகளுக்கு மேல் அரபியை தாய் மொழியாக கொண்டிருக்கும் சூழலில், ஜாகீர் உசேனின் மொழிப்பெயர்ப்பு பணி அங்கு திருக்குறளின் வாசிப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. “ஓவியம், இசை, நடனம், இலக்கியம்... என ஒரே அரங்கில் நடக்கும் அரேபிய கலை மாநாட்டில், திருக்குறளை வாசிப்பதற்கென தனி அரங்கையும் ஏற்படுத்தி இருக்கின்றனர். இது திருக்குறளுக்கு கிடைத்த வெற்றி’’ என்கிறார், ஜாகீர்.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment