Wednesday 14 September 2016

பொறுமை கடலினும் பெரிது !! பொறுமை பற்றி இஸ்லாமிய பார்வை..

Image result for பொறுமைஇன்னைக்கு உங்களுக்கு மூணு கதை சொல்லப் போறேன்.

1.முதல் கதையில ஒரு அப்பா ஆபீஸ் விட்டு வர்றாரு.

வீட்டுக்குள்ள நுழையும் போது அவரு பொண்ணு போகோ சேனல் பாத்துகிட்டிருக்கிறா. அடுத்த நாள் பரீட்சை. அவ என்ன செய்தா காலையில இருந்து படிச்சிட்டு இருந்தா.

அப்புறம் அம்மா கிட்ட கேட்டுட்டு பத்து நிமிசம் ரிலாக்ஸ் பண்ண டிவி பாத்துகிட்டு இருந்தா. ஆனா அவ அப்பா கண்ணுல என்ன பட்டுச்சி. டிவி பாக்குறது மட்டும்தான் பட்டுச்சி. சட்டுன்னு வந்தாரு. படிக்காம டிவியா பாக்குறன்னு அவர் பையால டிவி மேல வீசினார்.

அது டிவி மேல பட்டு டிவி ரிப்பேர் ஆகுது.

2.இரண்டாவது கதையில ஒரு அம்மா தன் குட்டிக் குழந்தையோட ஒரு கீரிப்பிள்ளையையும் வளக்குறாங்க
.

ஒருநாள் குழந்தைக்கு காவலா கீரிப்பிள்ளைய வெச்சிட்டு ஆத்துல தண்ணி எடுக்கப் போறாங்க. அப்போ குழந்தைக்கு பக்கத்துல ஒரு பாம்பு கொத்த வருது. உடனே கீரிப்பிள்ள பாம்பு கூட சண்டைப் போட்டு கடிச்சி கிழிச்சி போட்டிருது. கீரிப்பிள்ளை வாயெல்லாம் ரத்தம்.

ஆத்துல இருந்து குடத்த எடுத்துகிட்டு வந்த அம்மாவ நோக்கி கீரிப்பிள்ள ஒடிவருது. அம்மா பாக்குறா.

கீரிப்பிள்ள வாயில இருந்து ரத்தம். வாய் ரத்தம். ரத்தம் வாய். உடனே முடிவு செய்யுறா. ஆஹா நம்ம குழந்தையைத்தான் கீரி கொன்னுட்டு வருதுன்னு என்ன பண்றா.

அந்த தண்ணிக் குடத்த கீரி மேல போடுறா. தண்ணி குடம் எவ்வளவு வெயிட்டு, அதுவும் பூமி கீழ இழுக்கிற வேகமும் சேர்ந்து பெரிய எடையா கீரிபிள்ள தலையில் விழுது. கீரிப்பிள்ள அடிபட்டு கிடக்குது. உள்ளப் போய் பாத்தா அங்க பாம்பு கிழிஞ்சி கிடக்குது. குழந்தை தூங்கிகிட்டிருக்கு.

3.மூணாவது கதையில ஒருத்தன் ஒரு நாய ஆசையா வளத்துட்டு வந்தானாம். அவனுக்கு ரொம்ப கஷ்டம் வர, அந்த நாய அடமானம் வெச்சி காசு வாங்கினான்.

நாயை வைச்சிகிட்டு காசு கொடுத்த வியாபாரி கேட்டாராம் “என்னப்பா நாய என்கிட்ட விட்டுட்டு போற. அது என்ன விட்டு உன்கிட்ட ஒடிவந்திராத” அப்படின்னார்.

உடனே இவன் அப்படி வராதுன்னு, நாய் கண்ணப் பாத்து அப்படி வந்திராதன்னு பார்வையில கெஞ்சினான். அன்னையில இருந்து நாய் வியாபாரிக்கு ரொம்ப விசுவாசமா இருந்துச்சி.

ஒருநாள் வியாபாரி இல்லாத நேரம் ஒரு திருடன் வர, நாய் திருடன கடிச்சி விரட்டிட்டாம். உடனே வியாபாரி நாய் மேல அன்பு அதிகமாகி “சரி நீ இனிமே உன் எஜமானன் கிட்டையே போயிரு. எனக்கு சேவை செய்தது போதும். நான் கடன் பத்திரத்த கிழிச்சிப் போட்டிறேன்னு அனுப்பி வெச்சான்.

நாய் ஆசை ஆசையா எஜமானன தேடி வருது. இங்க நம்ம ஆள் நாயை மீட்டுக்கிறதுக்கு காசு சேத்துட்டு வேகமா வர்றான். எதுத்தாப்புல நாய் வால ஆட்டிக்கிட்டு வருது.

அதப் பாத்து தப்பா நினைச்சிர்ரான் “ஏய் நாயே. நாந்தான் உன்ன நா வர்ற வரைக்கும் வியாபாரிக்கு விசுவாசமா இருன்னு சொன்னேனே, நீ துரோகம் பண்ணிட்டு தப்பிச்சி ஒடிவர்றியா”என்று சொல்லிட்டு தன் கையில இருக்கிற கம்ப வெச்சி நாய் மேல ஒரே அடி.

நாய் பாவமா அடிபட்டு தரையில கிடக்குது.

இதுல பாருங்க மூணு கதையிலையுமே நாம் கண்ணால பாக்குற காட்சிய அப்படியே நம்புறோம். கண்ணு பாக்குது, டக்குன்னு முடிவெடுக்குறோம்.

அப்பா பொண்ணு மேல கோபப்படுறார்.
அம்மா கிரிப்பிள்ள மேல குடத்தைப் போடுறாங்க.
எஜமானன் நாய் மேல கம்பு வீசுறான்.

இன்னொன்னயும் கவனிங்க மூணு பேரையுமே மூணுபேருக்கும் ரொம்ப பிடிக்கும்.

அப்பாவுக்கு பொண்ணப் பிடிக்குது.அம்மாவுக்கு கீரிபிள்ளைய பிடிக்குது. அதனாலத்தான் குழந்தைக்கு காவலா வெச்சிட்டு போறாங்க.
எஜமானனுக்கு நாயை ரொம்ப பிடிக்குது.

இவ்வளவு பிடிச்சிருந்தாலும் ஏன் கண்ணால பாக்குற காட்சியை நம்புறாங்கன்னு யோசி.


ஏன் கண்ணால பாக்குற காட்சியை நம்புறாங்கன்னா அவுங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்கள ரொம்ப நம்பல.

ரொம்ப ரொம்ப பிடிச்சவங்க மேல ரொம்ப ரொம்ப நம்பிக்கை இல்லை.

என்னைக்குமே நமக்கு ரொம்ப பிடிச்சவங்க மேல நம்பிக்கை வைக்கணும். நமக்கு பிடிக்காத ஒண்ண அவுங்க செய்தாக கூட டக்குன்னு அந்த அப்பா மாதிரியோ, அந்த அம்மா மாதிரியோ, அந்த எஜமானன் மாதிரியோ டக்குன்னு உணர்ச்சிவசப்பட்டிரக் கூடாது.

பொறுமையா அவுங்கள நம்பி மெல்லமா அன்பா விசாரிக்கணும்.

அவசரப்பட்டா அது பெரிய இழப்புல கொண்டு விட்ரும்.

இதுதான் இன்னைக்கு உங்களுக்கு சொல்ல விரும்புற கதைகள்....
பொறுமை கடலினும் பெரிது.



பொறுமை பற்றி இஸ்லாம் என்ன  கூறுகிறது ?

வெகு சொற்பமாகவே சிலரிடத்தில் காணப்படும் "பொறுமை" என்ற இக்குணம் பலருக்கு வெறும் வார்த்தையாகவே உள்ளது. பொறுமை என்பது இறைவனிடத்தில் இருந்து வருகின்ற ஓர் அருள் (ரஹ்மத்) ஆகும். பொறுமைக்கெதிரான குணங்கள் "உணர்ச்சிவசப்படுதல்" அல்லது "கோபம் கொள்ளுதல்" என்பதை நன்கு அறிந்திருந்தாலும், நடைமுறையில் இவற்றிற்கே பலர் அடிமையாக உள்ளனர்.
மனிதனுக்கு ஏற்படும் பல துன்பங்களுக்கு மூல காரணம் இக்கோபம் தான். இன்று உலகெங்கிலும் நடக்கும் அநியாய சண்டை, சச்சரவுகள் மற்றும் பேரிழப்புகளுக்குக் காரணம் இக்கோபமே!
காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்! ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை) எனும் அல்குர்ஆனின் (103:1-3) திருவசனத்தின் மூலம் இறைவன் உணர்த்தும் விஷயம் என்னவென்று நாம் சிந்தித்ததுண்டா?
இறைநம்பிக்கையுடன் நற்காரியங்களைச் செய்வது, சத்தியத்தைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் நல் உபதேசம் செய்வது ஆகிய குணங்களை இறைவன் இவ்வசனத்தின் மூலம் உணர்த்துகின்றான்.
இவ்வுலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு மனிதன் மேற்கண்ட இவற்றைச் சரியான முறையில் கடைபிடித்தால் ஏற்படும் உலக அமைதிக்கான அடிப்படை விதிகளை இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டு கூறுகிறான். அத்துடன், இம்மை, மறுமை எனப்படும் ஈருலகிலும் நஷ்டங்களைத் தவிர்க்கும் சிறந்த வழிகளையும் தெளிவுபடுத்துகிறான்.
நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான் (சஹீஹ் புஹாரி, முஸ்லிம்) என்பதை அறிவித்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கோபத்தைத் தடுக்க இறைவனிடத்தில் பாதுகாப்புத் தேடும் முறையையும் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு" என்பது தமிழ் மக்களிடையே வழக்கில் உள்ள சொல்லாகும். கோபத்தால் புத்தி பேதலித்து சிந்திக்காமல் செயல்படுவதனால் வரும் பின் விளைவுகள் வருத்தங்களாக, இழப்புகளாக முடிவதைக் காண்கிறோம்.
உதாரணமாக ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்துத் தவறாக எண்ணத்துடன் உணர்ச்சி வசப்படுவானாயின் பின் விளைவுகளைப் பற்றி அக்கணத்தில் சிந்திக்காமல் பலாத்காரத்திற்குத் துணிந்து விடுகிறான். தேர்விலோ, அல்லது வேலை வாய்ப்புகளிலோ தோல்வியைத் தழுவும் ஒருவன் தவறுகளுக்கான காரணங்களைச் சிந்திக்காததினால் தற்கொலைக்குச் சென்று விடுவதைக் காண்கிறோம்.ஏன் இவ்வாறு நடக்கின்றது என்று உள்மனம் எழுப்பும் கேள்விகளுக்கு விடையில்லாமல் இல்லை. ஏனெனில், அறிவுள்ள சிந்தனைக்குத் தடை விதித்து கட்டுப்பாடற்று உணர்ச்சி வசப்படவைக்கும் ஷைத்தானின் ஆட்சி மனிதனின் மனதிற்குள் நடந்து கொண்டிருக்கிறது. அலைபாயும் மனதினைக் கட்டுப்படுத்த உணர்வலைகள் அடங்கி அறிவு மேலோங்கும் ஒரு நிமிட நேரம் போதும். அதன் பின் தவறு இழைக்க எண்ணும் மனிதனின் மனதிற்குக் கடிவாளம் கிடைத்துவிடும்.


கோபத்தைத் தணிக்க உங்களில் ஒருவருக்கு தான் நின்று கொண்டிருக்கும் போது கோபம் ஏற்பட்டால் உடனே அமர்ந்து விடுவீராக: இன்னமும் கோபம் அவரை விட்டு நீங்கவில்லை எனில் அவர் படுத்துக் கொள்ளட்டும்! - அபூதர்(ரலி) நூல்: திர்மிதி என இறைத்தூதர் கூறிவிட்டுச் சென்றிருப்பதை நினைவு கூர்வோம்.
கோபம் என்பது இறைவன் மனிதனுக்களித்த பண்புகளில் ஒன்றாக இருப்பினும், அக்கோபம் கடுமையான நோயாக மாறி விளைவுகளை விபரீதப்படுத்துவதிலிருந்து தவிர்க்க பொறுமை என்ற மருந்தைக் கொண்டு தீர்க்க வேண்டும். சகிப்புத்தன்மைக்கு மற்ற பெயரான பொறுமையை நாம், நம் குடும்பத்தினரிடமிருந்து துவங்கி பழகிய பின்பு சமுதாய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.


எவனொருவன் (தன் வாழ்வில்) துன்பங்கள் நேரிடும்போது அதைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறானோ, அவனுக்கு அல்லாஹ் சகிப்புத் தன்மையை வழங்கி விடுகிறான். (துன்பங்களைச்) சகித்துக் கொள்ளும் தன்மையை விட சிறந்த ஒரு அருட்கொடையை எவரும் பெற்றதில்லை. அபூசையித் அல் குத்ரீ (ரலி) புஹாரி, முஸ்லிம்
பொறுமையுடன் சகித்துக் கொள்வது இறைவனின் அருட்கொடை என்றால் அதனைப்பெற நாம் முயற்சிக்கவேண்டாமா? கோபத்தை மனிதனுக்கு அளித்த இறைவனே அதனை முறியடிக்கும் மருந்தான பொறுமை பற்றியும் கூறுகிறான்.
2:153 நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.
3:134 (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:200 முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
11:11 ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.
11:115 (நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
மேலும் அல் குர் ஆனில் பொறுமையின் அவசியத்தை விவரிக்கும் மேலும் ஏராளமான இறைவார்த்தைகள் காணக்கிடைக்கின்றன. (பார்க்க: 2:45, 2:155, 2:156, 2:177, 2:249, 3:17, 3:120, 3:125, 3:142, 3:146, 3:186, 3:200, 4:25, 7:87, 7:126, 7:128, 8:46, 8:65, 8:66, 10:109, 11:11, 12:18, 12:83, 13:22, 13:24, 16:42, 16:96, 16:110, 16:126, 16:127, 17:44, 18:28, 18:68, 19:65, 20:132, 22:35, 23:111, 25:75, 28:54, 29:59, 30:60, 32:24, 33:35, 38:17, 40:55, 40:77,41:35, 42:33, 46:35, 50:39, 54:27, 70:5, 74:7, 76:12, 76:24, 90:17)
எத்தகைய சூழலையும் பொறுமையோடு சிந்தித்து செயல்பட்டால் வெற்றியைத் தான் தருவதாக இறைவன் வாக்களிக்கிறான். ஆதலால், இறைவா! நாம் அனிச்சையாய் கோபப்படும் சமயத்தில் கூட ஷைத்தானை விரட்டியடித்து நீ கூறிய அருட்கொடையாம் பொறுமையை எனக்குத் தந்தருள்வாயாக என்று நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம். அதற்கான பலன்களை ஈருலகத்திலும் அடைவோம்!


நன்றி : ஷர்புத்தீன் உமரி .

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ. தையுபா அஜ்மல் .

No comments:

Post a Comment