Wednesday 3 August 2016

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை மற்றும் வேலைவாய்ப்பு !!

உலக மக்கள் தொகையில் சுமார் 10 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றனர். இவர்களில் 80% பேர் ஆசியக் கண்டதைச் சேர்ந்தவர்கள். இதில் 90% மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை என்றும் 80% பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் கல்விநிலை மிகவும் மோசமாக உள்ளது. படிப்பதற்கான ஆர்வமும் உத்வேகமும் இருந்தபோதிலும், இவர்களுக்கு படிப்பதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தித் தருவதில்லை. இதனால், இவர்களில் பெரும்பாலானோர் கல்வியறிவு பெறாமல் இருக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி நிலையங்களில் முறையான கழிப்பிட வசதிகள் இல்லாததும், படிகள் ஏறுவதற்கான சரிவுப் பாதைகள் அமைக்காததும், சைகை மூலம் விளக்கும் ஆசிரியர்கள் குறைபாடு என இவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதால் இவர்களும் ஒரு காலகட்டத்துக்குப் பிறகு பள்ளி செல்வதை தவிர்த்து விடுகின்றனர். மேலும் தமிழகத்தில் 39.3% மாற்றுத்திறனாளிகள் கல்வியறிவு பெறாமல் இருக்கின்றனர்.

இந்தியாவில் 2.68 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில், 1 கோடியே 26 லட்சம் ஆண்களும், 93 லட்சம் பெண்களும் உள்ளனர். அதிக மாற்றுத்திறனாளிகள் கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் (3.6 மில்லியன்) உள்ளது. பீகார் (1.9 மில்லியன்), மேற்கு வங்கம் (1.8 மில்லியன்), தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் (1.6 மில்லியன்) உள்ளனர். இதில் 1.46 கோடி கல்வியறிவு பெறாதவர்களும், 12.26 லட்ச பட்டதாரிகளும் உள்ளனர். இதில், 69.49% பேர் கிராமப்புறங்களில் வசிப்பவர்களாக உள்ளனர். இந்த 68% மாற்றுத்திறனாளிகள் எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் சதவிகிதம் வெறும் 48.88% மட்டுமே உள்ளது.

இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வெறும் 50% மட்டுமே கல்வி கற்றவர்களாக உள்ளனர். மாற்றுத்திறனாளிகளிடம் கல்வியறிவின் நிலை கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் உயர்ந்தாலும் அதனளவு வெறும் 5.2% மட்டுமே உயர்ந்துள்ளது. கல்வியறிவு பெற்றவர்களில் பெரும்பான்மையானோர் நடுத்தர பள்ளி வரை மட்டுமே கல்வி பெற்றுள்ளனர். ஆனால், 2011 சென்சஸ் கணக்கெடுப்பில், இந்தியாவில் 74% மக்கள் கல்வி கற்றவர்களாக இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதைப் பார்க்கும்போது அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வித் துறையில் போதிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது தெரிகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 11,79,968 பேர் உள்ளனர். இதில், ஆண்கள் 6,57,418 மற்றும் பெண்கள் 5,22,545 பேர் உள்ளனர். நடக்க முடியாதோர் 2,87,241, காது கேளாதோர் 2,20,241, பார்வையற்றவர்கள் எண்ணிக்கை 1,27,405 பேரும், வாய் பேசமுடியாதோர் 80,077, மனநிலை குன்றியோர் 17,707 பேர் உள்ளனர். இதில், கிராமப்புறங்களில் 6,21,745, நகர்ப்புறங்களில் 5,58,218 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

நகர்ப்புறங்களில் மாற்றுத்திறனாளிகள் கல்வியைத் தொடர மறுப்பதற்கான முக்கியக் காரணம், பள்ளி நிலையங்களில் அவர்களுக்கான போதிய வசதிகள் இல்லாததே என்று தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் கவனிப்பு அங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் தெரிவித்தார்.

“பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதோருக்கான பள்ளிகள் மிகக் குறைவாக உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் இவர்களைச் சுமையாகப் பார்க்கிறார்கள். எனவே, இவர்கள் தங்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை தவிர்க்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர் தங்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விரும்பாததால், பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதோருக்கான பள்ளிகள் மிகவும் குறைவாக உள்ளன. மேலும், அநேக பள்ளிகளில் சைகை மொழியில் விளக்குவதற்கான ஆசிரியர்கள் இருப்பதில்லை. இதனால், இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். தமிழகம் போன்ற தொழிற்துறையில் முன்னேறிய மாநிலங்களில்கூட வெறும் 11 சிறப்புப் பள்ளிகள் மட்டுமே இருக்கின்றன. அதுவும் நகர்ப்புறங்களில்தான் அதிகமாக உள்ளன. பின்தங்கிய மாநிலங்களில் இந்த நிலை மிக மோசமாக உள்ளது” என்றார் நம்புராஜன்.

மேலும், தமிழகத்தில் கல்வியறிவு பெற்ற மாற்றுத்திறனாளிகளின் திறன்களை வளர்க்கவும், சுயதொழில் தொடங்கவும் பயிற்சி அளிப்பதற்கான வலுவான கூட்டமைப்பு தேவை. அதன்மூலம் வருமானத்தை பெருக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும். தேசிய திறன் வளர்ச்சி மேப்பட்டுக் கழகத்தின் திட்டத்தின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி, தொழில் மேம்பாட்டு மையம் மாவட்டம்வாரியாக அமைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள்:
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான சட்டம் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கத் தலைவி ஜான்சிராணி கூறுகையில், “தமிழகத்தில், 2011இல் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை, 22 லட்சம் என தமிழக அரசு அறிவித்தது. 2014இல் 16 லட்சம் என தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான கணக்கெடுப்பு, புள்ளி விவரம், ஆவணம் எதுவும் வெளியிடப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை 22 லட்சமாக இருந்தது. 16 லட்சமாகக் குறைய வாய்ப்பில்லை.

எதனடிப்படையில் இந்த எண்ணிக்கை குறைந்தது என அதற்கான காரணங்களை அரசு அறிவிக்கவில்லை. தமிழகத்தில், 30 லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். பல ஆண்டாகக் கோரியும், மாற்றுத்திறனாளிக்கு பராமரிப்புத் தொகையாக ரூபாய் 1,000 வழங்க அரசு முன்வரவில்லை.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 40 சதவிகிதம் ஊனம் இருந்தாலே, மாற்றுத்திறனாளிக்கான சான்று அளிக்கப்பட்டு, நிதியுதவி சலுகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 60 சதவிகிதம் தொடங்கி அதற்கும் அதிகமான ஊனம் இருந்தால் மட்டுமே, மாற்றுத்திறனாளி அங்கீகாரம் வழங்கப்பட்டு நல உதவி பெறும் நிலை உள்ளது.

அத்துடன், அந்தக் குடும்பத்தின் சொத்து ரூபாய் 5,000-க்கு மேல் இருக்கக்கூடாது. அக்குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் இருக்கக் கூடாது. ஆண்டு வருவாய் ரூபாய் 24 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். குறிப்பாக, வறுமைகோட்டுக்குக்கீழ் 35 கிலோ இலவச அரிசி பெறும் திட்டத்தில் சேர மாற்றுத்திறனாளிக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அவ்வாறு சேரும் மாற்றுத்திறனாளிக்கு சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட இதர ரேஷன் பொருட்கள் வழங்குவது கிடையாது. இங்கு, மாற்றுத்திறனாளிக்கு எதிரான சட்ட விதிமுறை கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிக்கான மூன்று சதவிகித இடஒதுக்கீடு வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. நீதிமன்றத்தின் மூலமே பெற வேண்டியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னை மற்றும் குறைகளைக் களையவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். மாநில அளவில், அமைச்சர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும். இதுவரை, மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்தாமல், அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. எந்த ஒரு பிரச்னையும் இதுவரை தீர்க்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனமும், உலக வங்கியும் இணைந்து, 2012இல், ஊனமுற்றோர் குறித்து, வெளியிட்ட முதல் உலக அறிக்கையில், உலக மொத்த மக்கள்தொகையில், 15 சதவிகிதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

இதில், இந்தியா போன்ற ஏழ்மை நாடுகளில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. சமீபத்தில், மத்திய அரசின் சமூக நிதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை நாடு முழுவதும் 39 சதவிகிதம் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே, தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி பார்த்தால் தமிழகத்தில், 50 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நிலை, ஏழு பிரிவாக உள்ளன. மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, மாற்றுத்திறனாளிகள் அளவீடு குறித்த பயிற்சியளிப்பது கிடையாது.

இதனால், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் முழுமையான எண்ணிக்கையைக் கண்டறிய முடியவில்லை’’ என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு !!

இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நிலை பற்றித் தெரிந்து கொள்ள கல்லூரிகளில் படித்துவரும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் உங்களின் தேவை என்ன, அரசிடமிருந்தோ அல்லது இந்த சமூகத்திடமிருந்தோ நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்ட போது அவர்கள் கூரியதாவது, எங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக அரசு பல சலுகைகளையும், வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க இட ஒதுக்கீடும் அளிக்க வேண்டும்.

 குறிப்பாக, தமிழக அரசு பணியாளர்  தேர்வாணையத்தில்(TNPSC)மற்றுத்திறனாளிகளுக்காக 3 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடஒதுக்கீடும் இதுவரை சரிவர பின்பற்றப்படவில்லை. அந்த 3 சதவிகித இடஒதுக்கீட்டை முறைப்படுத்தி மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் டெட்(TET) தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்காக மற்ற மாநிலங்கள் பின்பற்றும் 60 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என்ற சிறப்பு சலுகையை தமிழக அரசும் அளிக்க வேண்டும். இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவித சலுகையும் செய்யப்படாததால், பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதனால் அரசு கருணை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

டெட்(TET) தேர்வில் 60 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண் என்ற சிறப்புச் சலுகை கேட்டதற்கு அரசு ஊடகங்களின் வாயிலாக தெரிவித்ததாவது, மாற்றுத்திறனாளிகளுக்கு 60 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண் என்ற சலுகை அளிக்க வாய்ப்பில்லை, 70 அல்லது 80 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண் அளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், மேலும் டெட்(TET) தேர்வு எழுத விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்ச்சியுடன் கூடிய தனித்தேர்வு நடத்துவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.   

ஆனால் இதுவரை அரசின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகையோ அல்லது பயிற்சியுடன் கூடிய தனித் தேர்வு நடத்த அதிகாரப்பூர்வ அரசாணையோ எதுவும் அரசால் வெளியிடப்படவில்லை.மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகள் குறித்து அரசு அதிகாரிகள் முழுமையாக புரிந்துகொள்வதில்லை. அதனால்தான் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் எதுவும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஒருவரின் பிரச்னைகளை நேர்மையாகவும் உண்மையாகவும் புரிந்துகொள்ளாமல் அதற்கு எப்படி தீர்வு காணமுடியும்? மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை எப்போது புரிந்துகொள்ளப் போகிறது அரசு?

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment