Saturday 20 August 2016

நாட்டு நாய்களே நமக்கேற்ற நாய்கள் !!

ஷிரின் மெர்ச்சன்ட், - நாய்களுக்குப் பிரியமானவர். நாய்களை நேசிப்பவர். இதுவரை 3000க்கும் மேற்பட்ட நாய்களைக் கையாண்டு வெவ்வேறு வகைகளில் பயிற்சி கொடுத்தவர். இந்தியாவிலுள்ள நாய்களுக்கான வெகுசில பெண் பயிற்சியாளர்களில் இவருக்கே முதலிடம்.

சமீபத்தில் சென்னையில் ‘திங்க் டாக்’ என்னும் நிகழ்ச்சியை நடத்த வந்திருந்தவரிடம், நாய்களைப் பற்றியும், நாய்களுடனான அவரது உறவைப் பற்றியும் உரையாடியதிலிருந்து...
‘‘ஷிரின், டாக் ட்ரெயினர் ஆனது எப்படி?’’

‘‘எங்கள் வீட்டில் பெட் டாக் வளர்த்தோம். அதுதான் நாய்களுடனான என் பிரியத்திற்கு அடிப்படை. 1995ல் உலகப் புகழ்பெற்ற நாய்ப் பயிற்சியாளர் ஜான் ரோஜார்சனை சந்தித்தேன். நாய்கள் மீதான என் ஈடுபாட்டைக் கண்டு அவர் என்னை நாய்களைப் பற்றி மேலும் படிக்க இங்கிலாந்து அழைத்தார். பயிற்சி முடித்து வந்தபோது, மிகவும் மனநிறைவாக இருந்தது. உரிமையாளர்களுக்கு, நாய் வளர்ப்பைக் கற்றுக் கொடுக்கும் டாக் டிரெயினராக பணியாற்றத் தொடங்கினேன்.’’ 


‘‘நாய்களைப் பயிற்சிப்படுத்தும் முறை பற்றிக் கூற முடியுமா?’’


‘‘நாய்களுக்கும், அதன் பயிற்சியாளர்களுக்குமான உறவு ‘டெலிபதி’ மூலம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று கருதிய மக்கள் கடந்த சில வருடங்களாகத்தான் அது அறிவியல் சார்ந்தது என உணர ஆரம்பித்திருக்கிறார்கள். நாயின் பயிற்சியாளர் நாயின் குணநலன்களையும், பழக்க வழக்கங்களையும், சுற்றுப்புறத்தையும் ஆராய்ச்சி செய்த பின்னரே அதை முழுமையாகப் பயிற்றுவிக்க முடியும். ஆரம்பத்தில் நாயைப் பார்த்துக் கத்த வேண்டும், பேச வேண்டும். ஒரு பந்தம் உருவான பின், நம் சத்தம்தான் அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்பதில்லை; நம் கண்கள், விரல் அசைவுகளைக் கூட அது புரிந்துகொள்ளும். இன்றைய தொழில்நுட்ப உலகில் பல்வேறு முறைகளைக் கொண்டு நாய்களுக்கு பயிற்சி கொடுக்கலாம்.’’
‘‘ஒரு லேடி டாக் டிரெயினராக, இத்துறை தந்த அனுபவம்?’’

‘‘20 வருடங்களுக்கு முன் நாய் பயிற்சியாளராகப் நான் பணியைத் தொடங்கியபோது, ஆண்களால் மட்டுமே இதைச் செய்திட முடியும் என்ற எண்ணத்தை மாற்றிக் காட்டினேன். முன்பிருந்ததைக் காட்டிலும் இப்போது பல பெண் பயிற்சியாளர்கள் இத்துறையில் வெற்றி நடை போட்டு வருவதைக் காணும்போது, பெருமையாக இருக்கிறது. பெண்களுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆற்றல் அதிகம் உள்ளதால், இந்த வேலை ஆண்களைவிட பெண்களுக்கு எளிமையானது.’’

“ ‘திங்க் டாக்’ நிகழ்ச்சியின் குறிக்கோள்?’’


‘‘நாய் உரிமையாளராக இருந்தும் நாய்களைப் பற்றி சரிவரத் தெரியாதவர்களுக்கு அந்நாயின் குணங்களையும், பழக்கவழக்கங்களையும் இன்னும் தெளிவாக கற்பிப்பதே இதன் நோக்கம். இதன் மூலம் அவர்கள் தங்கள் நாயைப் பற்றி நன்கு அறிந்து கொள்வதுடன், அதற்கு பயிற்சி அளிப்பது எவ்வளவு உற்சாகமான விஷயம் என்பதையும் அறிந்து கொள்ளலாம். சென்ற வருடம் இந்நிகழ்ச்சியை முதன் முதலில் இந்தியாவில் ஐந்து நகரங்களில் நடத்தினோம். இப்போது 23 நகரங்களில் நடத்திக்கொண்டிருக்கிறோம். அந்தளவுக்கு வரவேற்பு பெருகியுள்ளது.’’
‘‘ஏதேனும் சுவாரஸ்ய அனுபவம்..?’’

‘‘ஒரு நாய் தன் உரிமையாளரின் தலையணையில் அவர் வீட்டில் இல்லாத நேரங்களில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அந்த உரிமையாளர் அந்நாயை தனியாக விட்டுச் சென்றதன் காரணமாக கோபத்தில் இப்படி செய்திருக்கலாம் என நினைத்தார். ஆனால் நாங்கள் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அந்த நாய்க்கு உரிமையாளரின் மேலுள்ள நிலை கொள்ளாத பிரியம் காரணமாக அவரை விட்டுப் பிரிந்திருக்க முடியாது தவித்ததும், பின் அவர் வாசனை அதிகமுள்ள தலையணையின் மீது சிறுநீர் கழித்ததும் தெரிய வந்தது. அந்த உரிமையாளருக்கு அவர் அந்த நாயை விட்டுப் பிரியும் சமயங்களில், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அந்நாய்க்குப் பழக்குமாறு ஆலோசனை கொடுத்து சில யுத்திகளையும் கையாளச் சொன்னோம். அதன் பிறகு, அந்த நாய் அவர் தலையணையில் சிறுநீர் கழிக்கவில்லை!’’ 


‘‘இந்தியாவின் சீதோஷண நிலைக்கு வளர்க்க ஏற்ற நாய் ரகம் எது?’’


‘‘ ‘ஸ்டேட்டஸ்’ வேண்டி பலரும் வெளிநாட்டு நாய் ரகங்களையே வளர்க்க விரும்புகின்றனர். ஆனால், உண்மையில் நம் நாட்டு நாய்களே நல்ல ரகங்கள்தான். அதைப் பழக்கப்படுத்துவதும், புரிந்துகொள்வதும் எளிது என்பதுடன், குறைந்த உடல்நிலைக் குறைபாடுகள் கொண்டவையாகவும் இருக்கும். நம் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற நாய் வகையும் அவையே!’’

No comments:

Post a Comment