Monday 1 August 2016

வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விலை வீட்சியால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலை இழப்பு !! ஒரு சிறப்பு பார்வை...

சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீபகாலமாக பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது.வளைகுடா இந்தியர்களின் நிலைமை நாளுக்கு நாள் மிக மோசமாகிக்கொண்டு வருகிறது,வேலை இழப்பு,சம்பளம் இல்லை,முடித்துக்கொண்டு இந்தியா செல்லலாம் என்றாலும் கணக்கு முடிக்காமல் கம்பனி இழுத்தடிப்பது என்று பிரச்சனை பூதாகரமாக சென்று கொண்டிருக்கிறது, நிறைய இந்தியர்கள் வேலை இழந்து இந்தியா வர முடியாமல்,பட்டினியால் வாடுகிறார்கள் என்ற செய்தி மிகக்கொடுமை,இந்த நிலையில் தான் சுஷ்மா சிவராஜ் அவர்கள் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தங்களது இந்திய சகோதர சகோதரிகளுக்கு உதவுங்கள் என்று அவரின் ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்,பல கம்பெனிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன,பல கம்பெனிகளில் ஆட்குறைப்பு,சம்பள பாக்கி என பிரச்சனையின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது,இந்த பிரச்சனை முடிவுக்கு வர வேண்டும் என்றால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வேண்டும்,கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க சில மாதம் அல்லது சில வருடங்கள் ஆகலாம்,அது வரை வளைகுடா நாட்டு இந்தியர்களுக்கு மறுவாழ்வளிக்க இந்திய அரசாங்கமும், அந்தந்த மாநில அரசாங்கமும் போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும்,அந்நிய செலாவணி ஈட்டி தரும் வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களை காப்பாற்ற, உதவி செய்ய அனைவரும் முன் வரவேண்டும்...சவுதி அரேபியாவில் வேலை இழந்ததால் உணவு இல்லாமல் தவித்து வரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

சவுதி அரேபியா


சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியற்றி வருகின்றனர். எண்ணெய் வளமிக்க இந்த நாடுகளில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் போன்றவற்றில் தொழிலாளர்களாக இவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இதில் அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் மட்டும் 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதைப்போல குவைத், கத்தார், ஓமன் போன்ற நாடுகளிலும் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதார வீழ்ச்சி

இந்த வளைகுடா நாடுகளின் வளர்ச்சிக்கு மூலகாரணமே எண்ணெய் வளம்தான். கச்சா எண்ணெயின் விலை மதிப்பை வைத்தே இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது.

சமீபகாலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் பாதிப்படைந்து வருகிறது. அதிலும் சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.


வேலை இழப்பு

இதனால் இந்த நாடுகளில் இயங்கி வரும் மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிறுவனங்கள் தற்போது படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

இவ்வாறு வேலையும், சம்பளத்தையும் இழந்த இந்தியர்கள் கடந்த பல நாட்களாக பசி, பட்டினியில் வாடி வருகின்றனர். கையில் பணம் இல்லாததால் நாடு திரும்ப முடியாமல் கடும் இன்னலில் சிக்கி உள்ளனர்.

முகாம்களில் தஞ்சம்

இவ்வாறு மூடப்பட்ட நிறுவனங்களில், மிகவும் வெற்றிகரமாக இயங்கி வந்த ‘சவுதி ஓஜர்’ என்ற நிறுவனமும் ஒன்று. இதன் சவுதி அரேபியா கிளையில் மட்டுமே 50 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். லெபனான் நாட்டு நிறுவனமான இதில் பணியாற்றி வந்த 800–க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்போது வேலையிழந்து பட்டினியால் வாடுகின்றனர்.

இவர்கள் அல்–சுமைசியில் அமைக்கப்பட்டு உள்ள முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதைப்போல வேறு சில கம்பெனிகளில் பணியாற்றி வேலையிழந்த இந்தியர்களுக்காக சிஸ்டன், சோஜெக்ஸ், ஹைவே, தைப் ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன
.

வெளியுறவுத்துறை நடவடிக்கை

இந்த முகாம்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் கடந்த பல நாட்களாக உணவின்றி பட்டினி கிடப்பதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. சில முகாம்களில் கம்பெனி நிர்வாகத்தால் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெறுவதும் தெரியவந்தது.

பசி, பட்டினியால் வாடி வரும் இவர்களுக்கு உதவுவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனே களத்தில் இறங்கியது. இது தொடர்பாக சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணை தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்ட வெளியுறவுத்துறை அதிகாரிகள், பட்டினியால் வாடும் இந்தியர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.16 ஆயிரம் கிலோ உணவுகள்

இதைத்தொடர்ந்து தூதரக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை தொடங்கினர். இந்திய தொழிலாளர்கள் தங்கியுள்ள 5 முகாம்களுக்கும் சென்ற அவர்கள் கடந்த 4 நாட்களாக 16 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான உணவு பொருட்களை அவர்களுக்கு வழங்கினர். இந்திய தூதரகம் சார்பிலும், அங்கு வாழும் இந்தியர்கள் சார்பிலும் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த பணிகள் அனைத்தும் நேற்று அதிகாலை 2.40 மணியளவில் வெற்றிகரமாக முடிவடைந்ததாக ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது. இதை மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் மறுடுவிட் செய்திருந்தார்.சுஷ்மா சுவராஜ் தகவல்

முன்னதாக சவுதி அரேபியாவில் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் தளத்தில் தொடர்ச்சியாக பல தகவல்களை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியிருந்ததாவது:–

சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் பணி மற்றும் சம்பளம் தொடர்பாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். இந்த நாடுகளில் பணியாற்றி வந்த ஏராளமான இந்தியர்கள் தங்கள் வேலையை இழந்தும், சம்பளம் கிடைக்காமலும் வாடுகிறார்கள்.10 ஆயிரம் இந்தியர்கள்

இதில் குவைத் நாட்டு இந்தியர்களின் நிலைமை ஓரளவு சமாளிக்கக்கூடியதாக இருந்தாலும், சவுதி அரேபியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வேலை இழந்து பட்டினியால் வாடுகின்றனர்.

அவர்களுக்கு உணவு அளிப்பதற்கு அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி அவர்களும் உணவளித்து வருகிறார்கள். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு உதவுமாறு சவுதியில் வாழும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் கூட்டு விருப்பத்தை விட வலிமையானது எதுவும் இல்லை.வி.கே.சிங் பயணம்

வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் விரைவில் சவுதி அரேபியா சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன், அங்கு வேலை இழந்த இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். இதைப்போல மந்திரி எம்.ஜே.அக்பரும் இந்த பிரச்சினை குறித்த சவுதி மற்றும் குவைத் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
இந்தியா திரும்ப ஏற்பாடு

இந்த நிலையில் சவுதியில் வேலை இழந்து வாடும் இந்தியர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்காக அடுத்த சில நாட்களில் விமானங்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


அங்கு வேலை இழந்த எந்த இந்தியரும் உணவின்றி விடப்படமாட்டார் என்று
சுஷ்மா சுவராஜ் கூறி இருந்தார்.குறிப்பாக விரைவில் தொடங்க இருக்கும் ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவுக்கு புனித பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் திரும்பி வரும்போது பெரும்பாலும் காலியாகவே வரும். அவ்வாறு வரும் விமானங்களில் இந்த தொழிலாளர்களை ஏற்றிவர மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment