Friday 11 December 2015

தமிழகத்தில் வெள்ள அபாயத்தை தவிர்க்க வடிகால் திட்ட கட்டிடம் வேண்டும்!! ஒரு சமூக பார்வை..

பருவமழையினால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இயற்கை நீர்நிலைகள் உள்ள பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்ததாலும், வெள்ளநீர் வடிவதற்கான திட்டங்களை சரிவர வகுக்காமல் இருந்ததாலும் வெள்ளத்தின் பாதிப்பு மக்களை மிகவும் கடுமையாக பாதித்து உள்ளது.  

நிரந்தர தீர்வு
கடலோர பகுதிகளில் வெள்ளம் வடிவதற்கான வழித்தடங்கள் அற்ற நிலையில் அழிவுகள் பெரிதும் ஏற்பட்டன. இது தவிர வெள்ளம் வடியாத பகுதிகளில் பரவிவரும் நோய்களும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவற்றுக்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியமாகிறது.இதற்கு காரணம் இன்றைய தேவைக்கேற்ப நீர்நிலைகளை சரிவர திட்டமிடாததும், பராமரிக்காததும் ஆகும்.பொது சுகாதாரம், வெள்ள அபாயம், சாலை நெருக்கடியினால் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதில் கவனமும், அவற்றை அகற்றுவதில் சமூக ஆர்வமும் காட்ட வேண்டும். காலியிடங்களில் காய்கறி, மூலிகைத் தோட்டம் அமைக்க வேண்டும். தெருக்கள் தோறும் மரங்களால் அழகுபடுத்த வேண்டும். குப்பைகளை அந்தந்த பகுதி குப்பை தொட்டிகளில் கொட்ட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் ஓட்டல்கள், வணிக வளாகங்களின் பிளாஸ்டிக் பொருட்கள், திரவக்கழிவுகள், செப்டிக்டேங்க் கழிவுநீர் நேரடியாக மழைநீர் வடிகால்களுக்கு சென்று கலக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனவே, சுப்ரீம் கோர்ட்டு ஒரு நிபுணர் குழுவை நியமித்து வெள்ள நீர் வடிகால் பகுதிகளை விஞ்ஞானபூர்வமாக திட்டமிட்டு, வரும் காலத்தில் இதுபோன்ற வெள்ள அபாயங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நமக்கு ஜப்பான் நாடு வடிகால் திட்ட கட்டிடம் ஒரு வழிகாட்டிய உள்ளது. அவற்றை பற்றி இங்கு பறப்போமே !!

ஜப்பான் நாட்டில் வெள்ளபெருக்குவடிகால் திட்டம் !!

ஜப்பான் நாட்டில் வெள்ளபெருக்கு மேலாண்மை திட்டத்தில் மாநகர எல்லையில் மிகப்பெரிய வடிகால் அமைப்பு ஒன்றை வடிவமைத்துள்ளார்கள். 1992 ல் கட்ட ஆரம்பிக்கபட்ட இந்த மாபெரும் வடிகால் திட்ட கட்டிடம் 2009 ல் தான் முடித்துள்ளார்கள்.

மூன்று மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்துவிட்டது என்று நம்ம ஊரு ஆட்சியாளர்களைப் போல சாக்கு சொல்லாமல்,200 ஆண்டுக்கு ஒருமுறை வரும் மாபெரும் வெள்ளத்தையும் மனதில் கொண்டு அதை சமாளிக்கும் வகையில் இம்மாபெரும் வடிகால் அமைப்பை கட்டமைத்திருக்கிறார்கள்.

நம்ம ஊரில் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள சேதத்தை தவிர்க்க அதிமிகை நீரை யாருக்கும் பயன்படாமல் நாம் கடலில் கலக்கச் செய்கிறோம் ஆனால் ஜப்பானிலோ அந்த அதிமிகை நீரை இந்த வெள்ளப் பெருக்கு மேலாண்மை திட்டத்தின் மூலம் சேமிக்கிறார்கள்.

பெரும் மழைக் காலங்களில் வெள்ள நீர் டோக்கியோ நகரை சேதப்படுத்தாமல் பாதுகாப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு நதிகளில் இருந்து வரும் வெள்ள நீரை பாதாள கால்வாய்கள் மூலம் உள்வாங்கி பின்பு வறட்சி காலங்களில் நதிக்கே திருப்பி அனுப்பும் இயற்கைக்கு உகந்த திட்டமாக இது அமைந்திருக்கிறது.








அணுஉலை,நியூட்ரினோ போன்ற மக்களுக்கு வேண்டாத திட்டங்களை எல்லாம் வெளிநாட்டில் இருந்து ரெப்ளிக்கா செய்யும் நம்ம ஊரு விஞ்ஞானிகள், இந்த நீர் மேலாண்மை திட்டம் போன்ற மக்களுக்கு பெரிதும் பயன்படக்கூடிய திட்டங்களை நடைமுறைப் படுத்தினால் நம் வருங்கால சந்ததி இயற்கையுடன் இயைந்து வளர்சியை நோக்கி பயணிக்கும்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment