Tuesday 18 August 2015

தமிழக கோயில்களில் திருடப்படும் தாமிரத்தால் ஆன கோபுர கலசங்களில் இரிடியம் !! ஒரு தவகல்..

தமிழகத்தின் பழைமைவாய்ந்த கோயில்களின் கோபுரங்களில் உள்ள தாமிரத்தால் ஆன கலசங்களில் இரிடியம் இருப்பதால், அவை திருடப்படுவதாகத் தெரிகிறது.

பிளாட்டினம் வகையைச் சேர்ந்த கனிமம் இரிடியம். இதன் சந்தை மதிப்பு ஒரு ட்ராய் அவுன்ஸ் (33.33 கிராம்) 450 அமெரிக்க டாலர். இந்திய ரூபாயில் சுமார் ரூ.20,700. ஒரு கிலோ எடை கொண்ட இரிடியம் ரூ.6.25 லட்சம் என்பது சர்வதேச சந்தையின் விலை நிலவரம்.

ஆனால், அதே ஒரு கிலோ இரிடியத்துக்கு கள்ளச் சந்தையில் கிடைக்கும் விலை சுமார் ரூ.50 லட்சத்துக்கும் மேல்.

இரிடியத்தை 4,471 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் மட்டுமே உருக்க முடியும். அவ்வளவு கடினமான வெப்பத்தையும் தாங்கும் திறன் இதற்கு உண்டு.

தொடக்கத்தில் பேனா முனைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது செயற்கைக் கோள்களின் வெளிப்புறத்தில் இந்த இரிடியம் கனிமம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், மருத்துவ உபகரணங்கள், எலக்ட்ரானிக் இயந்திரங்கள், போர் விமானங்களின் என்ஜின் பாகங்களில் கலப்பது எனப் பல்வேறு பயன்பாடுகளுக்கு இரிடியம் பயன்படுகிறது.

மேலும், 'தங்கத்தின் எடையில் 0.25 சதவீதம் கலந்தால், அது சுத்தமான 100 காரட் தங்கமாக மாறுகிறது; அதன் மூலம் தங்கத்திலும் மோசடி நடக்கிறது' என்கிறார்கள்.

1803-ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த ஸ்மித்சன் டென்னட் என்பவரால் இரிடியம் கண்டுபிடிக்கப்பட்டது. தென்அமெரிக்காவில் கிடைத்த பிளாட்டினம் வகைகளோடு இது கலந்திருப்பதை கண்டறிந்தார்.

இந்த இரிடியம் எளிதாக பூமியில் கிடைப்பதில்லை. பிளாட்டினம் கிடைத்தாலும், அதில் 1000-ல் ஒரு பங்கு மட்டுமே இரிடியம் கிடைக்கிறது. ஆண்டுக்கு 3 டன்கள் மட்டுமே இரிடியம் பூமியிலிருந்து எடுக்கப்படுகிறது. இதனால், கிடைப்பதற்கரிய இரிடியத்துக்கு கள்ளச் சந்தையில் அமோக வரவேற்பு இருக்கிறது. தாமிர கனிமத்திலிருந்தும் இந்த இரிடியம் கிடைக்கிறது. பல நூறு ஆண்டுகள் பழைமையான தாமிரத்தில், இரிடியம் கலந்திருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பழைமையான ரூபாய் நாணயங்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. நாணயங்களை உருக்கி, தாமிரத்தோடு கலந்திருந்த சிறிய அளவிலான இரிடியம் எடுக்கப்பட்டது. அதன்பிறகு, பண்டைய நாணயங்கள் சேகரிப்போரிடம் இருந்தும், நாணயங்கள் இரிடியம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விலைக்கு வாங்கப்பட்டிருக்கின்றன.

தற்போது, இரிடியத்தைத் தேடி அலைந்தவர்களுக்கு, தமிழகத்தில் இருக்கும் மிகப் பழைமையான கோபுரங்கள் இலக்காகியிருக்கின்றன.

அதன் விளைவு, பல இடங்களில் கோபுரங்களின் மீது இருக்கும், பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோபுர கலசங்கள் திருடுபோகத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாறு பழைமையான கலசம் திருடப்பட்டதும், புதிய கலசத்தை அங்கே பொருத்திவிடுகிறார்கள்.

ஒரு கலசம் 5 கிலோ முதல் 15 கிலோ வரை எடையிருக்கிறது. கோபுரத்தின் மீது கலசங்கள் வைக்கப்பட முக்கிய காரணம், இவை இடிகளைத் தாங்கும் திறன் கொண்டவை.

இதனால், கோபுரத்துக்கு எவ்விதத்திலும் சேதம் ஏற்படாது.

இதற்காக முன்னோர்கள் தாமிர இரிடியம் எனும் கலவை கனிமத்தை கலசங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இத்தனை பழைமையான தாமிர கலசங்களில், பல கிலோ எடைக்கு இரிடியம் கலந்திருக்கிறது.

இதனால், இத்தகைய கோபுர கலசங்களைக் கபளீகரம் செய்ய பெரிய கூட்டம் காத்திருக்கிறது. கோபுர கலசம் திருடிய கும்பல் கைது என்ற செய்தியையும் அண்மைக் காலங்களில் கேட்க முடிந்தது.

அழகு பொருள்களாக வீட்டில் வைத்திருக்கவோ, பண்டைய பொருள்களைச் சேகரிப்பவர்கள் வாங்கி வைக்கவோ அவை திருடப்படவில்லை.

தமிழக கோயில்களில் திருடப்படும் கலசங்கள், அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, இரிடியம் சோதனைக்கு உட்படுத்துகின்றனர். அதில் இருக்கும் இரிடியத்தின் சதவீதத்துக்கு ஏற்ப கலசத்துக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இவற்றை உருக்கும்போது, 361 டிகிரி பாரன்ஹீட்டுக்கு தாமிரம் பிரியும். அடுத்து 2,645 டிகிரி பாரன்ஹீட்டில் நிக்கல் பிரியும். மீதமிருப்பவை இரிடியம் மட்டுமே.

இவ்வாறு உருக்கப்பட்டு, சேகரிக்கப்படும் இரிடியம், உள்நாட்டு தேவைக்கும், வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டுகின்றனர். இதற்காக உள்ளூர் முதல் உலக அளவில் பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது.

கோடி, கோடியாய் பணம் கொழிக்கும் தொழிலாக தற்போது இரிடியம் கடத்தல் மாறியிருக்கிறது. பொறுப்பாளர்கள் நிர்வகிக்கும் கோயில்கள், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்கள் பலவற்றில் இருந்து பழைமையான கோபுர கலசங்கள் மாற்றப்பட்டு, புதியவை பொருத்தப்பட்டிருக்கின்றன.

அதேபோல, அரசியல் செல்வாக்கு மிகுந்தோரால் இந்த கலசங்கள் எளிதாக வெளியே கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.

செல்வாக்கு இல்லாதோர் மட்டுமே போலீஸில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களும், இது இரிடியத்துக்காக நடந்த கடத்தல் என்பதைப் பதிவு செய்யவில்லை.

பண்டைய புராதனச் சின்னமான கலசங்கள் ஓசையின்றி திருடுபோகின்றன. இதைத் தடுக்க வேண்டியது அவசியம்.

இவற்றைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இரிடியத்துக்காகத் திருடப்படுவது தொடர்ந்து நடைபெறும். புதிய கலசங்களை வைப்பதன் மூலம், புராதன பெருமை வாய்ந்த கோபுரங்கள் இடி தாக்கப்பட்டு, உடையும் அபாயம் காத்திருக்கிறது!

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல் .

No comments:

Post a Comment