Friday 20 February 2015

ரூ.10,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை தர்ம அறக்கட்டளைக்கு உயில் எழுதினார் ஐயா எம்.ஏ.எம். ராமசாமி அவர்கள்...!

தனது பெயரில் புதிதாக தர்ம அறக்கட்டளை ஒன்றை தொடங்கி இருக்கும் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி, தமக்குப் பிறகு தனது சொத்துகள் அனைத்தும் அந்த அறக்கட்டளைக்கு சேர வேண்டும் என முறைப்படி உயில் எழுதி இருக்கிறார்.
ஐயப்பன் என்ற முத்தையாவை சுவீகாரம் எடுத்ததை குல வழக்கப்படி கடந்த மாதம் ரத்து செய்தார் எம்.ஏ.எம். இதன் தொடர்ச்சியாக 'எம்.ஏ.எம்.ராமசாமி தர்ம அறக்கட்டளை' என்ற புதிய அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். இதன் நிர்வாக அறங்காவலரான எம்.ஏ.எம். ராமசாமி தனது அண்ணி குமார ராணி மீனா முத்தையா, ஏ.சி.முத்தையா உள்ளிட்ட மேலும் நான்கு அறங்காவலர்களையும் நியமித்திருக்கிறார்.

செட்டிநாடு குழுமம்:-
செட்டிநாடு குழும நிறுவனங்களின் கூட்டுஸ்தாபகரும், தலைவருமான எம்ஏஎம் ராமசாமி, அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் இணைவேந்தராகவும் உள்ளார். இவருக்கு வாரிசு இல்லாததால் ஐயப்பன் என்ற முத்தையாவை சுவீகாரம் எடுத்தார்.

வேந்தர் நியமனம்:-
இதனிடையே, செட்டிநாடு பல்கலைக்கழகத்தின் வேந்தரான எம்ஏஎம் ராமசாமியை நீக்கிவிட்டதோடு, அவருக்குப் பதிலாக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை வேந்தராக நியமித்தார் முத்தையா.
ரிட்மனு தாக்கல்:-
தனியார் பல்கலைக் கழகங்களின் வேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு விதித்த நிபந்தனைகளை எதிர்த்து ஏற்கனவே பல்கலைக் கழகங்கள் தரப்பிலிருந்து வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில், பல்கலைக்கழக மானியக் குழுவின் நிபந்தனைகளுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம், வேந்தர்கள் நியமனம் தொடர்பாக தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தடை உத்தரவு அமலில் இருக்கையில் வேந்தரை மாற்றியது செல்லாது என்று கூறி எம்ஏஎம் ராமசாமி, நேற்று நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

சுவீகாரம் ரத்து:-
முத்தையாவின் சுவீகாரத்தை குல வழக்கப்படி ரத்து செய்த எம்.ஏ.எம்., சட்டப்படியும் அதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதை ஊகித்திருக்கும் முத்தையா, அப்படி சட்டப்படி சுவீகாரத்தை ரத்து செய்வதாக நீதிமன்றத்தில் எம்.ஏ.எம். மனு தாக்கல் செய்தால் தன்னையும் விசாரிக்க வேண்டும் என தேவகோட்டை நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து வைத்திருக்கிறார்.

கைமாறும் பல்கலைக்கழகம்:-
இதனிடையே, செட்டிநாடு பல்கலைக்கழகத்தை கைமாற்றி விடப் போவதாக ஒரு நம்பகமான செய்தி கிடைத்ததால் சுதாரித்துக் கொண்ட எம்.ஏ.எம். அதிலுள்ள சட்டச் சிக்கல்களை எடுத்துச் சொல்லி யாரும் அதை வாங்கவிடாமல் பத்திரிகைகளில் பொது அறிவிப்பு கொடுத்துவிட்டார்.

தர்ம அறக்கட்டளை:-
இந்நிலையில், முத்தையாவை சுவீகாரம் எடுத்ததை குல வழக்கப்படி ரத்து செய்ததின் தொடர்ச்சியாக, 'எம்.ஏ.எம்.ராமசாமி தர்ம அறக்கட்டளை' என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். இதன் நிர்வாக அறங்காவலராக எம்.ஏ.எம்., தனது அண்ணி குமார ராணி மீனா முத்தையா, ஏ.சி.முத்தையா உள்ளிட்ட மேலும் நான்கு அறங்காவலர்களையும் நியமித்திருக்கிறார்.

ரு.10,000 கோடி சொத்துக்கள்:-
தனக்குச் சொந்தமான சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கான அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அனைத்தும் தனக்குப் பிறகு, தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள தர்ம அறக்கட்டளைக்கு சேரவேண்டும். அவை தர்ம காரியங்களுக்கு பயன்பட வேண்டும். இந்தச் சொத்துகளில் ஒரு ரூபாய்கூட ஐயப்பன் என்ற முத்தையாவுக்கோ அவரது தரப்புக்கோ செல்லக் கூடாது என்று உயில் எழுதி, அதை முறைப்படி பதிவும் செய்து இருக்கிறார் எம்ஏஎம் ராமசாமி. இந்த உயில் விவகாரம் அவரது குடும்பத்தினர் மத்தியிலும், செட்டி நாட்டு வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொகுப்பு மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment