Saturday 16 August 2014

நமது 'சிபில்' (Credit Information Bureau of India Limited) ஸ்கோர் பற்றிய சிறப்பு பார்வை !!

இந்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கடனாளர்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற காரணத்துக்காக, Credit Information Companies (Regulation) Act 2005 என்றொரு சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின் நற்பயனே சிபில். CIBIL – Credit Information Bureau of India Limited. பாரத ஸ்டேட் வங்கி (SBI), ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (HDFC), டன் & ப்ராட்ஸ்ட்ரீட் (Dun & Broadstreet) மற்றும் அமெரிக்காவின் ட்ராஸ்யூனியன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய நிறுவனம். இன்றைக்கு 16 கோடி இந்தியர்களின் கமர்ஷியல் ஜாதகம் சிபிலுக்குளே, இதில் நானும் நீங்களும் அடங்குவோம். ஈக்வி பேக்ஸ் இந்தியா (Equifax India), எக்ஸ்பீரியன் இந்தியா (Experian India), ஹைமார்க் கிரெடிட் ரேட்டிங் (Highmark Credit Rating) போன்ற நிறுவனங்களும் சிபில் மாதிரி இந்தியாவில் கிரெடிட் ஸ்கோர் விவரங்கள் தருகின்றன. இப்போதைக்கு நீங்கள் சந்திக்கும் வழக்கமான வங்கிகள் அனைத்தும் சிபில் ஸ்கோர் வைத்தே உங்களின் திருப்பித் தரும் தகுதியினை நிர்ணயிக்கின்றன.

இந்தியாவில் கடன் வாங்கியவர்களைப் பற்றிய விவரங்களைத் தன்னகத்தை வைத்திருக்கும் ஒரு அமைப்புதான் சிபில். சிபில் டேட்டாபேஸில் உங்களுடைய கடன், வங்கி, விலாசம், அடையாளத்துக்காக நீங்கள் தந்த தகவல்கள் – ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வாகன உரிமம் – எனப் பல்வேறு விஷயங்கள் இருக்கும். உங்களுக்கு கடன் கொடுத்த வங்கி சிபிலில் உறுப்பினராக இருந்தால், உங்களுடைய கமர்ஷியல் ஜாதகம் வங்கி வழியே சிபிலுக்குப் போய்விடும். 90 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் டேட்டா சிபிலின் மாஸ்டர் டேட்டாபேஸில் அப்டேட் ஆகும். சுருக்கமாக, சிபில் இந்தியாவின் கணக்குப்பிள்ளை. 

செக் பவுன்ஸ் ஆவது, தவணை ஒழுங்காகக் கட்டாமல் இருப்பது, தவணையே கட்டாமல் டிமிக்கி கொடுப்பது, வங்கியை மாற்றுவது, இன்னபிற டகால்டி வேலைகள் ஆகியவற்றைச் செய்தால், அவை உடனுக்குடன் வங்கி மூலமாக சிபிலுக்குப் போய்விடும். சிபிலில் இது வந்தவுடன், உங்களின் creditworthiness சில ப்ரோக்ராம்களின் மூலமாக நிர்ணயிக்கப்படும். இந்த ப்ரோக்ராம்கள் உங்களுடைய வங்கி விவரங்கள், கடன்களைத் திருப்பிச் செலுத்துதல், கிரெடிட் கார்டை முறையாகப் பயன்படுத்துதல், உங்களின் வருமானம் – இவற்றைக் கொண்டு ஒரு ஸ்கோரைத் தயார் செய்யும். இந்த ஸ்கோர்தான் ராஜாராமனுக்கும் நீரஜாவுக்கும் வில்லனாக வந்த ஸ்கோர். நம்மூரில் பரீட்சையில்கூட பிட் அடித்து பாஸ் பண்ணிவிடலாம். அப்படியே இல்லை என்றாலும், பேப்பர் சேஸ் செய்யலாம். ஆனால் துட்டு விஷயத்தில் நோ சானஸ்.
சிபிலுக்கெல்லாம் முன்னோடி அமெரிக்காவில் இருக்கும் ஃபிகோ (FICO) ரேட்டிங்ஸ். FICO – Fair Issac & Company. அமெரிக்காவில் கணிதம், வடிவமைக்கப்பட்ட அல்காரிதம்கள் ஆகியவற்றைக் கொண்டு 1956-ல் பில் பேர் & பேர் ஐசக் என்கிற இருவரால் உருவாக்கப்பட்ட ஒரு மாடல். இந்தியாவிலாவது இன்னமும் எல்லா வங்கிகளிலும் இது போகவில்லை. ஆனால் அமெரிக்காவில் கிரெடிட் ஸ்கோர் இல்லையென்றால் ‘சாலா பம்பிஸ்தானு’தான்.
படத்தில் போட்டிருக்கக்கூடிய வட்டம் வெறும் புள்ளிவிவரம் அல்ல. உங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கட்டம் இதுதான். கிளி ஜோஸ்யர் மாதிரி பம்மாத்து வேலைகள் இல்லை. முழுக்க முழுக்க அல்காரிதங்களும் அனலிடிக்ஸுமாக உங்களின் சமூகக் கடன் மதிப்பு இதிலிருந்துதான் வரும்.
35% – நீங்கள் பணத்தை எப்படித் திருப்பிக் கட்டுகிறீர்கள் என்பதில் அடங்கும்.
30% – நீங்கள் வாங்கிய கடன்கள்.
15% – உங்களின் கடன் வரலாறு.
10% – என்ன மாதிரியான கடன்கள் (கிரெடிட் கார்ட் கடன்கள் – மிகக் குறுகிய காலக் கடன்கள் (40-60 நாட்கள்), குறுகிய காலக் கடன்கள் (கார் லோன் – 4 வருடங்கள், தனிநபர் கடன் 3 வருடங்கள்), நீண்ட காலக் கடன்கள் (வீட்டுக் கடன் – 15-20 வருடங்கள்)
10% – புதிய கடன்கள் பற்றிய தகவல்கள் / தேவைகள்
மேலே சொன்ன விகிதத்தில், உங்களுடைய வருமான வரலாறு அல்காரிதம்களின் வழியே நிர்ணயிக்கப்படும். இந்த மாதிரியான கிரெடிட் கணக்கு முறைகளில் முன்னணியில் இருப்பது ஃபிகோ ரேட்டிங்தான். ஆனால், இன்று அமெரிக்காவில், வாண்டேஜ் ஸ்கோர் என்றொரு மாடலும் பயன்பாட்டில் இருக்கிறது. சிபில் மதிப்பீடு என்பது ஃபிகோ மதிப்பீட்டினை வைத்து உருவாக்கப்பட்டதுதான்.
கிரெடிட் ஸ்கோர் என்பது 300 – 900 வரையிலான ஒரு எண். 300 – 500-க்கு இந்தப் பக்கத்தில் உங்கள் ஸ்கோர் இருந்தால், “ஆள் டேஞ்சர். இழுத்துறுவான், எஸ்கேப்பாக சான்ஸ் இருக்கு, பார்த்துக் கொடுங்க” என்று சிகப்பு விளக்கினையும், 700-க்கு மேல் என்றால் “டீசண்டான ஆளு. கொடுத்தாத் திரும்பி வரும். நம்பி இறங்கலாம்” என்று பச்சை விளக்கினையும் வங்கிகளுக்குக் காட்டும். சுருங்கச் சொன்னால், கிரெடிட் ஸ்கோர் என்பது உங்களுடைய வருமானம்/செலவீனங்களுக்கான மார்க்‌ஷீட். மார்க்‌ஷீட்டில் மார்க் குறைந்து போனால், வீட்டில் என்ன கிடைக்குமோ, அதற்கு ஈடான மறுப்புதான் வங்கிகளிடமிருந்தும் கிடைக்கும். இப்போதைக்கு இந்த ஸ்கோர்தான் வங்கிகளைப் பொருத்தவரை வேதம்.
“ஐய்யய்யோ, வட போச்சே” என்கிற ரீதியில் இதுவரை கோல்மால், டகால்டி செய்திருந்தால், உடனடியாகத் திருத்திக் கொள்ளுங்கள். இந்த ஸ்கோர் போன தலைமுறை பச்சை குத்துதல் மாதிரி, லேசில் அழியாது. அழியாமல் போனால்கூட விட்டு விடலாம். அதைத் தாண்டி, ஊரில் நீங்கள் எங்கே போய்க் கடன் கேட்டாலும், உங்களுக்குமுன் சிபில் ஸ்கோர் அங்கே போய் நின்று, உங்களைப் பார்த்துப் பல்லிளிக்கும். அதற்கு முதலில் உங்களுக்கு உங்களின் சிபில் ஸ்கோர் எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவேண்டும்.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் வரை இந்தியாவில் தனிநபர்களால் தங்களின் கிரெடிட் ஸ்கோரைத் தெரிந்துகொள்ள முடியாது. இன்றைக்கு அது சாத்தியம். சிபில் தளத்தில் போய் ரூ. 142 மொய் எழுதினால், உங்கள் வீடு தேடி உங்களுக்குத் தெரியாத உங்களின் ஜாதகம் வரும். இதே மாதிரியான சேவை எக்ஸ்பீரியன் கிரெடிட் சேவையிலும் ரூ. 138-க்குக் கிடைக்கும்.
 நீங்கள் அடுத்தமுறை ஏதேனும் கடன் வாங்கவேண்டும் எனில், கையில் கிரெடிட் ஸ்கோரோடு பேசுங்கள். 700-க்கு மேல் ஸ்கோர் இருந்தால், நீங்கள் கடனைத் தேடி ஓடத் தேவையில்லை. கடன் உங்களைத் தேடி வரும். 500-க்குக் கீழேயானால், ஸ்கோரை மேலே கொண்டுசெல்லும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
கிரெடிட் ஸ்கோரின் பயன்பாடுகள் வங்கிகளுக்கு மட்டுமில்லை. தனி நபர்களான நமக்கும்தான். உங்களின் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால் (700-க்கு மேல்) உங்களால், வட்டிவிகிதங்களில் பேரம் பேச முடியும். முக்கியமாக, நீண்ட காலக் கடன்களில் 0.5% குறைந்தால்கூட பல ஆயிரங்களிலிருந்து சில லட்சங்கள்வரை, கடன் தொகையைப் பொருத்து, சேமிக்கலாம். இன்னும் இந்தியாவில், இந்த ஸ்கோர், காப்பீடு, முதலீடு மாதிரியானவற்றுக்கு வரவில்லை. அடுத்த பத்து வருடங்களில் வந்துவிடும். அது வந்துவிட்டால், உங்களின் வாழ்க்கைத் தரம், கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றை வைத்துக்கொண்டு, காப்பீட்டின் ப்ரீமியம் மாறும் சாத்தியங்கள் இருக்கின்றன.
சிபில் ஸ்கோர்!
சிபில் ஒவ்வொருவருக்கும் 300 முதல் 900 வரை ஸ்கோர் கொடுக்கிறது. ஏற்கெனவே கடன் வாங்கிய ஒருவர், இன்னொரு கடனுக்கு விண்ணப்பித்து, அவருக்கு 800-க்கு மேல் ஸ்கோர் இருந்தால், அவரது கடன் விண்ணப்பம் உடனடியாக பரிசீலிக்கப்படும். அவர்களுக்கு கிரீன் சேனல் கடன் வழங்கப்படும்.
விண்ணப்பத்தாரரின் ஸ்கோர் சான்றிதழில் விவரம் இல்லை என்பதை என்.ஏ. அல்லது என்.ஹெச். (NA or NH) என்று இருந்தால் அவர்கள் கடனுக்கு புதியவர்கள். இதுவரை கடந்த 2 வருடங்களில் அவர்கள் எந்த கடனும் வாங்கவில்லை என்று அர்த்தம். இது மாதிரியான புதியவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்படும்.ஸ்கோர் 700 முதல் 800 வரை இருந்தால், ஆவணங்களை சரி பார்த்துவிட்டு வங்கிகள்/நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும். ஸ்கோர் 600 முதல் 700-ஆக இருந்தால் தீவிர பரிசீலனைக்குப் பின் விண்ணப்பதாரர் மேல் எந்தத் தவறும் இல்லை என்று விண்ணப்பதாரர் நிரூபித்தால், அவர்களுக்கும் கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், விண்ணப்பதாரரின் ஸ்கோர் 600-க்கு கீழே இருந்தால் கடன் கேட்டு வருபவரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் நிராகரிக் கப்படும். இவர்களுக்கு எந்த வங்கியிலும் கடன் கிடைக்காது.
'CIBIL Score sheet-ல் XXX’ என்றோ அல்லது DPD (Days Past Dues)  என்றோ போட்டிருந்தால் கவலை வேண்டாம். அவர்கள் வாங்கிய கடனை சரியாக திருப்பிச் செலுத்துகிறார்கள் என்று அர்த்தம்.
ஸ்கோர் குறைய காரணங்கள்..!
கடனை உரிய காலத்தில், உரிய தவணையில் செலுத்தத் தவறினால் ஸ்கோர் குறையும்.கிரெடிட் கார்டு கடன், குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்திவிட்டு மீதமுள்ள தொகையை தவணையில் செலுத்தினால் அபராதத்திலிருந்து தப்பிக் கலாம். ஆனால், ஸ்கோர் உடனடியாக குறையும். அந்த தவணைக் காலம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் உங்கள் ஸ்கோர் குறைந்து கொண்டே போகும்.

நீங்கள் வாங்கும் வீட்டுக் கடன் அல்லது கார் கடன் அதிகமாக இருந்து பெர்சனல் லோன் குறைவாக இருந்தால், உங்கள் ஸ்கோர் பாதிக்கப் படாது. அடமானம் இல்லாத கடன் (உதா. பெர்சனல் லோன்), அடமானக் கடனைவிட (உதா. வீட்டுக் கடன்) அதிகமாக இருந்தால் ஸ்கோர் மிகவும் பாதிக்கப்படும். உதாரணமாக மொத்த கடன் 25 லட்ச ரூபாயாக இருந்தால், இதில் கிரெடிட் கார்டு இரண்டு லட்ச ரூபாய், அடமானம் இல்லாத கடன் 12 லட்ச ரூபாய், கார் லோன் இரண்டு லட்சம் ரூபாய், வீட்டுக் கடன் 9 லட்சம் ரூபாயாக இருந்தால் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருக்கும். ஏனெனில் கடனில் 44% மட்டுமே அடமானத்துடன் கூடிய கடன் (வீட்டுக் கடன்) மீதமுள்ள 56% அடமானம் இல்லாத கடன் (பெர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு கடன்). ஆகவே, பெர்சனல் லோன் கடனையும், கிரெடிட் கார்டு கடனையும் அதிகம் வாங்காமல் இருந்தால் ஸ்கோர் நன்றாகவே இருக்கும். வீட்டுக் கடனையும், கார் கடனையும் அதிகபட்சமாக 75% முதல் 80% வரை வாங்கி பயன் அடையலாம்.
ஒருவர் வீட்டுக் கடன் வாங்க வேண்டுமென்றால் குறைந்த வட்டியுள்ள ஒரே ஒரு வங்கியைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தை அங்கு மட்டுமே விண்ணப்பித்தாலே போதும். ஒரே நேரத்தில் ஐந்தாறு வங்கிகளில் விண்ணப்பித்தால் அனைத்து வங்கிகளிலும் உங்கள் பெயர் விசாரிக்கப்பட்டு, அதனால் உங்கள் ஸ்கோர் குறைய வாய்ப்பிருக்கிறது. இரண்டு கடனுக்கு மத்தியில் குறைந்தபட்சம் 4 முதல் 6 மாத இடைவெளி இருக்க வேண்டும்.
முடிந்த வரை யாருக்கும் கடன் ஜாமீன் கையெழுத்து போடாமல் இருந்தால் நல்லது. அவர்கள் பணம் கட்டவில்லை என்றாலும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப் பட்டு உங்களுக்கு கடன் கிடைக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது.
கடன் கிடைக்காது!
நீங்கள் கடன் வாங்கி அதை குறிப்பிட்ட தேதியில் செலுத்த தவறி இருந்தால்,  வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, மீதமுள்ள கடனையோ அல்லது மொத்தத் தொகையையும் தள்ளுபடி செய்திருக்கலாம். இதனால் உங்களுடைய சிபில் சான்றிதழில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது (Written-off) என்றோ, செட்டில் செய்யப் பட்டது (settled) என்றோ வரும். இந்நிலையில் உங்களை அடுத்த ஏழு வருடங்களுக்கு கறுப்புப் பட்டியலில் (Black List) சேர்த்துவிடுவார்கள். இதன் பிறகு அத்தியாவசிய கடனுக்காக நீங்கள் அழுது புலம்பினாலும் கடன் கிடைக்காது.

“நமக்கு அந்தக் கொடுப்பினையெல்லாம் இல்லை சார், ரெண்டு மூணு தடவை செக் பவுன்ஸாகியிருக்கு, கிரெடிட் கார்டு செட்டில்மெண்டு போயிட்டேன், தவணையெல்லாம் அபராதத்தோடதான் சேர்த்துக் கட்டறேன்” என்கிற ரீதியில் இருப்பவரா நீங்கள்? உங்கள் ஸ்கோரினை மேலே கொண்டுசெல்ல சில பாயிண்டுகள்.
1. உங்களின் தவணைகளை ஒழுங்காக இறுதித் தேதிக்குமுன் கட்டுங்கள். இந்தியாவில், இப்போது மொபைல் பில், தொலைபேசி பில், மின்சாரக் கட்டணம் கட்டுவதுகூடக் கணக்கில் வரும். ஆகவே மக்களே, ‘கரெக்டா பில்லு கட்டு – இல்லைன்னா கிரெடிட் லைன் கட்டு.’
2. உங்களின் கடன்களைக் குறைவாக வைத்துக்கொள்ளுங்கள். வரவு எட்டணாவாக இருந்தால், செலவு நாலணாவாக இருத்தல் பர்ஸுக்கும் ஃப்யூச்சருக்கும் நல்லது.
3. உங்கள் கடன்களைப் பரிசீலியுங்கள். கிரெடிட் கார்டு கடன்கள்தான் இருப்பதிலேயே மோசமான கடன்கள். வட்டி விகிதம் மாசத்துக்கு 3% மேலே போய் கொள்ளையடிப்பதும் இல்லாமல், சிபிலில் போட்டு வேறு கொடுப்பார்கள். கிரெடிட் கார்டு கடன்களை, அதைவிடக் குறைந்த வட்டிவிகிதக் கடன் வாங்கி, ஒழித்துவிடுங்கள். நீண்ட காலக் கடன்களாயின், அந்த வங்கியைவிடக் குறைந்த வட்டி தரும் வங்கிக்கு மாற்றிவிடுங்கள்.
4. புதிய கடன்கள் வாங்கவேண்டிய சூழல் ஏற்பட்டால், குறைவான தவணைகளைக்கொண்டு கடன்களை முடியுங்கள். சிபிலில் தொடர்ச்சியாக நீண்ட காலத் தவணைகள் / கடன்கள் இருந்தால், அது உங்கள் ஸ்கோரைப் பாதிக்கும்.
5. போனில் கேட்ட பெண்ணின் குரல் அழகாக இருக்கிறதே என்பதற்காக, கடன் வேண்டும் என்று சொல்லாதீர்கள். ஒவ்வொரு தடவையும், சிபிலை வங்கிகள் தொட்டால், அதுவும் பதிந்து, ‘இந்தாள் தொடர்ச்சியாகக் கடனுக்கு அலைகிறான்’ என்பது மாதிரியான பிரமை உண்டாகும். அதுவே எதிர்மறையாகப் போக வாய்ப்புண்டு.
ஐந்து கட்டளைகள்!
நீங்கள் சிபிலில் அதிக ஸ்கோர் வாங்கி நல்ல பெயர் எடுக்க வேண்டுமெனில் பின்வரும் ஐந்து விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.
1. உங்களுடைய இ.எம்.ஐ.-யை நிலுவை தேதிக்கு முன்னதா கவே செலுத்தி விடுங்கள். கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம்.
2. கிரெடிட் கார்டு நிலுவையை மொத்தமாக செலுத்துவது நல்லது. குறைந்த பட்ச தொகையைச் செலுத்தி விட்டு மீதியை இ.எம்.ஐ-ல் செலுத்தக் கூடாது.
3. அடமானமில்லாத கடன் மற்றும் பெர்சனல் லோன் வாங்குவதை நிறுத்த வேண்டும்.
4. அதிக கிரெடிட் கார்டுகள் இருந்தால் இரண்டு மட்டும் வைத்துக் கொண்டு மீதியை சரண்டர் செய்துவிடுங்கள். அதில் குறைந்த தொகையை பயன்படுத்தவும்.
5.ஒரே நேரத்தில் வீட்டுக் கடன் அல்லது கார் கடனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளுக்கு விண்ணப்பிக்கக் கூடாது.
இந்த விதிமுறைகளை 24 மாதங்களுக்கு சரியாக பின்பற்றி வந்தால் உங்கள் ஸ்கோர் 300-ஆக இருந்தாலும் அது 800ஆக  உயர வாய்ப்பு இருக்கிறது. ஆல் த பெஸ்ட்..!
நிறைவேறாத ஆசைகளோடு தற்கொலை செய்துகொள்பவர்கள் ஆவிகளாக அலைவார்கள் என்று தமிழ் சினிமாவில் ஒரு பிட்டு போடுவார்கள். அது உண்மையோ இல்லையோ, நிறைவேற்றாத கடன்கள், நிழலாக நீங்கள் போகும் இடமெல்லாம் அலையும். இனி இந்தியாவில் கடனோ, கிரெடிட் கார்டோ, ஏன் வங்கிக் கணக்கோகூட, கிரெடிட் ஸ்கோர் இல்லாமல் சாத்தியப்படாது. உடல் நலத்தைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, அதற்கு ஈடான விஷயம் கிரெடிட் நலமும். அதே சமயம், கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் கடனே கிடைக்காது என்பதுமில்லை. வட்டி விகிதங்கள் அதிகமாகும். வங்கிகள், ஸ்கோரை சாக்கு சொல்லி, கடன் தர மறுக்கலாம். கடனோடு சேர்த்து, கடனின் காப்பீட்டையும் எடுத்துக்கொள்ள வங்கிகள் வற்புறுத்தலாம்.
இது தாண்டி, “இதெல்லாம் என்னால் முடியாது, ஆனாலும் எனக்கு கடன் தந்தே ஆகவேண்டும்” என்றால் மீரான் சாகிப் தெருவில் சினிமா புரோக்கர்கள் காசோடு வாரம் 6% வட்டியோடும், தராவிட்டால் வீடு தேடி வர டாடா சுமோவோடும், கழுத்தில் போட துண்டோடும், உஙகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். 

தளங்கள்:
சிபில் – http://www.cibil.com
ஈக்வி பேக்ஸ் இந்தியா – http://www.equifax.com/home/en_in
எக்ஸ்பீரியன் இந்தியா – http://www.experian.in/
பிகோ – http://en.wikipedia.org/wiki/FICO


ஆக்கம் மற்றும்  தொகுப்பு :  மு. அஜ்மல் கான்.

No comments:

Post a Comment