Friday 7 March 2014

குடும்ப அட்டை பெறுவது எப்படி? ஒரு சிறப்பு பார்வை ...

இன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்ப அட்டை அத்தியாவசிய ஒன்றாகிவிட்டது.பொது விநியோகத் திட்டத்தில் பொருட்கள் வாங்கவும், அடையாளச் சான்று மற்றும் இருப்பிட சான்றாகவும் பயன்படுத்தப்படுவதால் குடும்ப அட்டை அவசியமாகின்றது.தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.இலஞ்சம் கொடுக்காமல் சட்ட விதிமுறைகளின்படி குடும்ப அட்டைப் பெறும் வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.


புதிய குடும்ப அட்டைப் பெற தகுதி உடையவர்கள் யார்?
விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பம் தனி சமையலறையுடன் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் பெயர், தமிழ்நாட்டின் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இருக்கக்கூடாது.


குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ? தனியாக விண்ணப்படிவம் உள்ளதா?

ஆம்.தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு
 http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf    தமிழில்
http://www.tn.gov.in/appforms/ration.pdf      English
என்ற அரசு இணை தளத்திலும் தரைஇறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும்?
  • சென்னை மற்றும் புற நகர பகுதிகளை சேர்ந்தவர்கள் அவர் வசிக்கும் பகுதிக்கு உரிய உணவுப்பொருள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • சென்னை தவிர மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வட்ட வளங்கள் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • கோயம்பத்தூர் மாநகரத்தில் வசிப்பவர்கள் மட்டும் உதவி பங்கீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தினை பதிவு தபாலிலும் அனுப்பலாம். நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாக கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்?
  • தமிழ் நாட்டில் மனுதாரர் வசிப்பதற்கான முகவரி ஆதாரத்தின் நகல் கீழ்கண்ட ஏதேனும் ஒன்று இணைக்கப்படவேணடும்.
  • தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை
  • சொந்த வீடாக இருப்பின் சொத்து வரி ரசீது
  • மின்சார கட்டண ரசீது
  • தொலைபேசி கட்டண ரசீது
  • பேங்க் பாஸ் புக்
  • பாஸ்போர்ட்
  • வாடகை ஒப்பந்தம்
  • முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்குப் பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று
  • பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கம் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று
  • முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை என்ற சான்று
  • கேஸ் சிலிண்டர் இணைப்பு இருப்பின் அதன் விலாசம்.

நேரில் ஆய்வு..
அதிகாரிகள் வீட்டுக்கு நேரில் சென்று தனியாக சமையல் செய்யப்படுகின்றதா விண்ணப்பதாரர் சொன்னது உண்மையா என ஆய்வு செய்வார்கள்.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?
  •  தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.
  • வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.  
  • விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய குடும்ப அட்டை பெற கட்டணம்எவ்வளவு?
அரசால் ரூ 5 /- கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.ரூ.5 கட்டணம் செலுத்தினால் மட்டும் போதும். இலஞ்சம் யாருக்கும் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

எத்தனை நாட்களில் குடும்ப அட்டை கொடுக்கப்பட வேண்டும்?
விண்ணப்பித்த 30 நாட்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை கொடுக்கப்படவேண்டும் அல்லது குடும்ப அட்டை கொடுக்கபடாததற்கு காரணம் சொல்லவேண்டும்.

கால தாமதமானால், கொடுக்க மறுத்தால்?
  • கொடுக்க மறுக்கும் உண்மை காரணத்தை மனுதாரருக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
  • வேண்டுமென்றே கொடுக்க மறுத்தால் காலதாமதம் செய்தால் சென்னை பகுதியில் ஆணையாளருக்கும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட வளங்கள் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடமும் புகார் செய்ய வேண்டும். அல்லது தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும்.


சான்றுகள் பெற கால அவகாசம்?
  • பெயர் நீக்கம் அல்லது சேர்த்தல் சான்றுப் பெற 3 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.
  • முகவரி மாற்றம் அதே ரேசன் கடையின் எல்லைக்குள் 3 நாட்களுக்குள்
  • முகவரி மாற்றம் கடை மாற்றத்துடன் 7 நாட்களில்குடும்ப அட்டை ஒப்படைப்பு சான்று (வேறு மாநிலம் இதர நகரங்களுக்கு 2 நாட்கள்)
  • மாநிலத்திற்கும் வேறு மாவட்டம் அல்லது வேறு தாலுக்கா முகவரி மாற்றம் 7 நாட்களில்.
  • புதிய குடும்ப அட்டை 60 நாட்களில்
  • நகல் குடும்ப அட்டை பெற 45 நாட்களில்
  • குடும்ப அட்டை இல்லா சான்று 7 நாட்களில் கொடுக்கப்பட வேண்டும்.
  • மேற்கண்ட சான்றுகள் பெற உதவி ஆணையாளரிடம் அல்லது வட்ட வளங்கள் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு “லோக் சத்தா” கட்சியை அணுகுங்கள்.
  • குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 60 நாட்களுக்குள் புதிய அட்டைகள் உரிய விசாரணைக்குப் பின் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். தகுதியற்ற மனுக்களை நிராகரிக்கும் போது அந்த விவரங்களையும் மனுதாரர்களுக்கு 60 நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்.                                                
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை களுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் முறை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொகுப்பு : அ ,தையுபா அஜ்மல். 

No comments:

Post a Comment