Monday 17 March 2014

நமது சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள்..

பொதுவுடமைச் சிற்பிகள் காரல்மார்க், ஏங்கெல்சு, சமுதாயச் சிற்பி தந்தைப் பெரியார், மூதறிஞர் இராஜாஜி, பண்டைக்காலத்து கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் ஆகியோர் தம் நட்பின் சிறப்புகளையெல்லாம் கடந்த கட்டுரைகளில் கண்டீர்கள். இந்த இதழில் இந்தியாவில் மகா மெகாலாய சகரவர்த்தியாக ஐம்பதாண்டுகள்தன்னரசு புரிந்த படிக்காத மேதை அக்பர், பார்வியக்கும் கூர்ந்த மதியின்ன் பீர்பால் ஆகியோர் தம் நட்பைப் பார்ப்போம்.




மொகாலாய சக்ரவர்த்தி அக்பர்..
ஐரோப்பாவில் அங்கும் இங்கும் புரட்சிகள் வெடித்துக் கிளம்பிய காலகட்டம். இங்கிலாந்தில் கமாக்கவி ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலம். அப்போது அக்பர் இந்தியாவில் கோலோச்சிக் கொண்டிருந்தார. (1556-1605) மொகலாய பரம்பரை இந்திய மண்ணில் வேரூன்றியதற்கும், அக்பரின் ஆட்சிதான் காரணம். இந்த நாட்டு மக்களின் நலம் நாடி அல்லும் பகலும் உழைந்து வந்தார். ஒரு வகையில் அவரை இந்திய தேசியத் தின் தந்தை என்று கூற வேண்டும். சமயமானது மக்களைப் பிரிப்பதற்குப் பயன்பட்ட காலத்தில், அக்பர் பிரிவினை செய்யும் சமயத்தின் உரிமைகளைப் புறக்கணித்துப் பொது இந்திய தேசியத்துவ இலட்சியத்துக்கு முதலிடம் கொடுத்தார்.
அன்பார் ஆதாயம்..
போரினால் வரும் ஆதாயத்தை விட அன்பினால் வரும் ஆதாயமே சிறந்தது நிலையானது என்பது அக்பர் கருத்து. இந்துக்களின் அன்பையும் நல்லெண்ணத்தையும் பெறும் பொருட்டு முசுலீம் அல்லாதார் மீது விதிக்கப்பட்டிருந்த ‘ஜஸியா’ என்னும் தலைவரியையும், இந்து யார்த்திரிக வரியையும் நீக்கினார். இராசபுத்திர பெண்களை மணந்தார். இத்தகைய, கலப்பு மணங்களை அவர் பெரிதும் ஆதரித்தார். அவர் பார்சிகளிடத்திலும் தம் அவைக்கு வந்த ஏசு சங்க பாதிரிகளிடத்திலும் அன்பு காட்டினார்.
படிக்காத மேதை
அக்பர் ஒரு தற்குறி. ஆனால் கேள்வி ஞானம் பெற்றவர். நுண்மான் நுழைபுலம் படைத்தவர். விபரங்களை ஆய்ந்து முடிவெடுப்பதில் (Decision making) கெட்டிக்காரர். இவர் கணவனை இழந்த பெண்கள், உடன் கட்டை ஏறும் ‘சதி’ என்னும் மூடத்தனத்தை சட்டத்தினால் தடை செய்தார்.
வெற்றி நகரம்..
ஆரம்பத்தில் ஆக்ராவே அகபரின் கோட்டை. பிறகு பதேபூர் சிக்ரி(வெற்றி நகரம்) என்னுமிடத்தில் புதிய நகரை நிருமானித்தார். இது இலண்டனைவிட மிகவும் பெரியது என்று அக்கால ஆங்கிலேய யாத்திரிகர் ஒருவர் கூறுகிறார்.
பீர்பால்..
அக்பரின் அரிய சாதனைகளுக்கு, நெடிய அரசாட்சிக்கு, பல ஆற்றலாளர்ர்கள் அவர் அவையை அலங்கரித்தார்கள். ஆனால் அவர்கள் எல்லாரையும் விட தலையாய சிறப்புப் பெற்றவர் அக்பரின் அமைச்சரும் அருமை நண்பருமான பீர்பால் ஆவார். அரசர், அமைச்சர் என்ற எல்லைகளைத் தாண்டி இருவரும் சிறந்த நண்பர்களாக இருந்தார்கள். மிகச்சிறிய செயல்களில் கூட தமது அன்பின் ஆழத்தைப் பீர்பால் புலப்படுத்தினார்
கத்தரிக்காய் சித்தரிக்கும் உண்மை..
ஒரு சமயம் அக்பர் கத்தரிக்காய் மிகச் சுவையானது. சத்து நிறைந்தது என்று சொன்னார். அப்போது அங்கிருந்த பீர்பால் ஆமாம் கத்தரிக்காய் சாப்பிட்டால் மிகமிகச் சுவையாய் இருக்கும் என்றார். சில வாரங்கள் கழிந்தது. ஒரு நாள் அரண்மனை சமையல்கார்ர் மதிய உணவுக்கு கத்திரிக்காய் சமைத்திருந்தார். கத்தரிக்காய் கரி பரிமாறியபோது “கத்தரிக்காய் சுவையே இல்லாத ஒரு காய்” எனக்கு இது பிட்டிகவே பிடிக்காது. இதை பீர்பாலுக்கு பரிமாறுங்கள் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றார் அக்பர்.
உடனே பணியாளர் பீர்பாலுக்கு கத்தரிக்கய் பரிமாறப் போனார். பீர்பால் அதைத் தடுத்துவிட்டுச் சொன்னார். கத்தரிக்காய், ஐய்யய்யோ அது உடம்பையே கெடுத்துவிடும் என்றார். அப்போது அக்பர் சொன்னார்.
‘ஏன் கத்தரிக்காய் பற்றி குறையாகச் சொல்கிறீர். சில நாள்களுக்கு முன்பு தானே இது ரொம்ப சுவையாக இருக்கும் என்று சொன்னீர்’ என்றார் அக்பர். அதற்கு பீர்பால், அன்பாக மறுமொழி சொன்னார். இராஜா, உங்களுக்குக் கத்தரிக்காய் பிடிச்சிருக்கு, சுவையானது என்று அப்போது சொன்னீர்கள். அதனால் எனக்கும் பிடிக்கும். சுவையானது என்று சொன்னேன். இப்போது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் எனக்கும் பிடிக்காது” என்றார். அரசன், அமைச்சர் என்பதைத் தாண்டி அவர்களுக்கு இடையே இருந்த அன்பின் ஆழத்தை இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்துகிறது.
பிரிவு தந்த வேதனை..
ஒருமுறை ஏதோ கோபத்தில் ‘இங்கே இருக்காதீங்க எங்கேயாவது போயிருங்க’ என்று அக்பர் பீர்பாலைக் கடிந்து கொண்டார். பீர்பால் ஆக்ராவை விட்டு கிராம்ம் ஒன்றில் வசித்து வந்தார். அவர் இருப்பிடத்தின் முகவரியை அரண்மனையில் ஒருவருக்கும் தெரிவிக்கவில்லை. பீர்பால் எங்கே இருக்கிறார் என்றே அக்பருக்குத் தெரியவில்லை.
பீர்பால் இல்லாத்து அக்பருக்குப் பெரும் வேதனையை அளித்தது. ஒவ்வொரு நிமிடமும் மிகவும் மகிழ்ச்சியாக கழியும் பீர்பால் உடனிருந்தால். அப்படி இல்லாமல் போனது பெரும் துன்பத்தைத் தந்தது. அக்பர், சிப்பாய்களை அழைத்து பீர்பாலைத் தேடிக் கண்டுபிடித்து வரச்சொன்னார். எங்கு தேடியும் தென்படவில்லை. பீர்பாலைக் கடிந்து கொண்டதற்காக அக்பர் தன்னைத் தானே நொந்துகொண்டார்.
ஞானியின் வருகை..
ஒரு நாள் அரசவை கூடியிருந்த சமயம். அரண்மனை சிப்பந்தி ஓடிவந்து, “மகாராஜா! உங்களைச் சந்திப்பதற்காக ஞானி ஒருவர் வாயிலில் காத்திருக்கிறார்” என்றார். பீர்பால் போனபிறகு அவரைப் போன்ற ஒரு அறிவாளியின் நட்பின்றி வாடிய அக்பருக்கு இது ஒரு வாய்ப்பாகவே பட்டது. அந்த ஞானி தமது இரு சீடர்களுடன் உள்ளே நுழைந்தார். ஒளி உமிழும் கண்கள், சடாமுடி, நீண்ட தாடியுடன் ஞானப் பழமாக காட்சியளித்தார் வந்தவர்.
ஞானியே! இந்த உலகத்திலேயே நீங்கள் மிகச்சிறந்த அறிவாளி என்று உங்களைப் பற்றிக் கூறினார்கள். அப்படியானால் இப்போது எமது அமைச்சர்கள் கேட்கும் கேள்விக்கு ஏற்ற பதில்களை அளிக்க வேண்டும். அப்படி அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தார் உங்களை அமைச்சராக்குகிறேன். இல்லையென்றால் உங்கள் தலை தப்பாது இதற்குச் சம்மதமா என்றார் அக்பர்.
சரி என்று கூறிய ஞானி மேலும் தொடர்ந்து சொன்னார். மகாராஜா, ‘நான் தான் உலகத்திலேயே சிறந்த அறிவாளி’ என்று நான் சொல்லவில்லை. என்னுடைய புத்திசாலித்தனத்தை இங்கு காட்ட எனக்கு ஆவல் இல்லை. ஆனால், அவையின் கேள்விகளுக்குப் பதலளிக்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.
யார் சிறந்த நண்பர்?
கேள்வி: எப்போதும் கிடைத்தற்கரிய சிறந்த நண்பர் யார்? என்கு அமைச்சர் இராஜா தோடர்மால் முதல் கேள்வியைக் கேட்டார்.
பதில்: “அவரது ஆழ்ந்த அறிவே சிறந்த நண்பர்” என்றார் ஞானி.
கேள்வி: உலகிலேயே ஆழமான வடிகால் எது?
பதில்: ஒரு பெண்ணின் இதயம்
கேள்வி: இழந்தால் திரும்பப் பெற முடியாதது எது?
பதில்: வாழ்க்கை
கேள்வி: காற்றை விட விரைந்து செல்லக்கூடியது எது? என்றார் அங்கு விருந்தினராக வந்திருந்த ஜெய்ப்பூர் அரசர் மான்சிங்.
பதில்: மனிதனின் எண்ணங்கள்
கேள்வி: உலகிலேயே மிகவும் இனிமையானது எது?
பதில்: குழந்தையின் புன்னகை
ஞானியின் அறிவுக்கூர்மையை ஒவ்வொருவரும் வரும் மெச்சினர். அக்பரும் தமது பங்கிற்கு இரண்டு கேள்விகள் கேட்டார்.
கேள்வி: பேரரசை ஆட்சி செய்ய மிகவும் தேவையானது எது?
பதில்: அறிவுக்கூர்மை
கேள்வி: அரசனின் மிகப்பெரிய எதிரி யார்?
பதில்: அவரது சுயநலம்.
பிரிந்தவர் சேர்ந்தனர்..
ஞானியின் பதில்களில் அக்பருக்குமனநிறைவு ஏற்பட்டது. ஞானிக்கு ஓர் இருக்கையளித்து அமரச் சொல்லிவிட்டு அக்பர் கேட்டார். ஞானியே நீங்கள் எல்லாம் அறிந்த மேதை என்பதால் இங்கே ஏதாவது ஓர் அற்புத்த்தை நிகழ்த்திக் காட்ட முடியுமா?
ஏன் முடியாது? “உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் அரசே! உங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறேன்” என்றார் ஞானி. உடனே அக்பர் எனது அருமை நண்பரும் அமைச்சருமான பீர்பாலை உடனே கொண்டுவர வேடும் என்றார்.
ஞானி எதுவும் பேசாமல் தமது செயற்கை முடியையும் தாடியையும் நீக்கினார். அரசவையில் கூடியிருந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம். அக்பரால் அவரது கண்களையே நம்பமுடியவில்லை. அங்கே நிற்பது பீர்பால்! அக்பர் உடனே பீர்பாலை கட்டித்தழுவிக் கொண்டார். பிரிந்த நண்பர்கள் சேர்ந்தனர்.
வெற்றியின் தூண்..
உமக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் என்ற ஞானியிடம், எனது நண்பர் பீர்பால்தான் வேண்டும் என்று அக்பர் சொன்னது அவர்தம் நட்பின் உயர்வை, உன்னதத்தை உணர்த்துவதாய் உள்ளது.
நாட்டை நிர்வகிக்கக் கூடிய பேரரசருக்கு அயர்வு நீக்கும் அருமருந்தாய், அள்ளக் குறையாத்த அறிவுச் சுரங்கமாய் இருந்து உற்ற நேரத்தில் உரிய அறிவு நிவாரணம் அளித்து நிர்வாக நெருக்கடி தீர்க்கும் உயிர் நண்பராய் விளங்கிய பீர்பால் அக்பரின் வெற்றிக்கு அவர் ஒரு தூண் என்றால் மிகையன்று. சிறந்த நண்பர்கள் வெற்றியின் தூண்கள் என்பதை அக்பர் பீர்பால் நட்பு நமக்கு உணர்த்துகிறது. வாழ்க நண்பர்கள்! வாழ்க நட்பு!

தொகுப்பு : மு..அஜ்மல் கான்.

No comments:

Post a Comment