Thursday 13 March 2014

இஸ்லாத்தில் ஏன் ஹஜ் கடைசிக் கடமை? ஒரு இஸ்லாமிய பார்வை..


 இஸ்லாத்தில் ஹஜ் கடைசிக் கடமை. எனவே வாழ்க்கையின் கடைசியில் தான் அதை நிறைவேற்ற வேண்டும் என்கிற மனோநிலை ஓரளவு மாறிவிட்டாலும் இக்கருத்து மக்களிடமிருந்து முழுமையாக எடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும். இஸ்லாமிய கடமைகளில் எதுவுமே முதலாவது,கடைசி என்ற பாகுபாடு கிடையாது. எல்லா கடமைகளும் அதனதன் இடங்களில் முதல் நம்பரில் தான் வரும். குறிப்பாக ஹஜ்ஜைப் பொறுத்தவரை தற்காலத்தில் இளம் வயதில் செல்வது தான்  சாலச் சிறந்தது.
வயது முதிர்ந்தவர்கள் ஹஜ்ஜுடைய நாட்களில் மட்டுமல்ல; பயணம் முழுவதும் பல சிரமங்களை சகிக்க வேண்டியிருக்கும். நெருங்கிய சொந்தக் காரர்கள் இல்லையானால் அது போன்றதொரு கஷ்டமான சூழ்நிலை வேறெதுவும்  இருக்க முடியாது.

இளம் வயதில்:
                இளம் வயதில் ஹஜ் செய்யும் போது அல்லாஹóவின் கிருபையால் பல சிரமங்களை தவிர்க்க முடியும். தவாஃப், ஸயீ செய்வதும் சுலபமாகி விடும். ஹதீம், முல்தஜம் போன்ற ‘துஆ’ ஏற்றுக் கொள்ளப் படும்இடங்களில் முந்திச் செல்வது, இடம் பிடிப்பது போன்றவை வாலிபர் களுக்கும் நடுத்தர வயதினர்களுக்கும் சுலபம். வயதானவர்கள் ஹஜ்ஜுக்கு செல்லக்கூடாது என்பது இதன் பொருளல்ல.  இன்றைய இளைய தலைமுறையினர் இது பற்றி நன்கு யோசிக்க வேண்டும். வாழ்க்கையின் கடைசியை நாம் தீர்மானிக்க முடியாது. மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இன்றும்  நல்ல வசதி படைத்தவர்களில் எத்தனையோ பேர் ஹஜ்ஜை தாமதப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். “அதே நிலையில் மரணித்து விட்டால் யூதனாகவோ,கிறிஸ்தவனா கவோ மரணிக்கட்டும்” என்று நபி (ஸல்) கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள். (பைஹகீ 6;452). 

ஹஜ் செய்ய நாடியவர் அதை சீக்கிரம் செய் யட்டும்.  (ஹாகிம் -1645)  மக்காவுக்கு சீக்கிரம் புறப்படுங்கள். ஏனெனில் நோயோ அல்லது வேறு ஏதாவது தேவையோ ஏற்பட்டு விடுவதை யாரும் (முன்னரே) அறிய மாட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள்.  (பைஹகீ 6/463)

 15வயதுக்குப்பின் ஹஜ் கடமையாகி ஹஜ் செய்யாமலேயே மரணித்து விட்டால் அவரும் கடமை தவறியவராகிவிடுகிறார்.

                லட்சக்கணக்கில் பணம் படைத்தவர் தான் ஜகாத் கொடுக்க வேண்டுமென்று நினைப்பது போல் பெரும் பண முதலைகள் தான் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டுமென்று நினைப்பதும் தவறு. பெரிய வருமானம் வரவேண்டுமென்ற கட்டாயம் இல்லை. அல்லாஹóவின் நாட்டம் இருந்தால் எதுவும் நடக்கும்.

ஹஜ்ஜுக்கு முன்:
                கஃபதுல்லாஹóவுக்கு செல்ல வேண்டு மென்ற எண்ணம் யாருக்கும் இல்லாமல் இருக்க முடியாது. சதாவும் அது முஃமினுடைய உள்ளத்தில் ஓடிக் கொண்டிருக்கும். எனினும் ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணம் உறுதியான பின் ஹஜ், உம்ரா ஜியாராவுடைய சட்டங்களைத் தெரிந்து கொள்வதில் தீவிரம் காட்ட வேண்டும். எந்த வணக்கமாக இருந்தாலும் அதில் இரண்டு தன்மைகள் வராதவரை முறையான வணக்கமாக ஆகாது.

   1. அல்லாஹவுக்காக மட்டுமே செய்கிறேன் என்ற (இக்லாஸ்) மனத் தூய்மை
   2. சட்டங்களை அறிந்து சரியாக செய்வது.

                ஹஜ்ஜை யாருக்கும் தெரியாமல் மறைத்து செய்ய முடியாது. எப்படியாவது வெளிப் பட்டு விடும். எனவே அல்லாஹóவுக்காக மட்டுமே செய்கிறோம் என்ற மனத்தூய்மை ரொம்ப முக்கியம். “மனத் தூய்மை என்பதும் பெருமை இல்லை” என்பதும்  பேச்சிலும் எழுத்திலும் இருந்தால் போதாது. உள்ளத்தில் இருக்க வேண்டும். அல்லாஹó மனதின் எண்ண ஓட்டங்களை நன்கு அறிந்திருக்கிறான். மக்கள் தன்னை ‘ஹாஜி’ என்று சொல்ல வேண்டுமென்ற எண்ணம் கடுகளவு கூட வந்து விடக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவுக்காக புறப்படும்போது, யா அல்லாஹó! இந்த ஹஜ்ஜை பிரபலத்தைத் தேடுவதற்காகவோ மற்றவர்களுக்கு காட்டுவதற்காகவோ   செய்யும் ஹஜ்ஜாக ஆக்கிவிடாதே”! என்று துஆ செய்தார்கள்.

கடமையுணர்வு:
                ஹஜ் என்பது தொழுகையைப் போன்று ஒரு கடமை.  “மக்காவுக்குப் போகிறேன்” என்று சாதாரணமாக சொல்லிவிட முடியாது. எல்லாரும் போகிறார்கள், நானும்போகிறேன் என்றோ, அவர் போய் விட்டார், நான் போகாமல் இருந்தால் மரியாதை இல்லை என்றோ நினைக்கக் கூடாது. இது ஒரு இபாதத் - கடமை. யாருக்கு கடமையோ அவர் கண்டிப்பாக போக வேண்டும். இது மற்ற பயணங்களைப் போல அல்ல; கட்டாயக் கடமை என்ற உணர்வு இருக்க வேண்டும். கடமையை ஒழுங்காக நிறைவேற்றுவதற்காக பேணுதல் மிக்க ஆலிமிடம் சட்டங் களை கேட்டோ அல்லது படித்தோ தன்னை ஹஜ்ஜுக்கு தயாராக்கிக் கொள்ள வேண்டும். சட்ட விளக்கங் களை யாராவது ஒருவரிடம் தான் கேட்க வேண்டும். பல பேரிடம் கேட்டு குழம்பி விடக் கூடாது. மக்காவில் செய்பவர்களைப் பார்த்தும் செய்து விடக் கூடாது.
                பொருளாதார ரீதியாகவும், அரசாங்க ரீதியாகவும் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் மும்முரமாகச் செய்கிறார்கள். செய்து தான்  ஆக வேண்டும். ஆனால் உலகியல் தொடர்பான காரியங்களில் காட்டப்படும் தீவிரம் மறுமை தொடர்பான சட்டங்களை தெரிந்து கொள்வதில் காட்டப்படுவதில்லை என்பதே உண்மை. அல்லாஹுதஆலா குர்ஆனில் ஹஜ்ஜுடைய சட்டங்களைப் பற்றிக் கூறிய பின், “அல்லாஹóவைப் பயந்து கொள்ளுங்கள். திண்ணமாக அல்லாஹóகடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (2:196)” என்று கூறுகிறான். இந்த வசனம் ஹஜ்ஜுடைய சட்டங்களை தெரிந்து செயல்படுத்துவதை எச்சரிக்கையுடன் வலியுறுத்துகிறது. நிறைய பேர் சட்டம் தெரியாமல் எதையோ செய்கிறார்கள்.  பெரிய தொகை செலவு செய்து மக்காவரை செல்கிறோம். சட்ட விளக்கங்களில் முறையாக கவனம் செலுத்தினால் ஹஜ்ஜை  வீணாக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். சட்ட ஒழுங்குகளை பேணாமல் மக்கள் ஹஜ் செய்வதால் ஹஜ்ஜின் மூலம் கிடைக்க வேண்டிய பரக்கத்துகளையும் பலன்களையும் இந்த உம்மத்  இழந்து தவிக்கிறது என்று வேதனைப்பட்டுக் கொள்கிறார் மௌலானா. ரஃப்அத் காஸிமீ அவர்கள். (மஸாயிலே ஹஜ்ஜோ உம்ரா)

வஸிய்யத்:
                பயணம் புறப்படுவதற்கு முன் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்திருக்க வேண்டும். முக்கியமாக கொடுக்க வேண்டிய கடனை  அடைத்திருக்க வேண்டும். கடன் வாங்கி ஹஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை எனினும், அந்தக் கடனை அடைப்பதற்குத் தேவையான சொத்துக்களை  விட்டுச் சென்றிருந்தால் பரவாயில்லை. அதிகப்படியான சொத்துக்கள்  ஹஜ் செய்யப் போதுமான அளவுக்கு இருந்தால் ஹஜ் கடமையாகி விடும். அவற்றை விற்று ஹஜ் செய்ய வேண்டும்.  விற்க விருப்பமில்லையானால் கடன் வாங்கி ஹஜ்ஜுக்குச் செல்ல வேண்டும். அத்துடன்  கண்டிப்பாக வஸிய்யத் எழுதி வைக்க வேண்டும்.  கடன் அடைக்கப்படாவிட்டால்  அதற்குரிய  ஏற்பாடுகளை செய்து விட்டு யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற விபரங்களை தெளிவாக (வஸிய்யத்) எழுதி குடும்பத்தார்களிடம் அல்லது நம்மைச் சார்ந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டுத் தான் ஹஜ்ஜுக்குசெல்ல வேண்டும்.   
     அடியார்களுக்கு நிறைவேற வேண்டிய கடமைகளை முடித்தபின் பயணம் புறப்படும்போது நெருக்கமானவர்கள், நல்லோர்கள், பெரியவர்களை சந்தித்து‘துஆ’ பெற்றுக்கொள்வது மார்க்கத்தில் விரும்பத்தக்கதே! நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ஹஜ்ஜுக்காக பயணம் சொல்லி வந்த போது ‘துஆ’செய்து வழியனுப்பி வைத்தார்கள். இன்று பயணம் சொல்லுதல் என்ற பெயரில் தேவையில்லாத சிரமங்கள் ஏற்படுகிறது. சாதாரண ஒரு காரியத்திற்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் கொடுப்பதால் அசல் நோக்கம் தப்பிவிடுகிறது. அதுவே பெருமைக்கும், முகஸ்துதிக்கும் காரணமாகி விடுகிறது.

தொழுகையும், கடமையே!
     பயணம் புறப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத் நபில் தொழுவது சுன்னத்தாகும். ஒருவர் பயணத்தை ஆரம்பிக்கும் போது தொழும் இரண்டு ரக்அத்தை விட ஆகச் சிறந்த ஒன்றை யாரும் அவருடைய குடும்பத்தினரிடம் விட்டுச் செல்ல முடியாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அல்-அத்கார்) நபியவர்கள் பிரயாணத்தில் எந்த இடத்தில் இறங்கினாலும் இரண்டு ரக்அத் தொழுது விட்டுத் தான் அந்த இடத்திலிருந்து விடைபெறுவார்கள்.

     ஹஜ்ஜுடைய பயணத்தில் எக்காரணம் கொண்டும் கடமையான தொழுகைகள் தப்பி விடக் கூடாது. இரயில் நிலையத்திலும், விமான நிலையத்திலும் பயணத்திற்கிடையிலும் அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஹஜ்ஜைப் போல ஐந்து நேரத் தொழுகையும் கட்டாயக் கடமை. பயணத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியவில்லையானால் ஹஜ்ஜே கடமையாகாது

. (ஃபஸாயிலே ஹஜ்)விண்ணில் ஒரு லெப்பைக் முழக்கம்:
     சென்னையிலிருந்து நேராக மக்கா செல்கிறாரென்றால் இஹராமுடைய நபில் இரண்டு ரக்அத் தொழுது உம்ராவுக்காக இஹராம் கட்டிக்கொண்டு விமான நிலையம் செல்ல வேண்டும். எனினும் உம்ராவுடைய நிய்யத் விமானம் புறப்பட்டபின் வைத்துக் கொள்ளலாம். (மீகாத் -எல்லையைக் கடப்பதற்கு முன் நிய்யத் வைப்பது கட்டாயம்) விமானம் தாமதமாகிவிட்டால் இஹóராமுடைய கட்டுப்பாடுகளைப் பேணுவதில் அதிகப்படியான சிரமம் ஏற்படலாம். உம்ராவுடைய நிய்யத்துடன் மூன்று தடவை தல்பியா ஓதிக் கொள்ள வேண்டும். மீகாத் என்பது ஒரு எல்லை. ஹஜ், உம்ராவுக்குச் செல்லும் போது இஹóராம் இல்லாமல் அந்த எல்லையைக் கடக்கக் கூடாது. இந்தியாவிலிருந்து வõமானத்தில் பயணம் செய்தால் “கர்னுல் மனாஜில்” என்ற மீகாத்தை கடந்து செல்ல வேண்டியிருக்கும்.  இது மக்காவிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ளது. விமானம் மீக்காத்தை கடப்பதற்கு  15 அல்லது 20 நிமிடங்களுக்கு முன் அது பற்றிய அறிவிப்பு கொடுக்கப்படும். அந்த சமயத்தில் ஹாஜிகள் எழுப்பும் “லெப்பைக் அல்லாஹும்ம லெப்பைக்....” என்ற தல்பியா முழக்கம் இன்றும் என்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும். மண்ணின் முழக்கம்  விண்ணைப் பிளக்கும். ஆனால் இங்கு சில நூறு பேர்களை சுமந்து கொண்டு ஒரு விமானம் பறக்கிறது. ஆகாயத்தில் அவர்கள் தவிர வேறு யாரும் இல்லை. விமானம் மீகாத்தை நெருங்க நெருங்க விண்ணில் ஒலித்த தல்பியா முழக்கம் மண்ணைப் பிளந்தது. “லெப்பைக் அல்லாஹும்ம லெப்பைக்” இபுறாஹீம் (அலை) அவர்கள் மக்களை ஹஜ்ஜுக்கு அழைக்கும்போது அவர்கள் வெகு தூரமான இடங்களிலிருந்தெல்லாம் வருவார்கள் என்று அல்லாஹ நபியிடம் கூறிய போது, இப்படி விமானத்தில் பறந்த நிலையில் ‘லெப்பைக்’ என்று கூறி தம்முடைய அழைப்புக்கு பதில் கொடுப்பவர்கள் பற்றி நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ!

ரசனை:
                ஊட்டி, கொடைக்கானல் செல்பவர்கள் அதற்குரிய ரசனையோடு தான் செல்வார்கள். ஒருவர் கொடைக்கானலில் தூண் பாறையை பார்த்து விட்டு இதைப் பார்க்கத்தான்  வந்தோமா? ஒரு உயரமான பாறை! அவ்வளவு தானே! என்று சொல்பவராக இருந்தால் அவரை எப்படிப் பார்ப்போம்.  அதே போன்று ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் சட்டங்கள் தெரிந்தால் மட்டும் போதாது. மக்காவும் மதீனாவும் இஸ்லாம் உருவான இடங்கள். இஸ்லாத்தின் ஆரம்பகால வரலாற்றுச் சின்னங் களையும்,  நபி இபுராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தினரின் தியாகச் சின்னங்களையும் சுமந்து நிற்கும் புண்ணிய பூமி தான் மக்காவும், மதீனாவும். அவற்றை ரசிப்பதற்கு ஈமானிய சிந்தனை தேவை. அத்துடன் இஸ்லாமிய வரலாற்றுச் சிந்தனையும்  அவசியம். மைதானங்கள்,கட்டிடங்கள், பள்ளிவாசல்கள், மலைக் குகைகள், கப்ருஸ்தான்கள் போன்றவை மக்கா, மதீனாவில் மட்டுமல்ல. முழு உலகிலும் இருக்கின்றன. ஆனால் இரண்டுக்கும் மத்தியில் வானம், பூமிக்கு மத்தியிலுள்ள வேறுபாடு இருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் நடந்த இடம், நபித்தோழர்கள் போரிட்ட இடம்,நபியவர்களுக்கு நபித்துவம் கொடுக்கப்பட்ட குகை என  புண்ணியத்தலத்தின் ஒவ்வொரு இடமும் நம்மை இஸ்லாமிய  வரலாற்றின் ஆரம்ப காலத்திற்கே இழுத்துச் சென்று விடும். இவற்றை உணர்வதற்கு தனி ரசனை இருக்க வேண்டும். இது காசு கொடுத்து பெற வேண்டிய பொருளல்ல. அதற்காக நீண்ட கால முயற்சியும் பயிற்சியும் தேவை. குறைந்த பட்சம் ஹாஜிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டால் அந்த சிந்தனையை ஓரளவு வளர்த்துக் கொள்ளலாம். படிப்பதாக இருந்தால் ஷைகுல் ஹதீஸ்  ஜகரிய்யா (ரஹó) அவர் களுடைய “ஹஜ்ஜின் சிறப்புகள்” என்ற நூலையும், “அர்ரஹீகுல் மக்தூம்” (தமிழ்) என்ற நூலையும் படிக்கலாம்.



தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment