Saturday 22 February 2014

சென்னை அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை!! ஒரு சிறப்பு பார்வை ..



ஏழை மக்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் வகையில், டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையான  வசதிகளுடன், அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என, அரசு அறிவித்தது. வடிவமைப்பு மாற்றம் மற்றும் நவீன கருவிகள் வாங்க, 110 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது. மொத்தம், 143 கோடி ரூபாயிலான பணிகள் முடிந்த நிலையில், உயர் கல்வித் தகுதியுடன், பல்லாண்டு பணியாற்றிய அனுபவமிக்க  திறன் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு, உயர் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவக் கருவிகள் உதவியுடன், நல்ல காற்றோட்டமான சுகாதாரமான சூழ்நிலையில், உயர்சிகிச்சை அளித்திடும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நிறுவப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் வீடியோ கான்பரன்ஸ்' மூலம், பல்நோக்கு மருத்துவமனையைத் திறந்து வைத்தார். அரசு பல்நோக்கு மருத்துவமனை, நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தரை தளம் உட்பட, ஆறு தளங்களில் சிகிச்சை வசதிகள் உள்ளன.மருத்துவமனைகளில் இருந்து, உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்' என, அரசு தெரிவித்துள்ளது. 


பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் அதிநவீன வசதிகள் என்ன?                                                                                                                                                                                                                
 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 10 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டடத்தில் நிறுவப்பட்டுள்ள, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, இதய சிகிச்சைப் பிரிவு, இதய அறுவை சிகிச்சைப் பிரிவு, கை மற்றும் நுண் அறுவை புனரமைப்பு சிகிச்சைப் பிரிவு, புற்றுநோயியல் பிரிவு, புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் பிரிவு, நரம்பு அறுவை சிகிச்சைப் பிரிவு, ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்குப் பின் தொடர் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட 9 உயர் சிறப்புப் பிரிவுகளோடு, 400 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் தரைத்தளத்தில் 2 அறுவை அரங்குகள், முதல் தளத்தில் 2, ஐந்தாவது தளத்தில் 6 மற்றும் ஆறாவது தளத்தில் 4 என மொத்தம் 14 அறுவை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

* இதய நோய்களுக்கு, மார்பைத் திறந்து, அறுவைச் சிகிச்சை செய்யாமல், ரத்த நாளம் வழியாக சிகிச்சை அளிக்கும், 'பைபிளேன் கார்டியாக் கேத் லேப்' என்ற கருவி நிறுவப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தக் கருவி, தெற்கு ஆசியாவில் முதன் முதலாகவும், உலக அளவில், இரண்டாவது இடமாகவும் நிறுவப்பட்டுள்ளது.

* இது தவிர, மூளை ரத்த நாள ஆய்வகம், 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன், மல்டி சிலைஸ் சிடி ஸ்கேன், டிஜிட்டல் ரேடியோகிராபி, மொபைல் டிஜிட்டல் எக்ஸ்-ரே' மற்றும், 14 நவீன அறுவைச் சிகிச்சை அரங்குகளும் உள்ளன.

* மொத்தம், 400 படுக்கை வசதிகள் உள்ளன. தேவைப்பட்டால், 100 படுக்கை வரை, கூடுதலாக அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 83 டாக்டர்களும்; நர்சுகள், தொழில் நுட்ப உதவியாளர் என, 232 பேர் உள்ளனர்.

* நோயாளிகள் பயன்பாட்டிற்காக, தரைத் தளத்திலிருந்து 6வது தளம் வரை, சாய் தளப்பாதை வசதி  ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

* இது தவிர, தனியார் ஏஜன்சி வாயிலாக, 60 செக்யூரிட்டிகள், 300 துப்புரவு ஊழியர்களும் பணியில் உள்ளனர். 160 இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை, 9:00 மணி முதல் பிற்பகல், 3:00 மணி வரை, பொதுமக்கள் சிகிச்சைக்கு வரலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது முற்றிலும், உயர் சிகிச்சைக்கான மருத்துவமனை. அரசு, தனியார் மருத்துவமனைகளில் நோய் கண்டறியப்பட்டு, உயர் சிகிச்சை தேவை கருதி, பரிந்துரைக்கப்படுவோர் மட்டுமே, இங்கு அனுமதிக்கப்படுவர். நோய் தாக்குதல் உள்ளோர், மருத்துவ ஆவணங்களுடன் வரலாம்; தனியார் மருத்துவமனைகளை விட, நிச்சயம், உயர் சிகிச்சை இங்கு கிடைக்கும். முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திலும், இங்கு சிகிச்சை பெறலாம். 

என் கருத்து : 
                        ஒரு நல்ல செயலுக்கு அந்த கட்டிடம் பயன் படுகிறது என்பது மகிழ்ச்சி! உயர் சிகிச்சை நிபுணர்களுக்கு நல்ல வாய்ப்பு . தனியார் மருத்துவமனைக்கு தனது நோயாளிகளை அனுப்பாமல் இங்கு அனுப்பி மருத்துவமனை பீசையும் சேர்த்து வாங்கிகொள்வரகள். இதன்  மூலம் பல நோயாளிகள் பயனடைவார்கள். மிக அதிக சம்பளம்வாங்கும் அரசு மருத்துவமனை ஊழியர்கள் சில நாட்களிலேயே சரியாக நிர்வகிக்காமல் குப்பையும் கூளமும் சேர்ந்து கருவிகள் எதுவும் சரியாக செயல் படாமல் செய்து பயன் மக்களுக்கு கிடைக்காமல் செய்கிறார்கள். இனி அரசு மருத்துவ மனைகள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும், அரசு ஆவன செய்ய வேண்டும்.இந்த சிறப்பு மருத்துவமனை தன் செயல் பாட்டால் சிறப்படைய வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு. அதையும் இழுத்து மூடிடாதீங்க அரசியல் நண்பகளே !! மக்களின் பிணி தீர்க்கும் இப் புனிதப் பனிசிறப்புடன் தொடரட்டும்!!



ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான் .


No comments:

Post a Comment