Thursday 19 December 2013

தென் ஆப்பிரிக்க காந்தி,கறுப்பர் இன தலைவர் நெல்சன் மண்டேலா!! ஒரு வரலாற்றுப்பார்வை ...



உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்ந்து மறைகிறார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டுமே மாற்றங்களுக்குக் காரணமாயிருக்கிறார்கள்; மனித சமுதாயத்தின் சரித்திரத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சிலரில், ஒருவர் நம்முடன் வாழ்ந்தார், இப்போது மறைந்துவிட்டார். அதிகாரம் என்ற போதையில் மயக்கநிலையில் உள்ள உலக தலைவர்களுக்கு நெல்சன் மண்டேலா ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினர்.

அண்ணல் காந்தியடிகளைத் தனது முன்னோடியாகக் கொண்டு, அவர் விட்ட இடத்திலிருந்து  தனது பணியைத் தொடங்கியவர் நெல்சன் மண்டேலா.அதனால் தென் ஆப்பிரிக்க காந்தி என்று இந்தியர்களால் பொற்றப்பெற்றர்.





பிறப்பும்  இளமையும்:
                                                                  நெல்சன் மண்டேலாவின் முழுப்பெயர் நெல்சன் ரோபிசலா மண்டேலா. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். 1918 ம் ஆண்டு ஜுலை மாதம் 18 ந்தேதி தென்ஆப்பிரிக் காவில் உள்ள குலு கிராமத்தில் ஒரு மண் குடிசையில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி மக்கள் தலைவர்.

மண்டேலா இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டே பள்ளிக்கூடத்தில் படித்தார். போர் புரியும் கலைகளையும் பயின்றார். 
சிறுவயது முதல் குத்து சண்டை வீரராக அறியப்பெற்றார்.1941 ம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க் சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வி படித்தார். ஒரு தங்கச் சுரங்க பாதுகாப்பு அதிகாரி யாகவும், எஸ்டேட் ஏஜெண்டாகவும் வேலை பார்த்தார்.

அப்போது நோமதாம் சங்கர் என்ற நர்சை திருமணம் செய்து கொண்டார். மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் மனைவிக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அரசு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை தடை செய்தது. மண்டேலா மீது வழக்கு தொடரப்பட்டது.

5 ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958.ம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தலைவரின் கொள்கைகளுக்காக போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகள்; 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகள்.



கறுப்பர் இன போராட்டம் ...

                                                     தென்ஆப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் (நீக்ரோக்கள்) பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி பீடத்தில் வெள்ளையர்களே அமர்ந்தார்கள்.


கறுப்பர்களின் நலனை பாதுகாப்பதற்காக “ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்” என்ற கட்சி உருவானது. அதன் தலைவரான நெல்சன் மண்டேலா, இன வெறி பிடித்த வெள்ளையர் ஆட்சியை எதிர்த்து போராடினார்.


அரசாங்கம் கடுமையாக கெடுபிடி செய்ததால் 1961 ம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார். அவரை பிடிக்க வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. 1962 ம் ஆண்டு மண்டேலா கைது செய்யப்பட்டார்.
தென்ஆப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964 ம் ஆண்டு ஜுன் 12 ந்தேதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது.



மண்டேலா 1962.ல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏறத்தாழ 27 ஆண்டுகள் சிறையில் இருந்தார். உலக வரலாற்றிலேயே மண்டேலாவை போல இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடிய தலைவர்கள் கிடையாது. விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 71.



 சிறையில் இவருடன் ரோப்பேன் தீவில் 30 இந்தியர்கள் இதில் 12 தமிழர்கள் கடும் சிறை தண்டனை அனுபவித்து உள்ளனர்.குஜராத்திகள், தெலுங்கர்கள் தமிழர்கள் என இந்தியர்கள் பலருடன் பழகி இந்திய உணவுகளை விரும்பி உண்டு வந்தவர் இவரது இழப்பு இந்தியாவுக்கு பெரிய இழப்பாகும் இந்தியாவிலேயே முதன் முதலாக 2010 இல் மண்டேலா வின் படத்தை தில்லையடியில் திறந்து வெய்த்த பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு.




27 ஆண்டு காராகிருகவாசம் அனுபவித்தபோது, கட்சியைக் கட்டிக் காத்தவர், போராட்டத்தின் வீரியம் குறையாமல் பாதுகாத்தவர் அவரது மனைவி வின்னி மண்டேலா. தென் ஆப்பிரிக்காவில் குடியரசு ஆட்சி அமைந்தபோது அதில் அமைச்சராகப் பொறுப்பும் ஏற்றார். அமைச்சரான தனது மனைவி அதிகார போதை தலைக்கேறி செய்த ஊழல்கள் வெளிவந்தபோது, சற்றும் தயங்காமல், அதை மறைக்க முயலாமல் சட்டம் தனது கடமையைச் செய்யப் பணித்தவர் நெல்சன் மண்டேலா.
இதனால் அவரது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தனிமைச் சிறையிலிருந்து விடுதலையானதும் தனிமை வாழ்க்கை வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர் நினைத்திருந்தால் தனது மனைவியைப் பாதுகாத்திருக்க முடியும். தவறுகளை மன்னித்திருக்க முடியும். பொது வாழ்க்கையில் நேர்மையும் தூய்மையும் பற்றி பலரும் பேசுவார்கள். நெல்சன் மண்டேலா வாழ்ந்து காட்டினார்.



பல ஆண்டுகள் அவரை தனிமைச்சிறையில் அடைத்து கொடுமை செய்தது தென்ஆப்பிரிக்க அரசாங்கம். மனைவியை சந்திப்பதற்குகூட அனுமதி மறுக்கப்பட்டது. 1988 ம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட்டு, மரணத்தின் எல்லைக்கே சென்றார். அதனால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது. ஆனால் தென்ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சியின் தலைவராக இருந்த போந்தா, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தார்.

மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி மண்டேலாவின் மனைவி தலைமையில் ஆர்ப்பாட் டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.

“மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்” என்று தென்ஆப்பிரிக்க அரசு ஆசை காட்டியது. ஆனால் மண்டேலா மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். தென்ஆப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக டெக்ளார்க் பதவிக்கு வந்தார். அவர் மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தார்.

இதனால் மண்டேலாவின் விடுதலை நாளை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது. மண்டேலா 11.2.1990 அன்று விடுதலை செய்யப்படுவார் என்று ஜனாதிபதி டெக்ளார்க் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.



மண்டேலாவை வரவேற்க உலகம் முழுவதும் ஏற்பாடுகள் நடந்தன. இந்தியா சார்பாக பிரதமர் வி.பி.சிங் தலைமையில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. தென்ஆப்பிரிக்க அரசாங்கம் அறிவித்தபடியே 11.2.1990 அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

மண்டேலாவுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்தபடி சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறைச்சாலையின் வாசலில் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவரை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்றனர்.

ஏராளமான தொண்டர்கள் ஆப்பிரிக்க கொடியை அசைத்த படி வரவேற்றனர். சிலர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மண்டேலாவும், அவரது மனைவியும் கூடியிருந்தவர்களை நோக்கி கையை உயர்த்தி வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் மண்டேலாவை போலீசார் பாதுகாப்பாக கேப்டவுன் நகருக்கு அழைத்துச்சென்றனர். சிறைச் சாலையின் வாசலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டெலிவிஷன் மற்றும் புகைப்பட நிபுணர்கள் அவரை படம் எடுத்தனர். மண்டேலா விடுதலையான நிகழ்ச்சி தென்ஆப்பிரிக்க நாடு முழுவதும் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

மண்டேலா விடுதலையானதும், பிரதமர் வி.பி.சிங் அவருக்கு பாராட்டு தெரிவித்தார். மண்டேலா விடுதலையான சிறிது நேரத்தில் அவரிடம் பிரதமர் வி.பி.சிங் எழுதிய பாராட்டுக் கடிதம் கொடுக்கப் பட்டது. “உங்களது சுதந்திர போராட்டத்துக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என்று வி.பி.சிங் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

“இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வ தேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது.

நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயக ரீதியில் தேர்ந்து எடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்.

உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளை பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதை பெற்றார்.மண்டேலாவின் தியாகம் வீண் போகவில்லை.1994 மே 10 ந் தேதி அவர் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் ஆனார்.




1990ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா விடுதலையானதை உலகமே வரவேற்றது. தென்னாப்பிரிக்காவில் குடியரசு மலரவும் மண்டேலா காரணமானார். அதோடு, .
அதே ஆண்டில்இந்தியாவின் பாரத ரத்னா விருதும் தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது

தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகவும் 1994ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார் நெல்சன் மண்டேலா
அவர் அதிபர் ஆனபின், 1998 ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்க பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத், உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

 அவரது பதவிக் காலம் முடிந்ததும், 2வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார். 2008ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்தார் மண்டேலா.
அப்போதும் ஓயாமல், பல்வேறு நலப் பணிகளுக்காக மக்கள் சேவையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் மண்டேலா.


மறைவு ;-
பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு குணமடைந்து, வீடு செல்வதும், சில நேரம் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்று வருவதுமாக இருந்த நெல்சன் மண்டேலா, கடந்த சில வாரங்களாக மரணப் படுக்கையில் வீழ்ந்தார். அவர் தனது பேசும் திறனை இழந்து, குடும்ப உறுப்பினர்களின் ஆறுதல் வார்த்தையாலும், உற்சாக மொழிகளாலும் உயிர் பிழைத்து வந்தார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க நேரப்படி வியாழக்கிழமை (2013ஆம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு 8.50க்கு )நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் உலக மக்களை எல்லாம் சோகத்தில் ஆழ்த்திவிட்டு ஜோகனஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார்.

பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் 3 நாட்கள் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள அரசு கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தது. சுமார் 1,00,000 திற்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் காத்திருந்து அந்த மாபெரும் தலைவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

பின்பு இறுதிச் சடங்கு அந்த கிராமத்தில் உள்ள மண்டேலாவின் இல்லத்தில் அவரது உடல் இன்று ராணுவ குண்டுகள் முழங்க, குடும்பத்தினரின் பாரம்பரிய சடங்குகளுடன் அடக்கம் செய்யப்பட்டது ..



இந்த இறுதி நிகழ்ச்சியில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், அமெரிக்க மக்கள் உரிமை இயக்கத்தை சேர்ந்த ஜெஸ்ஸி ஜாக்சன், ஆப்பிரிக்க, கரீபியன் தலைவர்கள், ஈரான் துணை அதிபர் முகம்மது ஷரியத்மதாரி, லெசோதோஸ் 3-ம் மன்னர் லெட்சி, பிரான்சின் முன்னாள் பிரதமர்கள் லியோனல் ஜோஸ்பின், ஆலைன் ஜுப்பெ உள்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்..
நெல்சன் மண்டேலாவின் பிரம்மாண்ட சிலை திறப்பு...
                                     
  தென் ஆப்ரிக்காவின் இன மோதல்கள் முடிவுக்கு வந்த தினமாக டிசம்பர் 16 ஆம் தேதி கருதப்படுகிறது. தென் ஆப்ரிக்காவில் ஒருமைப்பாட்டுத் தினமாக அனுசரிக்கப்பட்டுவரும் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி  மறைந்த முன்னாள் தென் ஆப்பிரிக்கா அதிபர் நெல்சன்  மண்டேலாவின் உருவச் சிலையை தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா திறந்துவைத்தார்.



மண்டேலாவின் வாழ்க்கை மூன்று கட்டங்கள் ...


நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை மூன்று கட்டங்களை  கொண்டது என்பதை இந்நாட்டு அரசியல் அதிகார தலைவர்கள் மனதில் கொள்ள வேண்டும். 
முதலாவது அவர் இனவாத அடக்குமுறைக்கு எதிரான ஒரு சாத்வீக போராளி. 
இரண்டாவது சாத்வீக சமர் இராணுவ அடக்குமுறையால் நசுக்கப்பட போது ஆயுதம் தூக்க நிர்பந்திக்கபட்ட ஒரு ஆயுத போராளி.

 மூன்றாவது உலகத்தின் துணையுடன் வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்தை பெற்றதன் பின்இ சமரில் தோல்வியடைந்த வெள்ளையர் தரப்பையும் அரவணைத்து உண்மையான நல்லெண்ண தேசிய ஐக்கியத்தை உருவாக்கிய மனிதாபிமானமிக்க மகத்தான ஒரு தேசிய தலைவன். 


இந்த மூன்று கட்டங்களும் சேர்ந்ததுதான் மண்டேலா சிந்தனை. இந்த சிந்தனைதான் இந்நாட்டு தலைவர்களுக்கு வழி காட்டவேண்டும்.  இந்நாட்டில் துன்பத்துக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகியுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு மடிபா என்று செல்லமாக அழைக்கப்படும் நெல்சன் மண்டேலா வாழ்ந்தும் இறந்தும் வழி காட்டுகின்றார். 

இன்றைய நிலை :-

உலகம் இன்று பரந்து விரிந்து விட்டது. இனிமேல் இங்கு இந்த இனவாத பூச்சாண்டியெல்லாம விலை போகாது என மண்டேலா எங்களுக்கு வழி காட்டிவிட்டார். 
அவர் வழியில் நாம் பயணிப்பதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது 

நெல்சன் மண்டேலாவின் வாழ்வை சாத்வீக போராளி ஆயுத போராளி தேசிய தலைவன் என்ற மூன்று கட்டங்களாகவே நாம் பார்த்து புரிந்து கொள்ள  வேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யும் மெய்யான அஞ்சலி. அதுவே மண்டேலா சிந்தனை அவரது இந்த சிந்தனையை  திருத்தி பகுதி பகுதியாக புரிந்துகொள்வது அவருக்கு செய்யும் அஞ்சலி அல்ல.

அவரது ஆயுத போராட்டத்தை சுட்டிக்காட்டி அவரை பயங்கரவாதி என்று பட்டம் சூட்டி மகிழ்ந்த வெள்ளையின அரசு அவர் ஏன் ஆயுதம் தூக்கினார் என்றும் அவர்  முன்னெடுத்த சாத்வீக போராட்டம் ஏன் தோல்வியடைந்தது என்றும் புரிந்துகொள்ள பிடிவாதமாக மறுத்தது.வெற்றி பெற்று ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய பின்னர்  வெள்ளையினத்தவரை நோக்கி தனது மெய்யான நல்லெண்ண கரத்தை நீட்டி தனது நாட்டில் மீண்டும்  ஒரு சிவில் யுத்தம் தோன்றாமல் இருக்க அடித்தளமிட்ட மகத்தான மனிதாபிமான தலைவனை பார்த்து உலகம் இன்று வியக்கிறது.


அச்சப்படாதவன் வீரன் அல்ல அச்சத்தை வெல்பவனே  வீரன் என்றும் சுதந்திர இலக்கை நோக்கிய பயணம் சுலபமானதல்ல; எங்களில் அநேகர் மரணத்தின் நிழலை மீண்டும் மீண்டும் தொட்டு வந்த பின்னரே அந்த இலக்கை அடைய முடியும் என்றும் ஆபத்து வரும்போது முன் வரிசையில் சென்று தலைமை தாங்கு; பாராட்டு வரும்போது பின் வரிசையில் நின்று வழிகாட்டு என்றும் மடிபா மண்டேலா  மனந்திறந்து சொல்லி சென்ற மகத்தான வார்த்தைகள் எனக்கும் எங்கள் கட்சிக்கும் எங்கள் மக்களுக்கும் வழி காட்டுகின்றன.


இன்றைய தீர்வு :-
                அண்ணல் காந்தியடிகளைப் போல, அவரும் வாரிசு அரசியலுக்கு வழிகோலவில்லை. தனது குழந்தைகளை முன்னிலைப்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, தனது அரசியல் வாரிசு என்று யாரையும் அறிவிக்கவில்லை, பதவிக்குப் பரிந்துரைக்கவும் இல்லை.

ஒரு சமுதாயப் போராளி, அரசியல் தலைவர், லட்சிய புருஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இத்தனை நாளும் நம்மிடையே வாழ்ந்தவர் நெல்சன் மண்டேலா. நம்மில் பலர், குறிப்பாக அரசியல்வாதிகளில் பலர், அவரைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கவில்லை. இப்போது மரணமடைந்து விட்டார். மரணமாவது அவரைப் பற்றிய உண்மைகளை அவர்களுக்கு உணர்த்தட்டும்.

 ஒரு மாமனிதர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது, லட்சியவாதிகளுக்கும் சுயமரியாதை, சுதந்திரம் போன்ற கொள்கைகளில் நம்பிக்கை கொண்டோருக்கும் ஆறுதலாகவும் ஊக்கமாகவும் இருந்தது. இனி நாம், அண்ணல் காந்தியடிகளை நினைவில் நிறுத்தி செயல்படுவதுபோல, எங்கெல்லாம் இனவெறி எழுகிறதோ, எங்கெல்லாம் சுதந்திரம் பறிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நெல்சன் மண்டேலாவை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டாக வேண்டும்.

மனித குல தலைவர் மறைந்து விட்டாலும் அவர் புகழ் என்றென்றும் நிலைக்கும்.
நெல்சன் மண்டேலா பற்றி சொல்வதாக இருந்தால் இதுதான் சொல்ல முடியும் - "இனியொருவர் நிகரில்லை உனக்கு!'


ஆக்கம் & தொகுப்பு : .அஜ்மல் கான்.

No comments:

Post a Comment