Thursday 25 July 2013

கிரிக்கெட் விளையாட்டின் வரலாறு!! ஒரு சிறப்பு பார்வை...


நாடெங்கும் கிரிக்கெட் ஜூரம் ஏறிக் கிடக்கும் சூழல் இது. வீடுகளின் முன்னால், தண்ணீர் இல்லாத குளங்களில், சாலை ஓரங்களில், பள்ளிக்கூட வளாகங்களில், சந்துகளில் எல்லா இடங்களிலும் இந்த விளையாட்டை சிறுவர்களும் இளைஞர்களும் ஆர்வமுடன் விளையாடுவதைப் பார்க்கலாம். உலக அளவிலேயே இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு சற்று அதிகப்படியான ஆர்வத்துடன் ரசிக்கப்படுகிறது.
பொழுது போக்கிற்காக இங்கிலாந்திலுள்ள ஆடுமேய்ப்பர்கள் ஆரம்பித்த விளையாட்டே கிரிக்கெட் விளையாட்டு என்று நம்பப்படுகிறது. வாசல்கதவின் முன்னால் ஆடுமேய்ப்பவர் ஒருவர் நிற்க, இன்னொருவர் கல்லை அவரை நோக்கி எறிய குச்சியால் கல்லை அடித்து விளையாடும் விளையாட்டாகத் தான் கிரிக்கெட் ஆரம்பமாகியிருக்கிறது. ஆடுகளை மேய விட்டுக்கொண்டு இடையர்கள் குச்சிகளை வைத்து  விளையாடத் துவங்கிய கிராமிய விளையாட்டான கிரிக்கெட் அதன் பின் பல இடங்களுக்கும் பரவி இன்று உலகெங்கும் பரவிவிட்டது.

உலகெங்கும் கோடிக்கணக்கான வருவாயை ஈட்டும் இந்த கிரிக்கெட் விளையாட்டு நிகழ்ச்சியை நடத்த அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும் கடும் போட்டியிருகின்றன. காரணம் இதன் மூலம் கிடைக்கும் வருவாய் ! சாதாரணமாக ஆட்டிடையர்கள் ஆரம்பித்த விலையாட்டு இன்று உலகையே ஆட்டிப் படைக்கும் விளையாட்டாய் மாறியிருக்கும் வரலாற்றைச் சற்றுப் புரட்டிப் பார்த்தால் பல ஆச்சரியங்கள் நமக்கு முன்னால் விரிகின்றன.

கிரிக்கெட் விளையாட்டைக் குறித்து கிடைத்திருக்கும் மிகப் பழமையான குறிப்பு 1598ம் சேர்ந்தது என்கிறார் பீட்டர் வின் தாமஸ். இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் தொன்மையை ஓரளவு கணிக்க முடிகிறது. எனினும் பதினேழாம் நூற்றாண்டுகளில் தான் இது பரவலாக ஒரு விளையாட்டாக விளையாடப்பட்டிருக்க வேண்டும் என்பது பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல குறிப்புகளின் மூலம் தெரிய வருகிறது.

1760களில் கிரிக்கெட் விளையாட்டுக்கான முதல் மன்றம் ஹாம்ஷயர் மாவட்டத்திலுள்ள ஹாமில்டனில் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே கிரிக்கெட் விளையாட்டுக்காக ஆரம்பிக்கப் பட்ட முதல் மன்றம் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த மன்றமே கிரிக்கெட் என்னும் விளையாட்டு ஒருவித அங்கீகாரத்துக்குட்பட்ட ஒரு விளையாட்டாக அறியப்படக் காரணமாயிற்று.

இந்த ஹாமில்டன் மன்றமே பந்துவீச்சாளர், மட்டையாளர்களுக்கான நுட்பங்கள், மற்றும் விதிமுறைகளை ஆரம்பித்து வைத்தது. இந்த மன்றத்தினர் வகுத்த விதிமுறைகளே பல ஆண்டுகள் இந்த விளையாட்டின் முதுகெலும்பாக இருந்தன.

அதன் பின்னர் கிரிக்கெட் விளையாட்டின் அதிகார மையம் மாறியது. லண்டனிலுள்ள லாட்ஸ் மைதானத்தைத் தலைமிடமாகக் கொண்டு 1787ல் மேலிபோன் மன்றம் எனும் பெயரில் ஒரு மன்றம் இயங்கத் துவங்கியது. இந்த மன்றம் ஹாமில்டன் மன்றத்திடமிருந்து அதிகாரத்தையும், தலைமையையும் பெற்றுக் கொண்டது. இப்போது கிரிக்கெட் விளையாட்டுக்கு லாட்ஸ் மைதானம் தலைமையிடமானது.

இந்த எம்.சி.சி என்று அழைக்கப்படும் மெலிபோன் கிரிக்கெட் மன்றம் மிகவும் அதிகாரம் வாய்ந்ததா செயல்பட்டு வந்தது. இன்று வரை கிரிக்கெட் சட்டங்களை அந்த மன்றமே காப்புரிமை பெற்று தக்க வைத்துக் கொண்டுள்ளது. எனவே இன்றும் கூட ஏதேனும் திருத்தம் கிரிக்கெட் விதிமுறைகளில் செய்ய வேண்டுமெனில் அது எம்.சி.சி மூலமாகத் தான் செய்ய வேண்டும். இந்த எம்.சி.சி யே 1967 வரை இங்கிலாந்து கிரிக்கெட்டையும், உலக அளவிலான கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தி வந்தது.

கிரிக்கெட் விளையாட்டின் முதல் நாயகனாக இங்கிலாந்தின் டபிள்யூ.ஜி.கிரேஸ் என்பவரைக் குறிப்பிடுகிறார்கள். 1800ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆட்டக்காரராக இருந்த அவர் பல்வேறு திருத்தங்களை கிரிக்கெட் விளையாட்டில் செய்தார். தற்போதைய கிரிக்கெட் விளையாட்டின் துவக்கம் அவரே. அக்காலத்தில் இங்கிலாந்தின் அரச குடும்பத்தினருக்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்த நபராக இவர் இருந்தார் என்பதே இவருடைய புகழை வெளிப்படுத்தும்.

அதன்பின்னர் ஆஸ்திரேலியா நாட்டிலும் கிரிக்கெட் விளையாட்டு ஆரம்பித்தது. ஆஸ்திரேலியா ஏராளம் உள்ளூர் போட்டிகளை நடத்திக் கொண்டிருந்தது. அதன் பின்னர் இங்கிலாந்து அணி 1877ல் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து அங்குள்ள மெல்போர்ன் விளையாட்டு அரங்கில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடியது. இதுவே உலகில் நடைபெற்ற முதல் அதிகார பூர்வமான டெஸ்ட் போட்டி.

1877ம் ஆண்டு நிகழ்ந்த அந்தப் போட்டியில் இங்கிலாந்து 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆண்டுகள் நூறு கடந்தன. 1977ம் ஆண்டும் அதே இரு அணிகளும் அதே மைதானத்தில் மோதின. இப்போதும் வென்றது ஆஸ்திரேலியா அணி தான். அதுவும் அதே 45 ரன்கள் வித்தியாசத்தில் ! இந்த பரபரப்பான் அபோட்டியே ஆஷர் தொடர் என்று அழைக்கப்பட்டது. இதுவே இன்றைய உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் ஆரம்பம் எனலாம்.

பிரிட்டிஷ் ஆட்சி செய்த நாடுகளிலெல்லாம் கிரிக்கெட் விளையாட்டு விளையாடப்பட்டது. இந்தியாவிலுள்ள ராணுவ வீரர்கள் கூட இந்த விளையாட்டை விளையாடிய வரலாறு உள்ளது. இவ்வாறு பிரிட்டிஷ் மக்களால் உலகின் பல பாகங்களுக்கும் இந்த விளையாட்டு பரவியது. அதுவரை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகள் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டில் சிறந்து விளங்கின.

1721 – பிரிட்டிஷ் மக்கள் முப்பையில் வந்த ஆண்டுகளிலேயே கிரிக்கெட் விளையாடப்பட்டதற்கான குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் போன்ற நாடுகளில் பிரிட்டிஷ் மக்கள் கிரிக்கெட் விளையாட்டை கற்றுக் கொடுத்தபின் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளின் கிரிக்கெட் ஆதிக்கம் தளர்ந்தது. இந்தியாவை பிரிட்டிஷ் மக்கள் ஆட்சி செய்து வந்ததால் அந்த கால கட்டத்திலேயே இங்கிலாந்து மக்களை வெற்றி பெற வேண்டும் எனும் வேட்கை இந்தியர்கள் மனதில் அதிகமாய் இருந்ததில் வியப்பில்லை.

இந்திய அணியின் முதல் வெளிநாட்டுப் பயணம் 1932ல் நிகழ்ந்தது. அப்போது தான் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் தகுதி வழங்கப்பட்டது. இங்கிலாதுடனான விளையாட்டுக்காக அந்த அணி லண்டன் சென்றது. இதுவே டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் முதல் வெளிநாட்டுப் பயணம்.

1950 களில் உலகின் மிகப்பெரிய அணியாக இருந்தது இங்கிலாந்து அதன் பின்னர் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் முன்னணிக்கு வந்தன. இங்கிலாந்தின் அதிகாரமும், ஆதிக்கமும் பிற நாடுகளின் வரவால் குறைந்தன.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டில் மிக உயரிய இடத்தை முன்பே அடைந்து விட்டிருந்தது. உலகமே வியக்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரரான டான் பிராட்மேன் – ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் தான். அன்றைய நாட்களில் இங்கிலாந்து அரச குடும்பத்துக்குப் பிறகு உலக அளவில் தெரியப்பட்ட ஒரு மனிதராக இவர் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இவருடைய டெஸ்ட் சராசரி சுமார் 99.94.

டான் பிராட்மேன் களத்தில் நிற்கிறார் என்றால் பந்துகளைச் சிதறடித்து அணிக்கு வெற்றி தேடித் தருவார் என்று நம்பலாம். இவரை ரன் மெஷின் என்று வர்ணித்தார்கள். இவரை எப்படி ஆட்டமிழக்கச் செய்வது என்பதை அறியாமல் எதிரணி வீரர்கள் திகைத்துப் போயிருந்த காலத்தில் ஒரு புதிய உத்தியைக் கண்டு பிடித்தனர் இங்கிலாந்து நாட்டினர்.

பாடி லைன் என்று சொல்லப்படும் உடலைக் குறி வைத்து பந்து எறியும் முறையை இவர்கள் ஆரம்பித்தார்கள். இடது பாகம் விழுந்து உடலை நோக்கி வேகமாய் வரும் பந்துகளைச் சமாளிப்பதில் மட்டுமே பிராட்மேன் சற்று தடுமாறுவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்த முறை பிராட்மேனை அவுட்டாக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டது என்பது கவனிக்கத் தக்கது. இந்த முறை வெற்றியும் பெற்றது. 32 – 33ம் ஆண்டைய தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் பிராட்மேன் சராசரி 56 மட்டுமே.

ஆனால் இந்த பந்து வீச்சு முறை மிகப் பெரிய சர்ச்சையை எழுப்பியது. ஆட்களைக் குறி வைத்து எறியும் முறை வழக்கத்துக்கு மாறானது, இது ஆபத்தானது என்று ஆஸ்திரேலிய அரசு மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இங்கிலாந்து ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையே மிகப்பெரிய பிரச்சனையாக இது உரிவெடுத்ததால் இந்த முறையில் பந்து வீசுதல் சட்ட விரோதமானது என தடை செய்யப்பட்டது.

கிரிக்கெட் விளையாட்டு நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்கிறது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இந்த அணியில் ஆறு தீவுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெறுகிறார்கள். இந்த ஆறு தீவுகளும் கலாச்சார, வாழ்க்கை முறை, நாணயம், ஆட்சி என அனைத்து விதங்களிலும் வேறுபட்டு நின்றாலும் கிரிக்கெட் விளையாட்டில் இவை அனைத்தும் ஒன்று பட்டு நிற்கின்றன.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் கிரிக்கெட் விளையாட்டை ஏற்றுமதி செய்தது இங்கிலாந்து அணி தான். காலனி ஆதிக்கத்திலுள்ள பகுதிகளில் தோட்ட முதலாளிகளின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் இந்த விளையாட்டு முதலில் விளையாடப்பட்டது. பின்னர் இது மற்ற இடங்களுக்கும் பரவியது. எனினும் கிரிக்கெட் விளையாட்டுக்கு வெள்ளையர்களே முன்னிலை வகித்தார்கள்.

முதன் முதலாக மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்குத் தலைமை வகித்த கறுப்பினத்தைச் சேர்ந்தவர் ஃப்ராங்க் ஓரல் என்பவர். இவருடைய வரவே இன அடிமைத்தனத்திலிருந்து அணியை மீட்டது எனலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின் மாபெரும் எழுச்சி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 1950ல் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று வியக்க வைத்தது.

கிளைவ் லாயிட் வரவுக்குப் பின் மேற்கு இந்தியத் தீவுகள் அணி உலக அளவில் மிகப்பெரிய கவனத்துக்குள்ளானது. மிகவும் திறமையாக விளையாடி பல்வேறு சாதனைகளையும் வெற்றிகளையும் அவர்கள் குவித்தார்கள். வெறும் ஐம்பது இலட்சம் மக்களைக் கொண்ட மேற்கு இந்தியத் தீவுகள் அணி உலகை அசைக்கும் வலிமையுள்ள அணியாக மாறியது.

கிரிக்கெட்டின் தாக்கம் உலகெங்கும் பரவ ஆரம்பித்தபின் உலக கிரிக்கெட் சங்கம், ஐ.சி.சி 1909ல் ஆரம்பிக்கப் பட்டது. பல்வேறு போட்டிகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டன. அதில் மிக முக்கியமான ஒன்று உலகக் கோப்பைக் கிரிக்கெட். இது 1975ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. இந்தியா இந்த கோப்பையை ஒருமுறை கைப்பற்றியுள்ளது. 1983ம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டிகளுக்கு அறுபது ஓவர்கள். அதன் பின்பே அது ஐம்பதாகக் குறைக்கப் பட்டது.
உலகின் பல நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டாலும் தெற்காசியப் பிராந்திய நாடுகளான இந்தியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தான் இந்த விளையாட்டுக்கு அதிக மரியாதை. அதிலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் நேசிக்கப் படும் விளையாட்டாய் இருக்கிறது. பல கோடிக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பார்க்கும் இந்த விளையாட்டில் இந்தியா தோற்றுப் போனால் பல ரசிகர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், சிலர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைகிறார்கள் என்பது அதிர்ச்சித் தகவல்.

இந்தியாவுக்கு டெஸ்ட் அந்தஸ்து ஆறாவதாக வழங்கப்பட்டது. இதன் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், நீயூசிலாந்து போன்ற அணிகளுடன் அது தன்னை இணைத்துக் கொண்டது.

இங்கிலாந்தை வெல்ல வேண்டும் என்னும் எண்ணம் எல்லா இந்திய வீரர்களின் மனதிலும் அப்போது ஆழப் பதிந்திருந்தது. அந்த வாய்ப்பு 1952 – ல் கிடைத்தது. இந்தியாவில் நடந்த போட்டியில் அது இங்கிலாந்தை வீழ்த்தியது. கண்ணியத்துக்குப் பெயர் போன இந்திய ஊடகங்கள், அந்த கால கட்டத்தில் இங்கிலாந்தின் மன்னர் ஆறாம் ஜார்ஜ் மரணமடைந்தது தான் இங்கிலாந்தின் தோல்விக்குக் காரணம் என எழுத, அடக்கு முறை இங்கிலாந்து நெகிழ்ந்தது.

சர்வதேசப் போட்டிகளிலேயே மிகவும் அதிக ஆர்வமுடன் பார்க்கப்படும் போட்டி எனும் பெருமையை இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் பெற்று விடுகின்றன. இந்த போட்டிக்கு இருக்கும் வரவேற்பும் ஒரு ஆக்ரோஷமான ஆர்வமுமே இதன் காரணம்.

இந்தியாவில் உள்ள மற்ற அனைத்து விளையாட்டுகளையும் விட கிரிக்கெட் இன்று மிகவும் புகழ் பெற்ற ஆட்டமாக உருமாறியிருக்கிறது. இதை விளையாட்டு என்று கருதிக் கொண்டாலும் கூட தனி மனித வாழ்க்கைப் பொறுப்புகளை பல வேளைகளில் இது பாதிக்கிறது என்பதும், கிரிக்கெட் நட்சத்திரங்கள் அளவுக்கு அதிகமாக வணங்கப்படுகிறார்கள் என்பதும், இது மிகப்பெரிய வர்த்தகத் தளமாகி சூதாட்டத்தின் இருப்பிடமாகி விட்டது என்பதும் இந்த விளையாட்டின் மீது வைக்கப்படும் சர்ச்சைகளாக உள்ளன. எனினும் விளையாட்டை விளையாட்டாய் பார்த்தால் பிரச்சனை இல்லை என்பதே நிஜம்.
தொகுப்பு : மு. அஜ்மல் கான்.






No comments:

Post a Comment