Tuesday 2 July 2013

முந்திரி பழம் பற்றிய சிறப்பு பார்வை..

பொதுவாக ஒரு பழத்தின் கொட்டை பழத்திற்குள்தான் இருக்கும். ஆனால் முந்திரி கொட்டை மட்டும் பழத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.
முந்திரிப் பழத்தைப் பார்த்தாலே புரிந்து விடும் சரி இந்த முந்திரியின் பூர்வீகம் எது தெரியுமா? பிரேசில். முந்திரிப்பழம் ஒரு பொய்க்கனியாகும். பழம் போலத் தோன்றினாலும் அது உண்மையில் பழம் இல்லை. இந்த பழத்தின் வெளியே முந்திரிக் கொட்டை உருவாகும். முந்திரியைப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த பழத்தின் திரவம் தோலில் பட்டுவிட்டால் எரிச்சலையும், கொப்புளத்தையும் ஏற்படுத்திவிடும்.

பிரேசில் பூர்வீகமாக இருந்தாலும் உலகளவில் முந்திரி அதிக பரப்பளவில் பயிரிடப்படுவது இந்தியாவில்தான். ஆனால் இங்கு மகசூல் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் கேரளா மாநிலம்தான் முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.


முந்திரி பழத்தில் இருந்து முந்திரிக் கொட்டையை மனிதர்களால் பிரிக்க முடியாது. எனவே, மூடப்பட்ட சிலிண்டருக்குள் முந்திரிக் கொட்டைகளைப் போட்டு, சிலிண்டரை சூடுபடுத்துவார்கள். அப்போது அந்த பழம் வெடித்து முந்திரி தனியாக பிரியும்.


முந்திரிக் கொட்டை திரவமும் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.உண்மையில் முந்திரியும் நச்சுத்தன்மை வாய்ந்த ஜவி என்ற தாவரமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவைதான்.


பலருக்கும் முந்திரிக் கொட்டையால் ஒவ்வாமை ஏற்படுகிறது. ஆனாலும், எல்லா கொட்டை வகைகளையும் எடுத்துக் கொண்டால் முந்திரிக் கொட்டை குறைந்த அளவு ஒவ்வாமை கொண்டதாக உள்ளது. நிலக்கடலைதான் அதிக ஒவ்வாமை தன்மை கொ‌ண்ட பரு‌ப்பு வகையாகும். 


முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப் படுகிறது. ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும். நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை.இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.


முந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப்பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது.இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.

மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது.

வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது.ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகின்றது.


தொகுப்பு  : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment