Tuesday 25 June 2013

நீங்கள் NRIயா அல்லது இந்தியகுடிமகனா? ​தெரிந்துகொள்வோம் வாருங்கள்...


இந்தியாவில் ஒருவரது வாழ்நிலையானது (residential status) அவர் தங்கியிருந்த நாட்களை அடிப்படையாக வைத்து முடிவு செய்யப்படுகிறது.
இந்திய வருமானவரிச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் வாழும் இந்தியர் (ரெசிடன்ட் இந்தியன்), இந்தியாவில் எப்பொழுதாவது வசிக்கும் இந்தியர் (Not Ordinarily Resident), வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ.) என்னும் வகைப்பாடுகளின் பொருளை அறிந்து கொள்வோம்.

இந்தியாவில் வாழும் இந்தியர்(ரெசிடென்ட் இந்தியன்):
ஒரு நபர் ரெசிடென்ட் இந்தியன் என்று வகைப்படுத்தப்பட பின் வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
1. அவர் நடப்பாண்டில் தொடர்ச்சியாகவோ விட்டுவிட்டோ மொத்தமாக 60 நாட்களுக்கு மேல் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். (மற்றும்)
2. கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் ஆண்டிற்கு முதல் ஆண்டில் தொடர்ச்சியாகவோ விட்டுவிட்டோ மொத்தமாக 182 நாட்களுக்கு மேல் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். (அல்லது)
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் ஆண்டிற்கு முந்தைய 4 ஆண்டுகளில் தொடர்ச்சியாகவோ விட்டுவிட்டோ மொத்தமாக 365 நாட்களுக்கு மேல் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் ஆண்டிற்கு முதல் ஆண்டில் கட்டுப்பாடும் நிர்வாகமும் முழுமையுமாக இந்தியாவிற்கு வெளியில் அமைந்திருந்த ஒரு இந்து கூட்டுக் குடும்பம் அல்லது ஒரு நிறுவனம் அல்லது பல மனிதர்கள் சேர்ந்த அமைப்பு ஆகியவை ரெசிடென்ட் இந்தியன்என்னும் தகுதியைப் பெற இயலாது. இது போன்று இல்லாது கட்டுப்பாடும் நிர்வாகமும் முழுமையுமாக இந்தியாவிற்குள்ளேயே அமைந்திருந்த மேற்படி அமைப்புகள் ரெசிடென்ட் இந்தியன் என்னும் வகைப்பாட்டிற்குள் வரும்.

இந்தியாவில் எப்பொழுதாவது வசிக்கும் இந்தியர் (Not Ordinarily Resident):
ஒரு நபர் இந்தியாவில் எப்பொழுதாவது வசிக்கும் இந்தியர் என்று வகைப்படுத்தப்பட பின் வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
1. அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் ஆண்டிற்கு முந்தைய 10 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்கக் கூடாது.
(அல்லது)
கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் ஆண்டிற்கு முந்தைய 7 ஆண்டுகளில் தொடர்ச்சியாகவோ விட்டுவிட்டோ மொத்தமாக 729 நாட்களோ அல்லது அதற்குக் குறைவாகவோ இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.
2. ஒரு இந்து கூட்டுக் குடும்பம் ஒன்று இந்தியாவில் எப்பொழுதாவது வசிக்கும் இந்தியர் (Not Ordinarily Resident) என்று வகைப்படுத்தப்பட அதன் மேனேஜர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் ஆண்டிற்கு முந்தைய 10 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்கக் கூடாது.
(அல்லது)
அதன் மேனேஜர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் ஆண்டிற்கு முந்தைய 7 ஆண்டுகளில் தொடர்ச்சியாகவோ விட்டுவிட்டோ மொத்தமாக 729 நாட்களோ அல்லது அதற்குக் குறைவாகவோ இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.


வெளிநாடு வாழ் இந்தியர் (என்ஆர்ஐ):
1. 1999 ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தின்படி வெளிநாடு வாழ் இந்தியர் என்பவர் இந்தியக் குடிமகனாகவோ, இந்திய வம்சாவளியினரான வெளிநாட்டவராகவோ இருக்க வேண்டும்.
(மற்றும்)
பணிக்காகவோ, தொழில் அல்லது வர்த்தகத்தில் ஈடுபடவோ, இந்தியாவை விட்டு வெளியில் தங்க வேண்டும் என்னும் நிச்சயமான எண்ணத்தில் இந்தியாவை விட்டு வரையறுக்கப்படாத காலத்திற்கு வெளிநாடுகளில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. முந்தைய நிதி ஆண்டில் 182 நாட்களுக்குக் குறைவாக இந்தியாவில் வசித்துள்ள ஒரு இந்தியத் தனிநபர் வெளிநாடு வாழ் இந்தியர் என்று வகைப்படுத்தப்படுவார்.

இந்திய வம்சாவளியினர் (Person of Indian Origin):
இந்தியக் குடிமகன் அல்லாத ஒரு நபர் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர் என்று வகைப்படுத்தப்பட பின் வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
1. அவர் பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்தின் குடிமகனாக இருக்கக் கூடாது.
(மற்றும்)
அவர் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்
(அல்லது)
அவரோ, அவரது பெற்றோரில் ஒருவரோ அல்லது அவரது ஒரு பாட்டனோ பாட்டியோ 1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியக் குடிமகனாக இருந்திருத்தல் வேண்டும்.
ஒரு இந்தியக் குடிமகன் அல்லது இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர் ஒருவரது கணவர்/மனைவி (பாகிஸ்தான் அல்லது வங்கதேசத்தின் குடிமகனாக இருக்கக் கூடாது) அவர் இந்திய வம்சாவளியினைச் சேர்ந்தவர் என்று கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டு, கணவர்/மனைவியோடு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வைப்புக் கணக்குகளை இருவரும் சேர்ந்து இயக்க அனுமதிக்கப்படுவார்.
இந்திய வம்சாவளியினரும் வெளிநாடு வாழ் இந்தியர்களைப் போலவே இந்தியாவில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி இயக்க அனுமதிக்கப்பட்டு இக்காரணத்துக்காக, அவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர் என்றே குறிப்பிடப்படுவர்.



தொகுப்பு : மு அஜ்மல் கான்.


No comments:

Post a Comment