Monday 29 October 2012

ஏலச்சீட்டு : நேர்மைக்கு ஒரு சோதனை!


மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் தந்த ஒரு செய்தி. "தீபாவளி சீட்டுக்கு பொருட்கள் தர முடியாததால், ஒரே குடும்பத்தை சேர்ந்த, எட்டு பேர் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் ". தீபாவளி சீட்டு நடத்திய இருவரால் - சொன்னப்படி, சொன்ன நேரத்தில் பணத்தை தர இயலவில்லை. விளைவு, ஊராருக்கு பயந்து சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்திலிருந்த எட்டு பேர் ஒட்டு மொத்தமாக தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இது குறித்த தினமலர் இணைய செய்தி. ​

"வேலூர் மாவட்டம், ஆற்காட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது தம்பி வெங்கடேசன். விவசாயிகளான இருவரும் அக்கா, தங்கைகளான சுகந்தி, 40, இறைமதி, 30 ஆகியோரை திருமணம் செய்து கொண்டனர். சுகந்திக்கு, இரண்டு மகள்களும், இறைமதிக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். சுகந்தியும், இறைமதியும் தீபாவளி சீட்டு நடத்தினர். இவர்களிடம் மாதம், 250 ரூபாய் வீதம் கட்டினால், ஆண்டு கடைசியில் தீபாவளிக்கு ஒரு வாரம் முன், கால் பவுன் தங்கம், மூன்று பிளாஸ்டிக் நாற்காலி, 1,500 ரூபாய் மதிப்புள்ள பட்டாசு, தலா, இரண்டு கிலோ இனிப்பு, காரம், ஒரு மிக்சி, ஒரு கிரைண்டர் கொடுப்பதாக கூறினர்.

இவர்கள் பேச்சை நம்பி, வேப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 1,356 பேர் பணம் கட்டினார். அதற்கு ரசீதும் கொடுத்தனர். மாதா, மாதம் சேர்ந்த பணத்தை வட்டிக்கு விட்டு, தீபாவளி சீட்டுக்கான பொருட்களை கொடுப்பது வழக்கம். அதே போல் இவர்களிடம் சேர்ந்த பணத்தை வட்டிக்கு விட்டனர். வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பித் தரவில்லை. பவர் ஊரை விட்டும் ஓடி விட்டனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில், சீட்டுக்கான பொருட்களை சீட்டு கட்டியவர்கள் கேட்க துவங்கினர்.

பலரிடம் கடன் கேட்டும் கிடைக்காத காரணத்தினால், சுகந்தி, இறைமதி, சங்கீதா, கோமதி, ஹேமலதா, லாவண்யா, கோவிந்தராஜ், வெங்கடேசன் ஆகியோர் நேற்று அதிகாலை அரளி விதை அரைத்து குடித்தனர். மேலும், தூக்க மாத்திரையை சாப்பிட்டனர். இதில், எட்டு பேரும் மயங்கி விழுந்தனர். காலை, 10:00 மணிக்கு மேல், வீட்டு கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், வீட்டுக்கு சென்று பார்த்தனர். வீட்டில் மயங்கிக் கிடந்தவர்களை மீட்டு, வாலாஜா பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர்களது உடல் நிலை, மேலும் கவலைக்கு இடமானதால், அங்கிருந்து, சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்" என்கிறது செய்தி. நிச்சயம் "வாழ்க்கையும், வாழுவதும் எளிதன்று..." அதற்காக மரணமும் நமக்கு சுலபமாகிவிடாது. மேற் கூறிய சம்பவம் சீட்டு நடத்தி தம் வாழக்கையை தொலைத்தவர்களின் ஞாபகங்களை கிளறியது.

நானும் கூட நண்பர்களிடம் பணம் போட்டு இழந்திருக்கிறேன். தொழில் நிமித்தமாக பழகுபவர்கள், "நான் ஒரு ஏலச்சீட்டு நடத்தறேன். போடுங்க" எனும் போது தவிர்க்க இயலாது. "சிறிய தொகை. வந்தா வருது - போனா போகுது" சீட்டு போடவில்லை எனில் பழக்கத்தில் ஓட்டை விழுந்து தொழில் பாதிக்கும். ஒருவர் ஏலச்சீட்டு, மாதந்திர சீட்டு போன்றவற்றை துவங்கும்போதே - நம்மால் யூகித்து விட முடியும். இவரால் இதை ஒழுங்காக நடத்த முடியுமா, முடியாதா என்று.

"அதீத செலவாளிகளால் இவற்றை திறம்பட நடத்தவே இயலாது" ஏலச் சீட்டு, மாதந்திர, வாரந்திர சீட்டு பிடித்து ஜெயித்தவர்களை விட தோற்றவர்களே அதிகம். தன் வரை சிக்கனமாக உள்ளவனால், பண விஷயத்தில் மிகுந்த மனக்கட்டுப்பாடு உள்ளவனால் மட்டுமே -இத்தகைய தொழிலில் ஜெயிக்க முடியும். "எவ்வளவு பணம் கையில் புழங்கினாலும் அது நம் பணம் இல்லை" என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஏலச்சீட்டு மட்டும் எந்த நிதி நிறுவனமாயினும் திவாலாக இரண்டே காரணம். ஒன்று நிறுவனம் நடத்துபவர்களால், மற்றது வாடிக்கையாளர்களால்.

ஒரு உதாரணம். ஓரளவுக்கு வளர்ந்துள்ள ஒரு ஏலச்சீட்டு நிறுவனத்தில் அவர் பணி புரிந்தார். அவருக்கு குறைவான சம்பளம் என்பதால் - வருமானத்திற்கு வேறு தொழில் செய்ய நினைத்தார். தாமே சிறிய அளவில் ஏலச்சீட்டு நடத்தினால் என்ன என்று நினைத்தார். பெரிய தொகையை நிறுவனத்திற்காக போடுபவர்கள், தனக்காக சிறிய தொகையை போட மாட்டார்களா என்ன என்று நினைத்து, தான் பணிபுரியும் நிறுவன வாடிக்கையாளர்களிடமே கேட்டார். பலன் இருந்தது. ஏலச் சீட்டு நிறுவனத்திற்கு மாதம் பத்தாயிரம் கட்டுபவர்கள், இவரிடம் ஆயிரம் ரூபாய் கட்ட மறுக்கவில்லை.


ஏலச்சீட்டு எதிர்பார்த்ததற்கு மேல் சிறப்பாக போனது. ஆனால் அவரின் நேர்மைக்கு ஒரு சோதனை ஏற்பட்டது. அந்த சோதனையில் - பண விஷயத்தில் தோற்று போனார். திடீரென்று மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட வைத்திய செலவு வளர்ந்ததில், செலவுக்கு சீட்டு பணத்தை தொட்டார். விளைவு. வாடிக்கையாளர்களை எதிர் கொள்வதில் சிரமம். "பையன் ட்ரீட்மெண்டக்கு தானே செலவு பண்ணினேன். ஆனால் யாரும் என் சிரமத்தை புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க" என்றார். "இந்த பணம் இல்லேன்னா வைத்திய செலவுக்கு நீங்க என்ன பண்ணி இருப்பீங்க." என்று கேட்டேன்.

அவருக்கு புரிந்தது. வேறு ஒரு வழியை நாடி இருப்பார். பணம் கையில் இருந்ததால் அந்த வழியை சிந்திக்கவில்லை. விளைவு. கெட்ட பெயர். வாடிக்கையாளர்கள், "சொன்னப்படி பணம் நீங்க தரலன்னா - உங்க ஆபீஸ்ல வந்து சொல்லி உங்க வேலைக்கே உலை வைச்சிடுவோம்" என்றதும் தான் சம்பவத்தின் வீரியம் புரிந்து - சிலரிடம் கடன் வாங்கி, மனைவி நகையை விற்று பிரச்சனையை தீர்த்தார். இதை முதலிலேயே செய்திருந்தால் - வெற்றிக்கரமாக ஏலச்சீட்டை தொடர்ந்திருக்கலாம். இப்போது இவரை பார்த்தாலே தலை தெறிக்க ஓடுகிறார்கள் வாடிக்கையாளர்கள்.

பெரும்பாலும் சீட்டு நடத்துவோர் "எவ்வளவு பணம் கையில் புழங்கினாலும் அது நம் பணம் இல்லை" என்கிற எண்ணம் இல்லாததால் தான் அவர்கள் தரப்பில் தோற்பது. மேற் கண்ட சம்பவத்தில் நண்பர் மருத்துவ செலவு செய்தார். பலர் நிறுவன பணத்தில் 'உல்லாசமாய்' இருந்து வீணாய் போகிறார்கள். அடுத்து வாடிக்கையாளர்களால் திவாலாகும் மனிதர்கள். தினமலர் செய்தியில் நிகழ்ந்தவை போல வாடிக்கையாளர்கள் வாங்கிய பணத்தை சரி வர கட்டாமை. பெரிய ஏலச் சீட்டு நிறுவனங்கள் வீட்டு பத்திரம் மற்றும் வசதி படைத்தவர்களின் ஜாமின் கையெழுத்தை பெற்று கொண்டு தான் பணம் தருகிறார்கள்.

வாங்கிய பணத்தை ஒழுங்காக தரவில்லை எனில் அடியாளை விட்டு மிரட்ட தவறுவதில்லை. அதனால் பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களால் திவாலாகும் வாய்ப்பு இல்லை. ஆனால் வீட்டில், அதுவும் பெண்களால் நடத்தப்படும் சீட்டுகளில் - அவர்களால் கறாராக பேச முடியாது. "வாடிக்கை கெட்டுவிடும்" என்பதனால். மேலும் முகத்தாட்சண்யம் பார்ப்பார்கள். விளைவு. வடிவேல் "காத்தவராயன்" படத்தில் வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு அலைந்தது போல அலைய வேண்டியது தான்.
அதனால் சரியான வாடிக்கையாளர்களை தேர்வு செய்வதில் புத்திசாலித்தனம் வேண்டும். நீங்கள் கறார் பேர்வழியாக இருக்கும்பட்சத்தில் உங்களை ஏமாற்றும் நோக்கத்தில் உங்களை யாரும் அணுகவே மாட்டார்கள. எல்லாவற்றுக்கும் மேலாக, சீட்டு நடத்துபவர்கள் "இது ஏழைகள் அரும்பாடுபட்டு சம்பாதித்த பணம். உயிரினும் மேலாக பாதுகாக்க வேண்டும்" என்று நினைக்க வேண்டும். பணம் பெற்றவர்களோ "வாங்கியது மாதிரி திருப்பி கொடுக்க வேண்டும். கொடுக்காமல் எத்தனையோ அவலங்களுக்கு காரணமாவோம்" என்று நினைத்திட வேண்டும்.  "யாரிடம் பணம் போடுவது" என்று வாடிக்கையாளர்களும் "யாருக்கு பணம் கொடுப்பது" என்று நிர்வாகமும்- சரியான புரிதலை அறிவுணர்ச்சியுடன் கொண்டால், எங்கும் எப்போதும் ஏமாற வாய்ப்பில்லை.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment