Monday 30 July 2012

ஜகாத் வருடா வருடம் வழங்க வேண்டுமா ? ஏன்? -ஒரு இஸ்லாமிய பார்வை




ஒரே பொருளுக்கு வருடா வருடம், ஜகாத் வழங்க வேண்டும்.....

'ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும்' என குர்ஆனிலோ நபி மொழியிலோ கூறப்பட வில்லை. வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என ஒரு ஹதீஸை கொண்டு வந்தால் ஒரு லட்சம் ரூபாய் தரப்படும்' என சவால் விட்டுப் பேசி வருகிறார்கள்.

ஒரு லட்சம் என சவால் விட்டுப் பேசி விட்டதால் அவர்களின் கருத்தில் உண்மை இருப்பதாக அர்த்தமாகிவிடாது. வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்பதற்கு ஹதீஸை எடுத்துக் காட்டியப் பின்பும் அதனைப் பலவீனம் எனக் கூற காரணம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இது இவர்களின் போலித் தனத்தை காட்டுகிறது.


ஜகாத் கொடுங்கள்!..

وَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ) (البقرة:110)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஜகாத்தை வழங்குங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடத்தில் பெற்றுக் கொள்வீர்கள்! நீங்கள் செய்பவற்றை நிச்சயம் அல்லாஹ் பார்க்கிறான். (2:110)

தொழுகையைப் பற்றிக் கூறப்படும் வசனங்களில் எல்லாம் ஜகாத்தையும் சேர்த்தே கூறப்படுகிறது. 
ஆனால், எப்போது, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற அளவு காலம் பற்றி குறிப்பிடாமல், ஜகாத் கொடுங்கள் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. எனினும், ஜகாத் கடமையாகுவதற்கான உச்ச வரம்பு (நிஸாப்), எவ்வளவு வழங்க வேண்டும், (சதவிகிதம்) எப்போது வழங்க வேண்டும் ஆகிய அனைத்திற்கும் இறைத்தூதர் தெளிவாக விளக்கமளித்துள்ளார்கள். 

அளவு நிர்ணயம்...

ஒருவன் மீது ஜகாத் கடமையாவதற்கான செல்வத்தின் உச்ச வரம்பை நிஸாப் என்று கூறப்படும். வெள்ளி, விளைபொருள், கால்நடை ஆகிய ஒவ்வொன்றிற்கும் நிஸாபை தீர்மானித்து தெளிவுபடுத்திய நபி மொழிகள் ஏராளம். அவற்றில் சில!


 1459- عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ  رضى الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ e  قَالَ « لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ مِنَ التَّمْرِ صَدَقَةٌ ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ مِنَ الْوَرِقِ صَدَقَةٌ ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ مِنَ الإِبِلِ صَدَقَةٌ »رواه البخاري

"ஐந்து வஸக்குகளை விடக் குறைவாக உள்ள பேரீச்சம் பழத்தில் ஜகாத் இல்லை. ஐந்து ஊக்கியாக்களை விடக்குறைவாக உள்ள வெள்ளியில் ஜகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களை விடக் குறைவானவற்றிலும் ஜகாத் இல்லை." என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி:1459)

'வஸக்' என்பது அறுபது ஸாவ் ஆகும். ஒரு ஸாவ் என்பது 2.156 கி.கிராம். இதன்படி ஐந்து வஸக் என்பது 5 x 60 x 2.156 = 646.8 கி.கிராம். அதாவது விளை பொருளில் ஜகாத் கடமையாகுவதற்கான உச்ச வரம்பு (நிஸாப்) சுமார் 650 கிலோ ஆகும்.

'ஊக்கிய' என்பது 40 திர்ஹங்களாகும். ஒரு திர்ஹம் என்பது சுமார் 2.975 கிராம். 
ஐந்து ஊக்கிய என்பது:
5 x 40 x 2.975 = 595 கிராம்.

இதன்படி, வெள்ளியில் ஜகாத் கடமையாவதற்கான உச்ச வரம்பு (நிஸாப்) 595 கிராம் ஆகும். 
(யூசுப் கர்ழாவி அவர்கள் எழுதிய 'ஃபிக்கு ஜகாத்' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட நவீன கால அளவுகளாகும் இவை. அளவுகள் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே இவ்வளவின் விபரத்தை பதிவு செய்துள்ளார்.) விளைபொருள் 650 கிலோவுக்கும் வெள்ளி 595 கிராமிற்கும் குறைவாக ஒருவனிடம் இருந்தால் அப்போது ஜகாத் கடமையில்லை. இந்த அளவும், இதைவிட கூடுதலாகவும் ஒருவனிடம் இருந்தால் அப்போது அவன் மீது ஜகாத் கடமையாகும்.

ஆடு, மாடு ஆகியவற்றில் ஜகாத் கடமையாவதற்கான குறைந்தபட்ச அளவினை (நிஸாபை) விவரிக்கும் நபி மொழிகள் ஏராளம் உண்டு. அதனை இங்கே எழுத வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அதனை இங்கு குறிப்பிட வில்லை.

எத்தனை சதவிகிதம் வழங்க வேண்டும்?

ஜகாத் கடமையான பொருட்களில் ஒவ்வொன்றிலும் எத்தனை சதவிகிதம் வழங்க வேண்டும் என பின் வரும் நபிமொழிகள் விளக்குகிறது.

1483 عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ - رضى الله عنه عَنِ النَّبِىِّ e  قَالَ « فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ ، وَمَا سُقِىَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ » رواه البخاري.
"மழை, ஊற்று, மற்றும் தானாகப் பாயும் நீரால் விளைந்த பொருளில் பத்தில் ஒரு பங்கும் ஏற்றம், கமலை கொண்டு நீர் பாய்ச்சி விளைந்த பொருளில் இருபதில் ஒரு பங்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி. 1483)

1454- أَنَّ أَنَساً حَدَّثَهُ أَنَّ أَبَا بَكْرٍ رضى الله عنه كَتَبَ لَهُ هَذَا الْكِتَابَ لَمَّا وَجَّهَهُ إِلَى الْبَحْرَيْنِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ « هَذِهِ فَرِيضَةُ الصَّدَقَةِ الَّتِى فَرَضَ رَسُولُ اللَّهِ e عَلَى الْمُسْلِمِينَ ، وَالَّتِى أَمَرَ اللَّهُ بِهَا رَسُولَهُ ، فَمَنْ سُئِلَهَا مِنَ الْمُسْلِمِينَ عَلَى وَجْهِهَا فَلْيُعْطِهَا ، وَمَنْ سُئِلَ فَوْقَهَا فَلاَ يُعْطِ....... ، وَفِى الرِّقَةِ رُبْعُ الْعُشْرِ ، فَإِنْ لَمْ تَكُنْ إِلاَّ تِسْعِينَ وَمِائَةً فَلَيْسَ فِيهَا شَىْءٌ ، إِلاَّ أَنْ يَشَاءَ رَبُّهَا » .رواه البخاري 

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
.... வெள்ளியில் நாற்பதில் ஒரு பங்கு கொடுக்க வேண்டும். அதில் நூற்றுத் தொண்ணூறு திர்ஹம் மட்டும் இருந்தால் உரிமையாளன் நாடினாலே தவிர ஜகாத் இல்லை.' என்று இருந்தது (புகாரி:1454)

எப்போது ஜகாத் கொடுக்க வேண்டும்?

மேற்கண்ட வெவ்வேறு நபிமொழிகளில், பல்வேறு பொருட்களின் ஜகாத்திற்கான நிஸாப், மற்றும் எத்தனை சதவிகிதம் வழங்கப்பட வேண்டும் என்ற விபரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. எப்போது வழங்க வேண்டும் என்பதற்கான விளக்கம் வேறோரு நபிமொழியில் அளிக்கப்பட்டுள்ளது. 

قال أبو داود وقرأت في كتاب عبد الله بن سالم بحمص عند آل عمروبن الحارث الحمصي عن الزبيدي قال وأخبرني يحيى بن جابر عن جبير بن نفير عن عبد الله بن معاوية الغاضري من غاضرة قيس قال قال النبيe  ثلاث من فعلهن فقد طعم طعم الإيمان من عبد الله وحده وأنه لا إله إلا الله وأعطى زكاة ماله طيبة بها نفسه رافدة عليه كل عام ولا يعطي الهرمة ولا الدرنة ولا المريضة ولا الشرط اللئيمة ولكن من وسط أموالكم فإن الله لم يسألكم خيره ولم يأمركم بشره ( رواه أبو داود )

"மூன்று விஷயங்களை செய்யும் ஒருவர் ஈமானின் ருசியை சுவைத்துவிட்டார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை மட்டும் வணங்குவது, தன் செல்வத்திலிருந்து மன விரும்பி ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுத்து வருவது ..." என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காழிரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அபூதாவூத், தப்ரானி, பைஹகி, புகாரி யின் தாரீக் அல் கபீர், முஃஜம் ஸஹாபா, அல் ஆஹாது வல் மஃதானி.)

இந்நபி மொழியினை ஹதீஸ் கலை வல்லுனர்கள், குறிப்பாக இப்னு முலக்கின் அவர்களும், சமீபகால பேரறிஞர் அல்பானி போன்ற பலரும் ஸஹீஹ் எனக் கூறுகின்றனர். ஹஸன் என்ற தரத்தைவிடவும் சிறந்தது என சிலர் ஏற்றுள்ளனர்.

ثم كان مانقلت العامة عن رسول الله e  في زكاة الماشية والنقد أنه أخذها في كل سنة مرة (الرسالة)

"கால்நடை மற்றும் நாணயங்களின் ஜகாத்தை ஒவ்வொரு வருடமும் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் வசூலித்துள்ளார்கள் என்பதை இறைத்தூதரிடமிருந்து (நபித்தோழர்கள்) அனைவரும் கூறியுள்ளனர்." (அர்ரிஸாலா)

ஒவ்வொரு வருடமும் ஒரு முறை ஜகாத் வழங்க வேண்டும் என்பதை இந்த சான்றுகள் உறுதி செய்கின்றன. 

கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்க வேண்டாமா?

1. இறைவன் ஜகாத் கொடு என்று கூறுகிறான்.
2. ஒருவரிடம் நிஸாப் அளவு செல்வம் இருந்தால் அவர் ஒவ்வொரு வருடமும் தன் செல்வத்திலிருந்து குறிப்பிட்ட சதவிகிதம் ஜகாத் வழங்க வேண்டும் என இறைத்தூதர் கூறியுள்ளார்கள். 

இச்சான்றுகளின் அடிப்படையில், ஒருவனிடம் நிஸாப் அளவு செல்வம் இருக்கும் காலமெல்லாம் அவன், தன் வசமுள்ள அனைத்துச் செல்வத்திற்கும் வருடா வருடம் ஜகாத் வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். இறைத்தூதருடன் வாழ்ந்த நபித்தோழர்கள், ஹதீஸ் கலையின் அறிஞர்கள், (அவசியப்படும் போது மாபெரும் இமாம் என இவர்கள் கூறிக் கொள்ளும்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல், இமாம் மாலிக் ஆகியோர் சுருக்கமாகச் சொல்வதானால் உலகமே இவ்வாறுதான் புரிந்து கொண்டுள்ளது. எனவே, இதற்கு மாற்றமாக, ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத் என யார் கூறி னாலும், அவர் தன் கருத்துக்கு சான்றுகள் தரவேண்டும். 

'ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத் வழங்க வேண்டும்' என இறைவன் கூறியதாகவோ, இறைத்தூதர் கூறியதாகவோ ஒரு சான்று கூட தராமல், தான் புரிந்து கொண்டது போல்தான் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் எனப்பேசி வருவது அறிவுடையோர் கருத்தாக இருக்க முடியாது.


தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment