Sunday 15 July 2012

உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம் மூளை வளர்ச்சி!


மூளை வளர்கிறது என்றால் அறிவும் வளர்கிறது என்பதுதான் பொதுவான நம்பிக்கை. ஆனால் மூளையின் குறிப்பிட்ட பாகங்கள் தவிர்த்த பிற பாகங்களுக்கும் அறிவு வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறது நரம்பியல்.
ஞாபக சக்திக்கு காரணமான ஹிப்போகாம்பஸ் எனும் மூளை பகுதியின் வளர்ச்சி அறிவு வளர்ச்சியுடன் நேரடித் தொடர்புடையது. ஆனால், நாற்றம் அல்லது வாசனை நுகர்தலுக்கு காரணமான ஆல்பாக்டரி பல்பு மற்றும் உறக்கம், உடல் வெப்பம், பசி, தாகம் போன்ற உடலியல் பண்புகளுக்கு காரணமான ஹைப்போதலாமஸ் போன்ற பகுதிகளுக்கும் அறிவுக்கும் ஒரு தொடர்பும் இல்லையாம்.
நியூரோஜெனிசிஸ் என்று அழைக்கப்படும் (மூளையிலுள்ள) நரம்புகளின் வளர்ச்சியே மூளை வளர்ச்சி எனப்படுகிறது. குழந்தைப் பருவம் முடிந்து, பருவம் எய்தி முதிர்ச்சி அடைந்த பின்னர் மூளை வளர்ச்சி நின்றுவிடும் என்ற ஒரு நம்பிக்கை பல வருடங்களுக்கு முன்பு இருந்தது. ஆனால் சமீபத்திய ஆய்வுகளில் குழந்தை பருவம் முடிந்த பின்னரும் மனிதர்களின் மூளையானது புதிய நரம்புகளை உற்பத்தி செய்து தொடர்ந்து வளர்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது.
உதாரணமாக, மூளையின் ஹிப்போகாம்பஸ் மற்றும் ஆல்பாக்டரி பல்பு ஆகிய இரு பகுதிகளில் மட்டும் புதிய நரம்புகள் தோன்றுவதைக் கூறலாம். இந்த வரிசையில், ஹைப்போதலாமஸ் பகுதியிலும் புதிய நரம்புகள் தோன்றுவது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த நரம்புகளுக்கு டானிசைட்ஸ் என்று பெயர்.
ஆனால் இந்த பகுதியில் புதிய நரம்புகள் தோன்றுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை!
ஞாபக சக்திக்கு காரணமான ஹிப்போகாம்பஸ், நுகர்தலுக்கும் காரணமான ஆல்பாக்டரி பல்பு பகுதிகளில் புதிய நரம்புகள் வளர வேண்டியது அவசியம். ஏனென்றால், ஹிப்போகாம்பஸ் பகுதியானது தினம் தினம் புதிய புதிய நினைவுகளை உருவாக்கி சேமிக்க வேண்டும். அதுபோலவே ஆல்பாக்டரி பல்பு பகுதி யானது புதிய புதிய வாசனை அல்லது நாற்றங்களை நுகர வேண்டும். இதற்கு புதிய நரம்புகள் அவசிய மாகிறது.
ஆனால், `மாற்றங்கள் இல்லாத தினசரி உடலியல் நிகழ்வுகளான உறக்கம், உடல் வெப்பம், பசி மற்றும் தாகத்துக்கு காரணமான ஹைப்போதலாமஸ் பகுதியில் புதிய நரம்புகள் வளர்வதற்கான காரணம் என்ன?’ என்பது இதுவரை ஒரு புரியாத புதிராகவே இருந்தது.
இந்த புதிருக்கான விடையைத் தேடிய அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் சேத் பிளாசாவுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.
மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியிலுள்ள மீடியன் எமினென்ஸ் என்னும் பகுதியில் தோன்றும் புதிய `டானிசைட்’ நரம்புகளே உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றன எனும் அறிவியல் உண்மைதான் அது!
அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படும் விலங்குகள் வயது முதிர்ச்சி அடைந்த பிறகு உடல் பருமன் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படும் என்பது முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. இதற்கு, ஹைப்போதலாமஸ் பகுதியில் நிகழும் நரம்பு வளர்ச்சி அல்லது நியூரோஜெனிசிஸ் காரணமாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர் பிளாசா எண்ணினார்.
இந்த கூற்றிலிருக்கும் உண்மையை கண்டறிய, எலிகளுக்கு பிறந்தது முதல் தொடர்ந்து அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பல்வேறு கால இடைவெளிகளில் ஹைப்போதலாமஸ் பகுதியில் நரம்பு வளர்ச்சி நிகழ்கிறதா என்பது கண்காணிக்கப்பட்டது.
பரிசோதனையின் முடிவில், கொழுப்புச் சத்து கொடுக்கப்பட்ட மற்றும் கொடுக்கப்படாத இள வயது எலிகளின் நரம்பு வளர்ச்சியில் எந்தவித வித்தியாசமும் இல்லை என்று தெரியவந்தது. ஆனால் ஆச்சரியப்படும்படியாக, அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு கொடுக்கப்பட்ட வயதான எலிகளின் ஹைப்போதலாமஸ் பகுதியில் மட்டும் டானிசைட் நரம்பு வளர்ச்சியானது `நான்கு மடங்கு’ அதிகரித்தது கண்டறியப்பட்டது. மேலும் இந்த எலிகள் அதிக எடையையும், அதிக கொழுப்பு படிவையும் கொண்டு இருந்ததும் தெரியவந்தது.
உடல் எடை அதிகரிப்பதற்கும், அதிக கொழுப்புப் படிவு உருவாவதற்கும் காரணம் என்ன என்பதை திட்டவட்டமாக நிரூபிக்க, அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு கொடுக்கப்பட்ட எலிகளின் மீடியன் எமினென்ஸ் பகுதியிலுள்ள டானிசைட் நரம்புகள் எக்ஸ்ரே கதிர்கள் மூலம் கொல்லப்பட்டன. இதன் காரணமாக, அந்த எலிகளின் உடல் எடையும், கொழுப்புப் படிவும் வெகுவாக குறைந்து போனது.
இதன் மூலம், உடல் எடை அதிகரிப்பதற்கும், அதிக கொழுப்புப் படிவு உருவாவதற்கும் ஹைப்போதலாமஸ் பகுதியில் நிகழும் அதிகப்படியான டானிசைட் நரம்பு வளர்ச்சியே காரணம் என்பது நிரூபணமானது என் கிறார் ஆய்வாளர் பிளாசா.
நன்றி : முனைவர் பத்மஹரி

No comments:

Post a Comment