Sunday 13 May 2012

அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது ஏன் ?- ஒரு சிறப்பு பார்வை ..(பாகம்-1)...

அன்னை, இறைவன் இவ்வுலகில் மனிதனுக்கு அளித்த அற்புதமான உறவாகும். அம்மா, மம்மி, மதர், அம்மே (மளையாலாம்)உம்மா(உருது),மா (ஹிந்தி), ஐ (கொங்கனி,மராத்தி),மாமா(அரபி),அமெ (நேபாளம் )என்று பல்வேறு மொழிகளில் தாய்க்கான சொற்கள் காணப்பட்டாலும் அவற்றிற்கிடையே ஒரு இனம் புரியாத தொடர்பிருப்பதை உணரமுடியும்.




அம்மா…
                   இச்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்களும்,தொணிகளும் ஆயிரமாயிரம்… அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது. உலக அளவில் அம்மாக்களைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் Mother’s Day ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.

தாயிற்சிறந்த கோவிலுமில்லை…..” என்ற வரிகள் தாய்மையின் புனிதத்துவம், தாய்மையின் பெருமை, தாய்மையின் தியாகம் போன்றவற்றை எடுத்துக்கூறத்தக்க வரிகளாகும்.
இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை.ஒரு பெண்ணானவள் மகளாக,  சகோதரியாக,  தாயாக, தாரமாக,  தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் ‘அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது;  தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாக உலகில் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலமும் சிறந்தது என்று ஒளவைப் பிராட்டியார் ஆத்திசூடியில் குறிப்பிட்டிருந்தார். அது போன்று மாதா, பிதா, குரு, தெய் வம் என்று இன்னொரு கவிஞர் பாடியிருக்கிறார். ஒரு பிள்ளைக்கு அன்னையும், பிதாவும், குருவும் அவர்களின் வழிகாட்டிகளாக அமைந்திருந்தாலும் இவ்விரு கவிஞர்களும் அன்னைக்கே முதலிடம் கொடுத்துள்ளார்கள். இதிலிருந்து அன்னையின் மகத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

தனது உணவில் ஒரு பகுதியை கருவிலிருக்கும் குழந்தைக்கு 10 மாதங்கள் ஊட்டி வளர்த்த தாய், குழந்தையை பிரசவித்த பின்னர் தனது உதிரத் தையே பாலாக மாற்றி பிள்ளையை வளர்ப்பாள். இவ்விதம் தன் பிள் ளைகளுக்காக வாழ்வையே அர்ப்பணிக்கும் அன்னையர் தினம் ஓவ்வொரு வருடம் மே, இரண்டாவது ஞாயிற்றுகிழமையன்று நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது.

தன்னை பெற்றெடுத்து, இவ்வுலகில் வாழவைத்துக் கொண்டிருக்கும் தாய்க்கு அன்புடன் நன்றி தெரிவிக்கும் தினமே அன்னையர் தினமாகும். தராதரம் பாராமல் தாயார் ஏழையாக இருந்தாலும், கோடீஸ்வரியாக இருந்தாலும், வயோதிபத்தை தாண்டியிருந்தாலும், நடக்க முடியாது படுத்த படுக்கையில் இருந்தாலும் ஒரு மனிதன் தனது தாயை மதித்து அன்பு செலு த்தும் தினமே அன்னையர் தினமாகும். கீழைத்தேய பாரம்பரியங்களுக்கு அமைய இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அரபு நாடுகளின் மக்கள் தங்கள் அன்னையரை மிக உயர் நிலையில் வைத்து அன்புடன் கெளரவமாக, வாழ்நாள் பூராவும் பணிவிடை செய்து, நன்றிக்கடனை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அன்னையர் தினம் தோன்றிய வரலாறு .......

அன்னையர் தினம் ” Mother’s Day உலகெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்த பின்னணி பற்றி நாம் ஒரு சிறிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.  அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன. பண்டைய கால மனிதர்களால் அன்னையர் புராணங்கள் கதையாக வழங்கப்பட்டு வந்தன.

வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி "ரேஹா "மற்றும் "ரியா' அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்.
ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக :சைபெலி" ,"சிபெல்லா'என்ற பெண் தெய்வங்களை தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு வீர சாகசங்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது.

ஆனால் நாம் கொண்டாடும் அன்னையர் தினம் அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அன்னா ஜார்விஸ்என்ற பெண்மணி ஒரு போரின்போது பலியான அமெரிக்க வீரர்களின் குடும்பங்களின் நல்வாழ்வுக்காகவும், சமாதானத்திற்காகவும் பாடுபட்டு தனது இறுதிக் காலக்கட்டம் வரை சமூக சேவகியாக வாழ்ந்து மறைந்தவர். அவருடைய மகளான அன்னா ஜார்விஸ் முதன் முதலாக தனது அன்னையின் நினைவாக 1908 ஆம் ஆண்டில் தனது சொந்த ஊரிலிலுள்ள சர்ச்சில் மே மாதத்தின் ஞாயிற்றுக்கிழமை ஒன்றில் சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினாராம். அன்று முதல் உலகில் முதன் முதலில் அன்னையர் தினத்தை கொண்டாடிய முதல் நபர் என்ற பெயரைப் பெற்றார் அன்னா ஜார்விஸ் என்பவர்தான் துவக்கி வைத்து வழிகாட்டியவர். அன்னா ஜார்விஸ் திருமணமானவரோ பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் இவரை மையப்படுத்தித்தான் அன்னையர் தினமே உருவாக்கப்பட்டது.

தனது அன்னையைப் பாராட்டி சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். நவீன அன்னையர் தினம், முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவின், கிராம்ப்டன் நகரில் 1908ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அன்னாவும் அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களுக்கு நேரடியாக கடிதங்களை எழுதி அன்னையர் தினத்திற்கு பெரும் ஆதரவு திரட்டினர். இதன் காரணமாக 1911ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட முழக்கங்களின் வாயிலாக 1914ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி அதிபர் உட்ரோவ் வில்சன் கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடுவது என்பதுதான் அந்த கூட்டறிக்கையில் இருந்தது. 
எனவே தனது அன்னையை முன்னோடியாக வைத்து அன்னையே ஆகாத அன்னா ஜார்விஸின் கடின முயற்சியினால்தான் ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்றைய நிலைமை...

தற்போது அமெரிக்கா இங்கிலாந்த இந்தியா டென்மார்க் பின்லாந்து இத்தாலி துருக்கி ஆஸ்ட்ரேலியா மெக்சிகோ கனடா சீனா ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் அன்னையர் தினம் மே இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. வேறு சில நாடுகளில் வேறு சில தினங்களிலும் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் எங்கெங்கோ வாழும் பிள்ளைகள் தங்களது தாயை நினைவு கூர்ந்து அவர்களுக்கு தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர். தற்போதெல்லாம் அன்னையர் தினத்தன்று தொலைபேசி அழைப்புகளும் இணையதள அரட்டைகளும் எப்போதும் பிசியாக இருக்கும். மலர்களும் வாழ்த்து அட்டைகள் பரிசுப் பொருட்களின் விற்பனையும் ஜரூராக இருக்கும்.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

இந்த பதிவின் தொடர்ச்சி நாளை தொடரும் ...

No comments:

Post a Comment