Friday 18 January 2013

இந்தியாவில் தீண்டாமை எப்போது ஒழியும்? ஒரு சமூக பார்வை..

தீண்டாமை பண்டை காலத்தில் இருந்து இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கும் ஒரு கொடுமையான செயல். இது பற்றி பலரும் விரிவாக கூறி இருக்கிறார்கள் நான் புதிதாகக் கூற எதுவுமில்லை. நான் தற்போது கூறுவது என்னுடைய அனுபவங்களை ஒட்டிய நிகழ்வுகளை மட்டுமே.

தீண்டாமை என்பது எத்தனை பிரச்சாரங்கள் செய்தாலும் 100 % ஒழிந்து விடக்கூடியதல்ல ஆனால் பிரச்சாரங்களால் அல்லது மாறிவரும் சூழ்நிலைகளால் தற்போது தீண்டாமை என்பது ஓரளவு (ஓரளவு தான்) குறைந்து இருப்பது உண்மை. இதற்கு தற்போதைய காலத்தில் கிடைக்கும் அனுபவங்கள் ஊடகங்கள் சில தரும் தீண்டாமை பற்றிய தகவல்கள் இவற்றோடு அனைத்து சமுதாயத்தாரின் படிப்பு மற்றும் பொருளாதார ரீதியான வளர்ச்சி.

உயர் ஜாதி என்பது ரத்தத்திலேயே ஊறிப்போனது அனைவரும் நினைப்பது போல அவ்வளவு சீக்கிரம் எல்லாம் இந்த எண்ணங்கள் மாறி விடாது குறைந்த பட்சம் இன்னும் மூன்று தலைமுறைகளாவது ஆகும் அது கூட முற்றிலும் நின்று விடாது குறைய வாய்ப்புண்டு. ஜாதி என்ற ஒன்று இருக்கும் வரை இதற்கு முடிவு என்பதே கிடையாது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட முக்கியமான தீண்டாமை வடிவங்கள்!!
  1. பொதுப்பதையில் நடக்க முடியாமை
  2. செருப்பு, போட்டு நடக்க முடியாமை.
  3. சைக்கிளில் செல்ல முடியாமை.
  4. தோளில் துண்டு போட முடியாமை.
  5. வேட்டியை மடித்துக்கட்டி நடக்க முடியாமை.
  6. பாலிஸ்டர் வேட்ட கட்ட முடியாமை.
  7. தலைமையில் தலைப்பாகை கட்ட முடியாமை
  8. முகத்தில் அரும்பு மீசை வைக்க முடியாமை.
  9. துணிகள் இஸ்திரி செய்து கொடுக்காமை.
  10. துணிகள் சலவைச் செய்து கொடுக்காமை.
  11. சில சலவை நிலையங்களில் தலித்துகளுக்கு தனி அலமாரி (இரட்டை அலமாரி)
  12. சலூன்களில் முடிவெட்ட முடியாமை.
  13. சில சலூன்களில் தலித்துகளுக்கு தனியான சேர் (இரட்டை சேர்)
  14. தேநீர் கடைகளில் இரட்டை குவளை.
  15. உணவகங்களில் தலித்துக்கள் தரையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
  16. சில கிராமங்களில் தலித் உட்பிரிவு வாரியாக 4 குவளைகள்.
  17. தேநீர் கடைகளில் பெஞ்சுகளில் உட்கார முடியாமை.
  18. தரையில் குதிக்காலில் உட்கார்ந்து மட்டுமே தேநீர் அருந்துவது.
  19. தேநீர்க் கடைகளில் சிரட்டைகளில் தேநீர் கொடுப்பது.
  20. தாகத்தால் தண்ணீர் கேட்கும் தலித்துகளுக்கு குவளைகளில் தண்ணீர் தராமல் கைகளை ஏந்தி குடிக்க வைப்பது. 
  21. பொதுக் குழாய்களில் தண்ணீர் எடுக்க முடியாமை.
  22. சில கிராமங்களில் தண்ணீர் எடுக்க தனியாக நேரம் ஒதுக்குவது
  23. திருவிழா காலத்தில் தலித்துக்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது.
  24. கிராமங்களில் தலித் அதிகாரிகள் தலைமை தாங்கும் விழாக்கள் புறக்கணிப்பு.
  25. குளங்களில் குளிக்க முடியாமை.
  26. சில குளங்களில் தலித்துகளுக்கு தனிப் படித்துறை
  27. ஆலயங்களில் நுழைய அனுமதி மறுப்பு
  28. திருவிழாக்களில் தலித் தெருக்களுக்கு சப்பரம் வராது
  29. ஆலய மண்டகப்படி தலித்துகளுக்கு கிடையாது
  30. ஆயலங்களில் தலித்துகளின் தாம்பூலத்தை தண்ணீர் தெளித்து எடுப்பது
  31. ஆலயங்களில் தலித்துகளுக்கு வழிபட தனியான இடம் (கிறித்துவ தேவாலயங்களிலும் கூட)
  32. பொது மயான உரிமை இல்லை.
  33. பொது மயானத்தில் சாதி வாரியாக இட ஒதுக்கீடு.
  34. தலித்துகளுக்கு எனத் தனி மயானம்.
  35. தனி மயானம் இருந்தாலும் மயானத்திற்கு செல்ல பொதுப் பாதை மறுப்பு.
  36. கிராமப் பஞ்சாயத்து தொலைக்காட்சிகளை தலித்துக்கள் பார்க்கக் கூடாது.
  37. தலித்துகளுக்கு தனியான ரேஷன் கடைகள்.
  38. தலித்துக்கள் ஆடு, மாடு வளர்க்கக் கூடாது.
  39. பொது ரேஷன் கடைகளில் தலித்துகளுக்கு சில நாட்கள் மட்டும் ஒதுக்குவது
  40. கிராம பொது மேடைகளில் தலித்துக்கள் பேச, பாட முடியாது.
  41. சில கிராமங்களில் தபால்காரர்கள் தலித்துகளின் வீடுகளுக்கு தபால் கொடுப்பதில்லை (சொல்லியனுப்பினால் வந்து வாங்கிச் செல்ல வேண்டும்)
  42. சில கிராமங்களில் தலித்துகள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது.
  43. கோவில் திருவிழாக் காலங்களில் ஆதிக்க சக்திகளுக்கு (பழைய ஆண்டைகளில் வாரிசுகள்) தலித்துகள் ஆடுகள் இலவசமாகக் கொடுப்பது.
  44. கோவில் திருவிழா காலத்தில் கையில் காப்பு கட்டிய பிறகு தலித்துக்கள் முகத்தில் முழிக்கக் கூடாது.
  45. செத்த விலங்குகளை அப்புறப்படுத்தக் கட்டாயப்படுத்துவது.
  46. மயான வேலைகளைச் செய்யுமாறு கட்டாயப்படுத்துவது.
  47. பறையடிக்குமாறு கட்டாயப்படுத்துவது.
  48. பேருந்து நிறுத்த நிழற்குடையில் தலித்துக்கள் உட்கார முடியாது.
  49. மரணம் நேர்ந்தாலும் அக்குடும்பத்தின் உறவினர்களுக்கு தகவல் சொல்லிக் கட்டாயப்படுத்துவது (பஸ் கட்டணம் மட்டும் தருவார்கள் - உணவு கொடுத்தால் தான் சாப்பிட முடியும்)
  50. ஆதிக்க சக்திகளின் குடும்பத்திற்கு இலவசமாக உடலுறுப்புக் கொடுப்பது (மனம் இருந்தால் உடனடி கிடைக்கும்).
  51. திருமணங்களில் பொதுப் பந்திகளில் உணவு அருந்த முடியாது.
  52. தனியார் திருமண மண்படங்களை தலித்துகளுக்கு வாடகைக்கு தர மாட்டார்கள்.
  53. வசதி படைத்தவர்களாக இருந்தாலும் நகர்புறங்களில் சிலவற்றில் தலித்துகளுக்கு வாடகை வீடு கிடைக்காது.
  54. கிராமப்புறங்களிலும் தலித்துகள் வாழ ஊருக்கு வெளியே தனியாக சேரிகள் தான்.
  55. பெயர்களில் மரியாதையானப் பகுதியை வெட்டி விடுவது (மாடகாரியை மாடர், முனியசாமி முலியர்)
  56. மலம் சுமக்க கட்டாயப்படுத்துவது.
  57. பள்ளிக் கூடங்களில் தலித் (அருந்ததியர்) மாணவர்களை கழிப்பிடம் சுத்தம் செய்யக் கட்டாயப்படுத்துவது.
  58. வயதான பெரியவர்களையும் ஆதிக்க சாதி சிறுவர்கள் பெயர் சொல்லியும், வாடா, போடா என்றும் அழைப்பது.
  59. தனியார் கல்லூரிகளில் தலித்துக்களை நிர்வாகப் பிரிவில் நியமனம் செய்ய மாட்டார்கள்.
  60. சில பள்ளிகளில் தலித் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
  61. தலித் குடியிருப்புகளிலிருந்து பொதுத் தெருவுக்கு செல்ல முடியாமல் தடுப்புச் சுவர் கட்டுவது (உத்தபுரம் சுவர் 600 மீட்டர்).
  62. கிராமங்களில் - சில நகரங்களில் பொதுத்தெருவிலிருந்து தலித் தெருவிற்கு நுழைய முடியாதபடி சுவர்கள் கட்டப்பட்டிருப்பது (வளைவு) இதர ஜாதி தெருக்களில் இப்படி வளைவு இருக்காது.
  63. அரசாங்கமே துப்புறவுப் பணியாளர்களாக தலித் (அருந்தியர்களை) மட்டுமே நியமனம் செய்வது.
  64. அலுவலகங்களில் தலித் பிரிவினருக்கு காட்டுப்படு தீண்டாமை - குறிப்பாக சுகாதாரப் பணியாளர்கள்.
  65. கூலி வேலை செய்யும் தலித்துக்கள் உணவு நேரங்களில் அவர்களே தட்டுக் கொண்டு வரவேண்டும்.
  66. தலித் மாணவர்களை ஆசிரியர்கள் பாரபட்சமாக நடத்துவது.
  67. பொது இடத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் தலித் தபால்காரரை போட அனுமதிக்காதது (தூத்துக்குடி மாவட்டம்).
  68. பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து திருப்பித் தர மறுப்பது - 13 லட்சம் ஏக்கர். 
  69. தலித்துகளின் ஊராட்சிகளை போதுமான நிதி ஒதுக்காமல் அரசு நிர்வாகமே புறக்கணிப்பது.
  70. தலித் உள்ளாட்சி பிரதிநிதிகளை செயல்பட விடாமல் தடுப்பது.
  71. கிராமப் பொதுச் சொத்தில் தலித்துக்களுக்கு பங்கு கிடையாது.

இன்றும் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டினுள் வர அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் பயன்படுத்தும் எந்த பொருளையும் தொடக்கூட மாட்டார்கள் இது எங்கள் வீட்டிலேயே நடக்கிறது. என்னுடைய அப்பா முற்போக்காக சிந்திப்பவர் என்பதால் இது போன்ற விசயங்களை பெரிது படுத்த மாட்டார் ஆனால் இவரைப் போலவே அனைவரையும் எதிர்பார்ப்பது என்பது நடக்காத ஒன்று. நானே இன்னும் பலரை வயதானவராக இருந்தாலும் பெயர் சொல்லித்தான் வா போ என்று அழைப்பேன். அவர்களை வாங்க போங்க என்று அழைத்தால் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் காரணம் அவர்களும் அப்படியே அழைக்கப்பட்டு பழகி விட்டார்கள் ஆனால் அதே அவர்கள் மகன்களை வாங்க போங்க என்று தான் அழைப்பேன். இது தான் தலைமுறை இடைவெளி. நாளை என் மகன் அனைவரையும் ஒரே மாதிரி பார்ப்பான் (என்று நினைக்கிறேன்).

இதை நான் வெளிப்படையாகக் கூறி விட்டேன் மற்றவர்கள் நல்லவன் வேசம் கலைந்து விடக்கூடாதே என்று அமைதியாக இருப்பார்கள் அல்லது இது பற்றி வாய் திறக்க மாட்டார்கள். எதுவும் சொன்னால் தானே பிரச்சனை அமைதியாக இருந்து விட்டால் நல்லவனா கெட்டவனா முற்போக்கு வாதியா இவன்(ள்) எப்படிப்பட்டவர் என்ற குழப்பம் இருக்குமே! அது போதுமே நாம யோக்கியன்!! என்று காட்ட.
பேருந்தில் செல்லும் போது தாழ்த்தப்பட்டவர்கள் அருகில் அமரமாட்டார்கள் அமரவும் விட மாட்டார்கள். நான் யோக்கியன் என்று சொல்ல வரவில்லை ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் அருகில் அமர்ந்தால் எழுந்து நிற்கும் அளவிற்கு மோசமானவன் கிடையாது. என்னால் நிச்சயம் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் அதற்காக தீண்டாமையை எதிர்த்து நான் போராட்டம் எல்லாம் செய்யக்கூடியவன் அல்ல. என்னளவில் நான் ஓரளவு சரியாக இருக்கிறேன் அதனால் மற்றவர்கள் இப்படி இருந்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்துவதில்லை.
தற்போது ஊரில் பெரிய தலைகளாக உயர் சாதிகளில் உள்ளவர்கள் ஒரு அரசு வேலை நடக்க வேண்டும் என்றால் அதற்கு பொறுப்பில்ல உள்ள நபர் தாழ்த்தப்பட்ட அதிகாரியாக இருந்தால் என்ன செய்வார்கள்? இது போல சூழ்நிலைகள் எனக்கு சிரிப்பையே தரும். இப்ப எங்கே போகும் சாதி? இங்கும் கூட ஒரு சிலர் தனக்கு நஷ்டம் ஆனாலும் இவரிடம் போய் நிற்கமாட்டேன் என்று கூறுபவர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள்.
தீண்டாமை அனைத்து சாதிகளிலும் நடக்கிறது ஆனால் பிராமணர்கள் மட்டும் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். திராவிட கட்சிகளுக்கு கிடைத்த ஆயுதம் இது தான். உலகில் இவர்கள் மட்டுமே அயோக்கியன் என்பது போல நடந்து கொண்டு இருக்கிறார்கள். பிராமணர்களில் எத்தனையோ கீழ்த்தரமாக நடந்து கொண்டவர்களை கடந்து வந்து இருக்கிறேன் அதே போல மற்ற சாதிகளிலும் இதற்கு சற்றும் குறையாமல் நடக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

பிராமின் என்றதும் என்னுடைய பேருந்து சம்பவம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். நான் பள்ளிப்படிப்பை முடித்து சென்னையில் இருந்த நேரம் அது… ஒரு பேருந்தில் 45 – 50 வயது மதிக்கத்தக்க ஒரு பிராமணப் பெண் அமர்ந்து இருந்தார் அவர் அருகில் இருந்த இடம் காலியாக இருந்தது அடுத்த நிறுத்தத்தில் ஒரு நரிக்குறவப் பெண் தன் குழந்தையோடு ஏறி இவர் அருகில் அமர்ந்தார் உடனே இவர் கோபமாக எழுந்து ஒரு ஓரமாக நின்றதோடு அல்லாமல் அருவருப்பாக எதோ நடந்தது போல அவரிடம் நடந்து கொண்டு அருகில் இருப்பவர்களைப் பார்த்து சிரித்து தனக்கு ஆதரவும் தேடிக்கொண்டார். இதை எதிர்பாராத அந்தப்பெண் அவமானத்தில் கூனிக்குறுகி அழ ஆரம்பித்து விட்டார் அவர் அழுத போதும் கூட இவர் அதே போலவே நடந்து கொண்டார் கொஞ்சம் கூட மனம் இரங்கவில்லை.

எனக்கு வந்த ஆத்திரத்தில் அங்கு சிரித்த அனைவரின் செவுள்ளையும் ஒன்று விடலாம் என்று ஆகி விட்டது. இதில் சிரிக்க என்ன இருக்கிறது? இவர்கள் எல்லாம் மனிதர்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. இது போல எத்தனை அவமானங்களை அந்தப்பெண்ணை போன்றவர்கள் சந்தித்தார்களோ! அந்தப்பெண்ணுக்கு எவ்வளவு ஒரு மனக்கஷ்டமாக இருந்து இருக்கும். அந்தப்பெண் அழுததும் அதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் (அவர்கள் பிராமின் அல்ல) சிரித்த சம்பவத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.

தீண்டாமை என்பது இந்தியாவில் தான் இருக்கிறது என்கிற ரீதியில் பேசுகிறார்கள் இது உலகம் முழுக்க இருக்கிறது. இன்றும் கூட வெள்ளையர்களால் பல கருப்பர்கள் சோதனைகளை சந்தித்து இருக்கிறார்கள். இனவெறிக்கு பிரபலமான நாடாக வளர்ந்த நாடான ஆஸ்திரேலியா உள்ளது. தீண்டாமைக்கும் படித்தவர்கள் செய்யமாட்டார்கள் என்பதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. தோலின் நிறத்தை வைத்து இன்றும் பல விஷயங்கள் வெளிநாடுகளில் கூட தீர்மானிக்கப்படுகிறது. நம் நாட்டுடன் ஒப்பிடும் போது வெளிநாடுகளில் குறைவாக இருக்கலாம் அவ்வளவே.
வெள்ளைத்தோல் கொண்டவர்கள் எல்லாம் வெள்ளையர்கள் அல்ல என்பதை அறிக. வெள்ளையர்கள் என்றால் அமெரிக்கா ஐரோப்பா நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள் நீங்கள் வெள்ளையாக இருந்தாலும் உங்களுக்கு மதிப்புக் கிடையாது.

நான் தற்போது இருக்கும்  கூட வெள்ளையர்களுக்கு ஒரு மரியாதை இந்தியர்களுக்கு ஒரு மரியாதை சில முஸ்லிம்களால்   கொடுக்கப்படுகிறது. இதை தற்போதைய தலைமுறை இளைஞர்கள் இளைஞிகள் செய்வதில்லை ஆனால் வயதானவர்கள் இன்னும் இதில் பழைய எண்ணங்களிலேயே இருக்கிறார்கள்.

நான் கூறி ஐந்து மாதங்களிலேயே எனக்கு ஒரு சம்பவம் ஏற்பட்டது பேருந்தில் ஏறி ஒருவர் பக்கத்தில் அமர்ந்ததும் அவர் என்னை முறைத்தார் எனக்கு ஒன்றும் புரியவில்லை எதற்கு முறைக்கிறார் என்று! பின் கோபமாக எழுந்து நின்று விட்டார் பின்னர் தான் தெரிந்தது இனவெறி காரணமாக என்று. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. இதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எனக்கு வந்த ஆத்திரத்திற்கு அளவே இல்லை அவமானமாகப் போய் விட்டது. இதே போல இன்னொரு சம்பவம் ஒரு பாட்டியிடம் ஏற்பட்டது இதன் பிறகு வயதானவர்கள் பக்கத்தில் நான் அமருவதே இல்லை.

அப்போது என்னுடைய மனநிலை எந்த மாதிரி இருந்து இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். கிராமத்தில் பேருந்தில் தாழ்த்தப்பட்டவர்களிடம் ஒரு சிலர் நடந்து கொண்டதைப் பார்த்து பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுகளைப் புரிந்து இருந்தாலும் இந்த சமயத்தில் எனக்கு அனுபவப்பூர்வமாக அதனுடைய வலி என்னவென்று புரிந்தது. நமக்கு மாதிரி தானே அவர்களுக்கும் இருக்கும் என்று உணர முடிந்தது ஏற்கனவே உணர்ந்து இருந்தாலும். நம்ம ஊரில் இது போல கேவலமாக நடந்து கொள்பவர்கள் வெளிநாடுகளுக்கு வந்து அவர்களுக்கே இது போல் ஆனால் தான் கொஞ்சமாவது புரியும் (உரைக்கும்) நாம் எந்த மாதிரி தவறு செய்துகொண்டு இருக்கிறோம் என்று.

இது மட்டுமல்ல சவுதிஅரேபியாவில் Food Court ரொம்பப் பிரபலம் இங்கே வயதானவர்கள் நிறைய கடைகளில் பணிபுரிகிறார்கள். இவர்களில் பலர் (அனைவரும் அல்ல) இந்தியர்களை மதிக்கவே மாட்டார்கள் எரிந்து விழுவார்கள் அதே ஒரு வெள்ளைக்கா(ரி)ரர் வருகிறார் என்றால் இவர்கள் பாவனையே மாறி விடும். விழுந்து விழுந்து கவனிப்பார்கள். இதை நான் மேலும் விளக்க விரும்பவில்லை. இளையோர்கள் இது போல நடந்து கொள்வதில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் நடக்கலாம் ஆனால் வயதானவர்கள் நடந்து கொள்ளும் அளவிற்கு பொது இடங்களில் நடந்து கொள்வதில்லை இதற்குக் காரணம் தலைமுறை இடைவெளி தான். இன்னும் சில தகவல்களை கூற நினைக்கிறேன் ஆனால் அது என்னை சிக்கலில் விட்டு விடும் என்பதால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன். 

தீண்டாமைக்காக நமது ஊரில் குரல் கொடுப்பவர்களில் நேர்மையானவர்களாக வெகு சிலரே இருப்பார்கள் மீதி பலர் அப்படி தான் இருக்கிறேன் என்று முற்போக்கு வாதியாக காட்டிக்கொள்வார்களே தவிர அவர்களின் உண்மை நிலை அவர்களின் மனசாட்சிக்கும் மட்டுமே தெரியும். பலர் வாய்ச்சொல் வீரர்கள் மட்டுமே.

கோவில்களில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நிலை இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறார்கள். இன்னும் கிராமங்களில் அனைத்துக் கோவில்களிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை. வெளியே தான் நிற்க வேண்டும். கடவுள் முன் அனைவரும் சமம் தான் ஆனால் கடவுள் பெயரால் தான் இதைப்போல கொடுமைகள் நடக்கின்றன. மோளம் அடிப்பவர்கள் எல்லாம் இன்னும் இரண்டு தலைமுறைக்குத் தான் இருப்பார்கள் அடுத்த தலைமுறைக்கு எல்லாம் அவரவர்களே பார்த்துக் கொள்ள வேண்டியது தான். அப்போதும் கோவிலுக்கு வெளியே நின்று இவர்கள் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். நாளைக்கு இவர்கள் மகன் பேரன் அரசு அலுவலகத்தில் இவர்களை ஒதுக்கியவர்கள் வெளியே நிற்க வேண்டிய நிலை வரும்.
Uthamapuram தீண்டாமை எப்போது ஒழியும்?
உத்தமபுரத்தில் தலித்துகள் தங்கள் பகுதிக்குள் வந்துவிடக்கூடாது என்று சுவர் எழுப்பி இருந்தார்கள் உயர் சாதியினர். கம்யுனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டம் மூலம் நிர்வாகத்தினர் தலையிட்டு சுவரை இடித்து அதன் பின் கோவிலுக்குள் சென்று தலித்துகள் பூஜை நடத்தி இருக்கிறார்கள். கோவிலுக்குள் வந்த பிறகு அவர்கள் முகத்தில் தான் எத்தனை சந்தோசம் அதிலும் வலது ஓரத்தில் இருக்கும் பெண்ணின் முகத்தையும் பாட்டியையும் கவனித்துப் பாருங்கள். எனக்கு கம்யுனிஸ்ட் கொள்கைகள் பிடிக்காது ஆனால் இதில் அவர்களுக்கு என் முழு ஆதரவு.

 Image Credit http://www.thehindu.com/
இது இப்படி இருந்தாலும் இன்னொரு முட்டாள்த்தனமான எண்ணமும் பலருக்கு இருக்கிறது அதாவது ஏழைகள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ன செய்தாலும் தவறு கிடையாது உயர் சாதியினர் பணக்காரர்கள் செய்வதெல்லாம் தவறு என்பது போல. ஏழை என்றால் அவர்கள் வெகுளிகள் எப்போதுமே தவறு செய்ய மாட்டார்கள் என்பது பலரின் அழுத்தமான எண்ணம். தீண்டாமை எப்படி ஒரு மோசமான எண்ணமோ அதே போல தான் இதுவும். ஏழைகள் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் யோக்கியர்கள் அல்ல அதே போல உயர்சாதியினர் பணக்காரர்கள் அனைவரும் மிக மோசமானவர்களும் இல்லை. அனைத்து இடங்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் மோசமானவர்களும் இருக்கிறார்கள் சதவீத அளவில் வேறுபடலாம்.

நான் முன்னரே கூறியபடி படித்து விட்டால் மட்டும் தீண்டாமை என்பது ஒழிந்து விடும் என்பது அர்த்தமல்ல. நன்கு படித்தவர்கள் தான் இன்று கூட facebook ல் தங்களுடைய சாதியை வைத்து சண்டை போட்டுக்கொண்டுள்ளார்கள். இவர்கள் எல்லாம் இன்றைய தலைமுறை தான், இவர்களே இப்படி இருக்கும் போது பழைய எண்ணங்களை கொண்டு இருப்பவர்கள் எல்லாம் உடனே மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் முட்டாள்த் தனமான எதிர்பார்ப்பு. தலைமுறை மாற்றங்கள் மட்டுமே தீண்டாமையை ஒழிக்கும் அல்லது குறைக்கும்.

குறிப்பு : இது குறித்த விவாதத்திற்கு என்றுமே முடிவே கிடையாது காரணம் இது போன்ற முக்கியமான விவாதங்களில் பல்வேறு கோணங்களில் அனைவரும் சிந்திப்பார்கள் அவரவர்க்கு அவரவர் பேசுவது சரியாகத் தோன்றும் அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து. எனவே இந்தப் பதிவு குறித்து என்னுடைய பதிலை எதிர்பார்க்க வேண்டாம் காரணம் இவை ஒரு இன்ஃபினிட்டி. முடிவில்லாத வாதத்திற்கு நான் தயாராக இல்லை.

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .


No comments:

Post a Comment