Thursday 19 January 2012

அதிக கொலஸ்ட்ரால் ஆபத்தா?

நம் உடலின் ஆரோக்கியத்தைக் காக்க நம் உடலே உற்பத்தி செய்யும் பல்வேறு பொருட்களில் ஒன்று தான் இந்த கொலெஸ்ட்ரோல் (Cholestrol). இது வெண்மை நிறத்திலான கொழுப்பு வகையைச் சேர்ந்த ஒரு பொருளாகும். இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு மிகவும் அவசிமாகும். இன்னும் பல்வேறு முக்கியமான ஹார்மோன்கள் , பித்த நீர், வைட்டமின் D மற்றும் உடலின் பல்வேறு முக்கிய புரதச் சத்துகள் , திரவங்களின் தயாரிப்பிற்கு மிகவும் தேவையானது.

கொலஸ்ட்ரால் எங்கிருந்து கிடைக்கிறது?
கொலெஸ்ட்ரோல் பொதுவாக இரண்டு விதங்களில் உடலில் சேர்கிறது.
  1. நமது உடல் கொலெஸ்ட்ரோலைத் தன்னிலிருந்தே உற்பத்தி செய்து கொள்கிறது. நம் கல்லீரல் நாளொன்றுக்குச் சுமார் 1000 மில்லிகிராம்கள் வரை கொலெஸ்ட்ரோலை உற்பத்தி செய்கிறது.கல்லீரலும் மற்ற செல்களும் சேர்ந்து இரத்தத்தின் மொத்த கொலஸ்ட்ரால் அளவில் 75% உற்பத்தி செய்கின்றன.
  2. 25% கொலஸ்ட்ரால் நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழியிறைச்சி, பால் மற்றும் பால் தயாரிப்புகளிருந்து கிடைக்கிறது.
கொலெஸ்ட்ரால் வகைகள்:நம் இரத்தத்தில் 'கொலெஸ்ட்ரால்' மற்றும் 'டிரைகிளிஸெரைட்ஸ்' (Triglycerides) ஆகிய இரண்டு வித கொழுப்புகள் உள்ளன.
டிரைகிளிஸெரைட்ஸ் என்பது கல்லீரலால் தயாரிக்கப்படும் ஒருவிதக் கொழுப்பே! இது நம்முடைய அன்றாடச் செயல்பாட்டிற்குத் தேவையான சக்தியை உடலுக்கு வழங்குகின்றது. கொலெஸ்ட்ரோலைப் போலவே இரத்தத்தில் டிரைகிளிசெரைடுகள் அதிக அளவில் இருந்தாலும் இருதய நோய்களின் அபாயத்தை அதிகப் படுத்திவிடும்.

கொலெஸ்ட்ரோல் புரதங்களுடன் இணைந்து ஒரு லிப்பொ ப்ரொடீன் ஆகி, அதன் மூலம் உடல் முழுவதும் பயணிக்கிறது. லிபோபுரோட்டீன்கள் என்பவை இரண்டு வகைகளாகும். அவை:

1. குறைந்த அடர்த்தியுள்ள (Low density) லிப்போ புரோட்டின் (LDL)

2. அதிக அடர்த்தியுள்ள (High density) லிப்போ புரோட்டின் (HDL)

அடர்த்திக் குறைவான லிப்போ புரோட்டீன் (LDL):
இது 'தீய கொலெஸ்ட்ரோல்' என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த (LDL) அதிக அளவில் இரத்த ஓட்டத்தில் கலந்து செல்லும்போது, இருதயத்திற்கும் மூளைக்கும் செலுத்தப்படும் இரத்தக் குழாய்களின் சுவரில் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டிக் கொள்கிறது.காலப் போக்கில் இரத்தக்குழாய்களை குறுகச் செய்கிறது

அடர்த்திமிகு லிபோபுரோட்டீன் (HDL):

இது 'நல்ல கொலெஸ்ட்ரோல்' என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் இது இரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்ட்ரோலை தமனியிலிருந்து அகற்றி பின் கல்லீரலுக்குக் கொண்டு செல்கிறது. இரத்தத்திலிருந்து அதிக அளவிலான கொலெஸ்டொரோலை இவ்வாறு அகற்றுவதவன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து இது நம்மைப் பாதுகாக்கிறது.

மிகை கொலெஸ்ட்ரோல் எவ்வாறு பாதிக்கிறது?

தேவைக்கு அதிகமாக உருவாகும் கொலெஸ்ட்ரோல் தமனிக் குழாய்களின் உள் சுவரில் ஒட்டிக் கொள்ளும. நாளடைவில் சிறிது சிறிதாகச் சேர்ந்து இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களின் உள் சுற்றளவைக் குறுக்கி விடுகின்றது. இதனால் குறைவான இரத்தத்தை இருதயம் பெறுகிறது. அதனால் இரத்ததில் கலந்துள்ள 'ஆக்ஸிஜன்' (Oxygen) எனும் பிராண வாயு தேவையான அளவு இதயத்துக்குக் கிடைக்காது.இதன் காரணம் இதயத்தின் செயல் பாடு பாதித்து Angina எனும் நெஞ்சு வலி ஏற்படலாம். தொடர்ந்து இருதயத்தின் பகுதிகளுக்கு இரத்தம் செலுத்தப்படுவது தடை பட்டால் heart attack எனும் மாரடைப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் இந்தக் கொழுப்புச் சில்லுகள் இடம் பெயர்ந்து கட்டிகளாக இரத்தக் குழாய் தமனிகளில் இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்திவிடுவதும் உண்டு.அல்லது இந்த கொழுப்புக் கட்டிகள் உடைந்து அதனால் இரத்தம் உறைந்து இரத்தக்குழாய்களில் தடையுண்டாக்கும். அதன் விளைவாக நெஞ்சுவலி அல்லது மாரடைப்பு ஏற்படுகிறது. அளவைவிட அதிகமான கொலெஸ்ட்ரோலின் விளைவாக சீறுநீரகச் செயலிழப்பு (Kidney failure) உட்பட டெமென்ஷியா (மறதி நோய்),பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

அதிக கொலஸ்டராலுக்குக் காரணம் என்ன?
  • அதிக அளவிலான கொழுப்புகள் கலந்த உணவுப் பழக்கம்
  • அதிக மாமிச உணவு உண்பது
  • அதீத உடற்பருமன் (Obesity)
  • உடல் இயக்கக் குறைவான பணிகள்.
  • உடற் பயிற்சியின்மை
  • அதிக தூக்கம்
  • புகைப் பழக்கம்
  • மன அழுத்தம்
  • மதுப் பழக்கம்
  • சக்கரைநோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்கள்.
  • கருத்தடை மாத்திரைகள்.
  • வயோதிகம்
  • பரம்பரை -உங்கள் பெற்றோர்களுக்கு மிகை கொலெஸ்ட்ரால் இருக்குமானால் அதற்கு காரணமான ஜீன்களை நீங்களும் பெற்றிருக்கக் கூடும்.
இரத்தத்தில் அதிக அளவில் கொலெஸ்ட்ரோல் இருப்பதன் அறிகுறிகள் என்ன?
பொதுவாக எந்த ஓர் அறிகுறியையும் அது ஏற்படுத்துவதில்லை; ஆகையால்தான் அது "அமைதியான உயிர்க்கொல்லி" என்று அறியப்படுகிறது.
உடல் பருமன் இல்லாதவர்களுக்கு இரத்தத்தில் கொலெஸ்ட்ரால் அதிகம் இருக்காது என்று சொல்ல முடியாது. யாருக்கும் வரலாம். இரத்த சோதனை செய்து பார்த்தால் தான் தெரிய வரும்.20 வயதுக்கு மேல் ஒவ்வொரு 5 வருட இடைவெளியிலும் இரத்தத்தை சோதனை செய்வது நல்லது.

இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோலை எப்படி தீர்மானிப்பது?

இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவு என்பது, 12 மணி நேரம் ஏதும் உட்கொள்ளாத நிலையில் காலையில் எடுக்கப்பட்ட மாதிரி (sample) இரத்தத்திலிருந்து கணக்கிடப்படுகிறது.

அதிலும் 'லிபோபுரோட்டீன் ப்ரொஃபைல்' (lipoprotein profile) எனும் இரத்தப் பரிசோதனை செய்வது மிகவும் சிறந்தது.

இதன் வாயிலாக
  • இரத்தத்திலுள்ள மொத்த கொலெஸ்ட்ரோல்
  • LDL (தீய) கொலெஸ்ட்ரோல்
  • HDL (நல்ல) கொலெஸ்ட்ரோல்
  • டிரைக்ளைஸெரைட்ஸ்
ஆகியவற்றின் விபரங்களை அறியலாம்.

இரண்டு விதமான அளவுகோல்கள் மூலம் கொலெஸ்ட்ரோல் அளவு கணக்கிடப்படுகின்றது.
  1. எடையின் அடிப்படையில். அதாவது ஒரு டெசி லிட்டரில் உள்ள மில்லி கிராம் (mg/dl) எண்ணிக்கையளவு முறை.
  2. மூலக்கூறு எண்ணிக்கையளவு (molecular count) அதாவது ஒரு லிட்டரில் உள்ள மில்லிமோல்கள் (mmol/L) முறை.
உங்களது கொலெஸ்ட்ரோல் பரிசோதனையில் இந்த இரு விதங்களில் எவ்விதத்தில் உங்கள் கொலெஸ்ட்ரோல் அளவு கணக்கிடப்பட்டது என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

1) மொத்த கொலெஸ்ட்ரோல்:

200 mg/dl க்கும் குறைவாக (5.2 mmol/L க்கும் குறைவாக) -- இயல்பான அளவு
200–239 mg/dL ------------------------------ --- எச்சரிக்கைக் கோடு
239 mg/dL க்கு மேல் ------------------------ ----அதிகம்

2) LDL (தீய)கொலெஸ்ட்ரோல்:
130 mg/dl க்கும் குறைவாக (3.37 mmol/L க்கும் குறைவாக) -- இயல்பான அளவு
130–159 mg/dL ------------------------------------------ --- எச்சரிக்கைக் கோடு
160–189 mg/dL ------------------------------------------- --- அதிகம்.
189 mg/dL க்கு மேல் ------------------------------------------ - -- மிக அதிகம்

3) HDL (நல்ல) கொலெஸ்ட்ரோல்:

40 mg/dl க்கும் குறைவாக (1.0 mmol/L க்கும் குறைவாக) --இதய நோய் வர சாத்தியம் இருக்கிறது
40 mg/dl முதல் 60 mg/dl (1.0 mmol/Lமுதல்1.54 mmol/L) -- அதிகம் (நல்லது)
60 mg/dL(1.54 mmol/L) க்கு மேல் --- இதய நோயிலிருந்து பாதுகாப்பு

4) டிரிக்ளைஸெரைட்ஸின் இயல்பான அளவு :

150 mg/dl க்கும் குறைவாக (1.69 mmol/L க்கும் குறைவாக)

நம் உணவில் உள்ள கொழுப்புச் சத்து வகைகள் (Fats) :

திடக் கொழுப்புகள் (saturated):
முக்கியமாக, மாமிச உணவு வகையில் இருந்து திடக் கொழுப்பு வகைகள் கிடைக்கின்றன. Hydrogenated எண்ணெய்களில் இந்த வகை திடக் கொழுப்புகள்தாம் 'தீய' (LDL) கொலெஸ்ட்ரொலை இரத்தத்தில் அதிகப் படுத்துவது.

திடக் கொழுப்புகளை உள்ளடக்கிய உணவு வகைகள் : பால், வெண்ணெய், இறைச்சி, பாமாயில், தாவர நெய்.

திரவக் கொழுப்புகள் (1) (polyunsaturated):

எண்ணெய், விதை மற்றும் தானிய உணவுப் பொருட்களிலிருந்து திரவக் கொழுப்புகள் உருவாகின்றன. திரவக் கொழுப்புகள் LDL எனும் தீய கொலெஸ்ட்ரோலை இரத்தத்திலிருந்து குறைத்து, இருதயத்திற்கு நலம் விளைவிக்கக் கூடியவை. ஆயினும், திரவக் கொழுப்புகள் நம் இரத்தத்தில் கூடிவிட்டாலும் அவை HDL எனும் நல்ல கொலெஸ்ட்ரோலைக் குறைத்து விடக்கூடும். ஆகையால் கீழ்க்காணும் திரவக் கொழுப்பு வகைகளை அதிகமாகவுமில்லாமல் குறைவாகவுமில்லாமல் நடுநிலை அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

திரவக் கொழுப்புகளை உள்ளடக்கிய எண்ணெய் உணவு வகைகள் : தேங்காய் எண்ணெய்,சோள எண்ணெய் (Corn oil), சூரியகாந்திப்பூ எண்ணெய் (Sunflower oil), ஸாஃப்பூ (Safflower) எண்ணெய், ஸோயாபீன் எண்ணெய் (Soya been oil).

திரவக் கொழுப்புகள் (2) MonoUnsaturated:

மோனோஅன்ஸேச்சுரேடெட் எனும் திரவக் கொழுப்புகள் தானிய வகைகளில் அதிகம் கிடைக்கின்றன. பாலி அன்ஸேச்சுரேடெட் கொழுப்பு வகைகள் பேன்றே மொனோஅன்ஸேச்சுரேடெட் கொழுப்புகளும் இருதயத்திற்கு நலம் விளைவிக்கக் கூடியவையாகும். ஏனெனில் அவை நம் இரத்தத்திலுள்ள LDL எனும் தீய கொலெஸ்ட்ரோலை குறைத்து HDL எனும் நல்ல கொலெஸ்ட்ரோலை அதிகரிக்கச் செய்கின்றன. ஆயினும் இவற்றையும் ஒரு குறிப்பிட்ட அளவில்தான் உட்கொள்ளவேண்டும்.

திரவக் கொழுப்புகளை உள்ளடக்கிய எண்ணெய்/தானிய உணவு வகைகள் : ஓலிவம் எனும் ஜைத்தூன் எண்ணெய், கனோலா canola எண்ணெய், பாதாம், முந்திரி, வேர்கடலை, பிஸ்தா பருப்பு போன்றவை.

அமிலக் கொழுப்பு:

ஒமேகா-3 (Omega 3 acids) எனும் கொழுப்பு அமிலங்கள் இன்னொரு வகை பாலி அன்ஸேச்சுரேடெட் கொழுப்புவகை ஆகும். இவை முக்கியமாக மீன் எண்ணெயில் கிடைக்கின்றன. இவையும் இருதய நோய்கள் உருவாவதைக் குறைப்பவையாகும்.

அமிலக் கொழுப்பு மீன் வகைகள் : TUNA (ஐலா/கும்பலா) KING FISH (வஞ்சிரம்/ஐகுரா), SALMON கெண்டை, SARDINES சூடை/மத்தி போன்ற மீன்கள்.

நீரகக் கொழுப்பு (Hydrogenated):
பாலி அன்ஸேச்சுரேடெட் அல்லது மொனொ அன்ஸேச்சுரேடெட் கொழுப்புகளுடன் கலந்து நீரகக் கொழுப்பு தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் நீரகக் கொழுப்பு, திடநிலைக்கு மாற்றம் பெறுகிறது. இந்த முறை மூலம் அன்ஸேச்சுரேடெட் கொழுப்புகளை ஸேச்சுரேடெட் கொழுப்புகளாக அது மாற்றுகிறது. அவசர (fast food) உணவுகளில் நீரகக் கொழுப்பு உபயோகிக்கப் படுகின்றது.
தாவர எண்ணெயால் கொலெஸ்ட்ரால் கூடுமா?
பழங்கள் காய்கறிகள், தானியங்கள் பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற தாவர உணவுகளில் கொலெஸ்ட்ரோல் இல்லை.
கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய்' போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெயை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெய்யிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.

எந்த சமையல் எண்ணெய் உடல் நலத்திற்கு சிறந்தது?
கனோலா எண்ணெயில் அதிக அளவில் மொனொஸெடுரேடெட் கொழுப்பு உள்ளது.
சோள எண்ணெய், சூரியகாந்திப்பூ (Sun flower) எண்ணெய், ஸஃப்போலாப்பூ (Saffola) எண்ணெய் மற்றும் ஸோயாபீன் (Soya bean) எண்ணெய்களில் அதிக அளவில் பாலி அன்ஸேச்சுரேடெட் கொழுப்பு உள்ளது.
இயற்கையாகக் கிடைக்கும் தேங்காய் எண்னெயும் இதயத்துக் நல்லது தான்.
Super Foods -The Truth about Coconut - video

'கொலெஸ்ட்ரோல்' அளவைக் கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

சரியான உணவைத் தேர்ந்தெடுத்தல்:
ஸேச்சுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.பட்டினி கிடப்பது என்பது இதன் பொருளல்ல.
பார்க்க இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?

தவறாத உடற் பயிற்சி:

ஒவ்வொருவரும் போதிய உடல் அசைவு ஏற்படும் வகையிலான பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. அதனால் நல்ல கொலெஸ்ட்ரோல் (HDL) அதிகரிக்கும்; தீய கொலெஸ்ட்ரோல் (LDL) குறையும்; அளவுக்கு அதிகமான உடலின் எடையைக் குறைக்கவும் உதவும்.
எந்த உடற்பயிற்சியையும் தொடங்கும் முன் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
பார்க்க உடற்பயிற்சி -அறிய வேண்டிய சில உண்மைகள்

புகைப் பழக்கத்தைக் கைவிடுதல்:

புகைப் பழக்கம் இருதய நோய்கள் மற்றும் இதர கேடுகளின் அபாயத்தை இரட்டிக்கச் செய்கிறது. இது நல்ல கொலெஸ்ட்ரொலை (HDL) குறைக்கிறது. தீய கொலெஸ்ட்ரொலை (LDL) அதிகரிக்கிறது.

மன அழுத்தத்தைக் (stress) கட்டுப்படுத்துதல்:

மன அழுத்தம் என்பது காலப்போக்கில் கொலெஸ்ட்ரோல் அளவினைக் கூட்டுவதாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மன அழுத்தம் என்பது நம் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. உதாரணமாக, சிலர் மன அழுத்தத்தில் இருக்கும்போது தங்கள் மனதை நிலைப்படுத்திட கொழுப்புகள் கலந்துள்ள நொறுக்குத்தீனி கொறிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர். அவற்றில் உள்ள அதிக அளவிலான திடமான (saturated fats) கொழுப்புகள் கொலெஸ்ட்ரோல் அளவை அதிகரிக்கச் செய்துவிடுகிறது.

மருத்துவம்

ஓரளவிற்கு கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு முக்கியமாகத் தேவை. அதுவே அளவிற்கு மீறினால் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். கொலஸ்ட்ரால் அளவுக்கதிகம் இருந்து ,அதோடு
  • உயர் இரத்த அழுத்தம் (140/90 mg/dL அல்லது அதற்கு மேல்)
  • சர்கரை நோய்.
  • முதுமை -ஆண் 45 க்கு மேல் பெண் 55 வயதுக்கு மேல்
  • பரம்பரை ஜீன் - குடும்பத்தில் தந்தை,சகோதரன் யாருக்கவது 55 வயதுக்கு முன் , அல்லது தாய், சகோதரி யாருக்காவது 65 வயதுக்குமுன் இதய நோய் தாக்கியிருந்தால்.
  • உடல் இயக்கமின்மை, உடல் பருமன்,
  • புகை, மது போன்ற பழக்கம் போன்ற காரணங்கள் இருந்தால் எல்லாம் சேர்ந்து இதயத்தை பதம் பார்ப்பதில் கை கோர்த்துக் கொள்ளு(ல்லு)ம்.
கொலெஸ்ட்ரால் அதிகம் இருந்தும் மேல் கண்ட பிற காரணங்கள் இல்லாததால் இதயம் பழுது படாமல் ஆரோக்கியமாக வாழ்பவர்களும் உண்டு. இருந்தாலும் தலைக்கு மேல் கத்தி தான் . இங்குக் கூறப்பட்ட உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் வழிகாட்டும் விஷயங்களை முறையாகக் கடைப்பிடித்து வந்தால் கொலெஸ்ட்ரோல் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க எளிதாக இருக்கும்.

இவற்றுள் எதுவும் பயனளிக்காத நிலையில் உள்ளவர்கள், தகுந்த மருத்துவரை அணுக வேண்டும். அவருடைய ஆலோசனையில் மாற்றமின்றி அவர் தருகின்ற மருந்துகளை அதே அளவில் உட்கொள்ள வேண்டும். இதில் கவனமாக இருக்க வேண்டும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பல் வேறு மருந்துகள் மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும் எல்லமே பக்க விளைவுகள் உள்ளது. அதிக விலையுள்ள இம் மருந்துகள் கொலெஸ்ட்ராலைக் குறைப்பதில் உண்மையாகப் பலன் தருவதில்லை என்ற கருத்துக்களும் உண்டு. எல்லா மருந்துகளும் தற்காலிகமாக கொலெஸ்ட்ரால் அளவை ஓரளவு கட்டுப் படுத்த மட்டும் தான் உதவும் . நிரந்தர தீர்வு சரியான உணவுப்பழக்கமும் உடல் உழப்புமே.
போதுமான தண்ணீர் தினமும் அருந்துவது கூட இதயத்தைக் காக்கும்
பார்க்க தண்ணீர் மருத்துவம்

"அளவுக்கு மி்ஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது கொலஸ்ட்ராலுக்கு நன்றாக பொருந்தும்.

No comments:

Post a Comment