Monday 19 July 2010

பெண்ணுக்கு ஓய்வென்பதே கிடையாதா ?...

58 – 60 வயதில்  ஓர் ஆண் தன் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட முடியும்.  ஆனால் ஒரு பெண்? 



சலிப்பு - இந்த வார்த்தையை நாம் அடிக்கடி உபயோகப்படுத்துகிறோம். மதியம் சமைத்த உணவை இரவும் கொடுத்தால் சலிப்பு வந்துவிடுகிறது. ஒரு சேனலைத் தொடர்ச்சியாக அரை மணிநேரம் பார்க்க முடிவதில்லை.
ஒரே விஷயத்தைப் பேசிக்கொண்டிருந்தால் சலிப்பு ஏற்படுகிறது. ஆனால் காலம் காலமாகப் பெண்கள் ஒரே வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்களே அவர்களுக்கு மட்டும் சலிப்பு என்பதே கிடையாதா?
படித்தவராக இருக்கலாம். படிக்காதவராக இருக்கலாம். ஏழையாக இருக்கலாம். வசதியானவராக இருக்கலாம். வேலைக்குச் செல்லலாம். வேலைக்குச் செல்லாமல் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த வேலைகளில் இருந்து மட்டும் தப்பிக்க முடியாது.

அதிகாலையிலேயே எழ வேண்டும். வாசல் பெருக்கி, கோலம் போட வேண்டும். பால் காய்ச்ச வேண்டும். ஒவ்வொருவரும் எழுந்து வர வர அவர்கள் விருப்பப்படி கலந்துகொடுக்க வேண்டும். காய் நறுக்க வேண்டும். காலை டிபன், மதிய உணவு என்று பம்பரமாகச் சுழல வேண்டும்.
வீட்டில் உள்ள பெரியவர்களுக்குப் பிரத்யேக உணவும் இருக்க வேண்டும். குழந்தைகள் விரும்பும் வகையில் அவர்களுக்குப் பிடித்த உணவும் செய்ய வேண்டும். (இரண்டு குழந்தைகள் இருந்தால் இரண்டும் வெவ்வேறு உணவுகளைக் கேட்கும்!) ஞாபகமாக செய்த ஐட்டங்களை அடிக்கடி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


துணி துவைத்தல், பாத்திரம் கழுவுதல், வீடு பெருக்குதல், மாவு அரைத்தல், மாலை டிபன், குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருதல், இரவு உணவுக்குப் பின் மறுநாள் சமையலுக்கான தயாரிப்புகளை முடித்துவிட்டு, உறக்கம். சில மணி நேரங்களிலேயே அலாரம் அடிக்கும்.


இந்த விஷயங்களைப் படிப்பதற்கே சலிப்பாக இருக்கலாம். ஆனால் காலம்காலமாக பெண்கள் இதே வேலைகளைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குச் சலிப்பு வருமா என்று கூட யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை.

இந்த வேலைகளைச் சிலருக்கு ஏழு, எட்டு வயதிலும் சிலருக்கு பதினைந்து வயதிலும் சிலருக்கு இருபது வயதிலும் செய்ய வேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது. இப்படி ஆரம்பிக்கும் வேலைகளைப் பெண்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் செய்துகொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இதிலிருந்து ஓய்வு என்பது அவர்கள் இயக்கத்தை நிறுத்திக்கொண்ட பிறகுதான் கிடைக்கிறது.

திருமணம், குழந்தைகள், பேரக்குழந்தைகள் என்று எத்தனையோ மாற்றங்கள் வாழ்க்கையில் வந்துகொண்டே இருக்கும். வீட்டு வேலைகளில் மட்டும் மாற்றத்துக்கு இடமே இருக்காது.

இதில் வேலைக்குச் செல்லும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். ஞாயிற்றுக்கிழமை என்றால் எல்லோருக்கும் விடுமுறை. ஆனால் பெண்களுக்கு அன்று இரண்டு நாள்கள் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டும். ஒட்டடை அடிப்பது, மாவு அரைப்பது, சமையலறை, கழிவறைகளைச் சுத்தம் செய்வது, மற்ற நாள்களில் செய்யாத ஸ்பெஷல் உணவுகளைச் சமைப்பது என்று வேலை நாள்களே தேவலாம் என்று தோன்றும் அளவுக்கு வேலைகள் காத்திருக்கும்.

மற்ற நாள்களில் பிஸியாக இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் விருந்தினர்கள், நண்பர்கள் வருவார்கள். அவர்களைக் கவனிப்பது, அவர்களுடன் நேரம் செலவிடுவது என்று வேலைகளுக்கு நடுவே நேரம் கரைந்துவிடும். விருந்தினர்களிடம் ஒரு ஹாய் சொல்லிவிட்டு, ஆண் தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்துவிடலாம். ஆனால் பெண்? மகிழ்ச்சியுடன் உரையாட வேண்டும். உபசரிக்க வேண்டும். அவர்கள் மீண்டும் நம் வீட்டுக்கு வரும்படி நடந்துகொள்ள வேண்டும்.

என் தோழிக்கு படிப்பது என்றால் மிகவும் விருப்பம். இதுதான் என்று இல்லைஸ கிடைப்பது அத்தனையையும் படித்து விடுவாள். சாப்பிடும்போது கூட கையில் புத்தகம் இல்லாமல் அவளால் சாப்பிடவே முடியாது. திருமணத்துக்குப் பிறகு அவள் வீட்டில் புத்தகங்களோ, வார இதழ்களோ இல்லை. அவள் கணவருக்கு எதிரிலேயே காரணம் கேட்டபோது, ‘அவருக்குப் பிடிக்காதுஸ’ என்று வலியை மறைத்துக்கொண்டு சிரித்தாள்
திருமணம் ஆகும் வரை வரைவது, எழுதுவது, பாடுவது என்று திறமையாக இருக்கும் பெண்கள், திருமணத்துக்குப் பிறகு தங்கள் திறமைகளை மறந்து போவதற்குக் காரணம் இந்தச் சூழல்தான்.

ஞாயிற்றுக்கிழமை என்றால் ஓர் ஆணின் பொழுது எப்படி விடிகிறது? சனிக்கிழமை இரவு வெகு நேரம் டிவி பார்த்துப் படுத்துவிட்டு, காலை பத்து மணி வரை தூங்கிக்கொண்டிருக்கலாம். மெதுவாக எழுந்து ஸ்பெஷலாக செய்யப்பட்டிருக்கும் டிபனை ஒரு பிடிபிடித்து விட்டு, மீண்டும் தூக்கத்தைத் தொடரலாம். அல்லது டிவி பார்க்கலாம். அடிக்கடி காபி கேட்டு, சுவைத்துக்கொண்டே புத்தகங்களைப் படிக்கலாம்.

இண்டர்நெட்டில் மூழ்கலாம். நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம். அல்லது வெளியில் எங்காவது கிளம்பிச் சென்று விடலாம்.
ஆண்களும் தங்கள் அலுவலங்களில் ஒரே மாதிரியான வேலைகளைத்தானே செய்கிறார்கள். அவர்களுக்குச் சலிப்பு வராதா என்று கேட்கலாம். அவர்கள் செய்யும் வேலைகளுக்கும் பெண்கள் செய்யும் வேலைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது.


ஆண்களுக்கு வெளியுலகத் தொடர்பு அதிகம். சலிப்பு தோன்றும் நேரங்களில் ஆண்கள் தன்னந்தனியாக ஒரு சினிமாவுக்குச் செல்லலாம். கடற்கரைக்குப் போகலாம். ரெஸ்டாரண்ட்டில் மணிக்கணக்கில் அமரலாம். ஒரு போன் செய்து, ‘நான் ஃப்ரெண்ட்ஸோடு சினிமாவுக்குப் போறேன். நைட் லேட்டாகும்’ என்று தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடலாம். (சில வீடுகளில் அது கூட அவசியம் இல்லை!) நண்பர்கள் வீட்டுக்குச் சென்றுவிடலாம்.


ஆனால் ஒரு பெண் தனியாக கடற்கரை, சினிமா, ஹோட்டல் என்று செல்வதை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? கணவருக்குப் போன் செய்து, ‘நான் என் நண்பர்களோடு சினிமாவுக்குப் போறேன். வீட்டைப் பார்த்துக்கொள்’ என்று சொல்லிவிட்டுச் செல்ல முடியுமா? ’

உடல்நிலை சரியில்லை என்று இரண்டு நாள்கள் ஹோட்டலில் வாங்கிச் சாப்பிட்டால், மூன்றாம் நாள், ’சமைக்கறதே இல்லை போலருக்கு! பாவம் சார்’ என்று ஏளனமாகச் சிரிப்பார்கள்.

ஆறு மணிக்கு அலுவலகம் முடிந்த பிறகு, அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கோ, வெளியில் நடைபெறும் கூட்டங்களுக்கோ பெண்கள் சென்றால், அலுவலக நண்பர்கள் தவறாமல் இந்த விஷயங்களைச் சொல்வார்கள்.

‘நம்மளே கலந்துக்கறதில்லஸ இவங்களுக்கு என்ன? சீக்கிரம் வீட்டுக்குப் போறதுன்னா இவங்களுக்குப் பிடிக்காது போலருக்குஸ’
‘மேடம், சீக்கிரம் வீட்டுக்குப் போனால் நல்லா சமைக்கலாம், வீட்டு வேலைகளைச் செய்யலாமேஸ ஏன் இந்தக் கூட்டங்களில் எல்லாம் கலந்துக்கறீங்க? இதுல நீங்க கலந்துக்கணும்னு ஒண்ணும் கட்டாயம் இல்லையே!’

ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. எந்தச் சூழ்நிலையிலும் நீ ஒரு ’பெண்’ என்று நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.

உடல்நிலை சரியில்லை என்றால் லீவு போட்டுவிட்டு, அந்த விடுமுறையில் முழுமையாக ஆண்களால் ஓய்வெடுக்க முடியும். ஆனால் பெண்களால் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்தாலும் வீட்டு வேலைகளில் இருந்து விடுபட முடியாது. வீட்டில் இருக்கும் பெண்கள் முடிந்ததோ, முடியவில்லையோ சுருக்கமாக ஏதாவது செய்துவிட்டு, சற்று ஓய்வெடுக்கலாம்.

வேலைக்குச் செல்லும் பெண்களை விட வீட்டில் இருப்பவர்களின் நிலை இன்னும் கொடுமையானது. வீடே உலகம் என்று வெளி உலகம் தெரியாமல் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியே சிறிது ஓய்வு கிடைக்கும்போது டிவி பார்த்தால், அதில் சித்தரிக்கும் பெண்களைப் பார்த்து இன்னும் மன அழுத்தம் கூடும்.



சில ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையில் வந்த செய்தி.

சென்னை எழும்பூர் அஞ்சலகத்தில் அந்தப் பெண் வேலை செய்துகொண்டிருந்தார். செங்கல்பட்டில் இருந்து அதிகாலையில் வீட்டுவேலைகளை முடித்துவிட்டு, அரக்கபரக்க ஓடிவந்து ரயிலைப் பிடித்தால்தான் அலுவலகத்துக்குச் சரியான நேரத்துக்கு வர இயலும். வழக்கமான பணி. மதியம் தயிர் சாதம். இரவு வீடு.
அன்று மதிய உணவு வேளையில் தயிர் சாதம் சாப்பிட்டார். பாத்ரூம் சென்று முகத்தைக் கழுவினார். வெளியே வந்தார். மாடிப்படிகள் தெரிந்தன. மெதுவாகப் படி ஏறினார். மேலே இருந்து ஊர்ந்து செல்லும் மனிதர்களைப் பார்த்தார். அடுத்த நொடி மாடியில் இருந்து குதித்து விட்டார். அவர் இறந்ததுக்கான காரணம் வாழ்க்கையில் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்த சலிப்பு.
ஒரு பெண் தன் வாழ்நாளில் எத்தனை தடவை பெருக்கிக் கோலம் போட்டிருப்பாள். எத்தனை ஆயிரம் இட்லிகளைச் சுட்டிருப்பாள். எவ்வளவு துணிகளைத் துவைத்திருப்பாள். எவ்வளவு பாத்திரங்களைத் தேய்த்திருப்பாள்?
பெண்கள் பெரும்பாலான நேரத்தைச் செலவிடும் சமையலறை எப்படிப்பட்டதாக இருக்கிறது? வீடு கட்டும்போதே ஹால், பெட்ரூம் எல்லாம் பெரிதாக வேண்டும். சமையலறை சிறியதாக இருந்தால் போதும் என்று சொல்பவர்கள் எத்தனைப் பேர்? காற்றோட்டம் இன்றி, ஓர் ஆள் இயங்கும் அளவில்தான் பெரும்பாலான சமையலறைகள் இருக்கின்றன. கிராமங்களில், ஏழை எளியவர்களின் வீடுகளில் பச்சை விறகை வைத்து, கண் எரிய ஊதி ஊதி சமைக்கும் பெண்களின் நிலை மிகவும் மோசம்.

இத்தனை வேலை செய்தும் பெண்கள் வீடுகளில் செய்யும் வேலைகளுக்குச் சரியான மதிப்பீடுகள் இல்லை. பணம் சம்பாதித்து தரும் பெண்களின் வேலைகளைத்தான் வேலையாக நினைக்கிறார்கள். வீட்டில் வேலை செய்பவர்களுக்கு ’சும்மா இருக்கிறாள்’ என்ற பெயர்தான் சூட்டப்பட்டிருக்கிறது. எந்தப் பெண்ணும் சும்மா இருந்துவிட முடியாது.

வேலைக்குச் செல்லாத மனைவி விபத்தில் இறந்தால் அந்த இறப்புக்கு இழப்பீடு இல்லாமல் இருந்தது. சமீபத்தில்தான் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.

58 – 60 வயதில் ஓர் ஆண் தன் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட முடியும். ஆனால் ஒரு பெண்?

தினமும் 5 பேருக்குச் சாப்பாடு கட்டி அலுத்துப் போயிருந்த ஓர் அம்மா, ’ஒவ்வொருத்தருக்கும் கல்யாணம் ஆக, ஆக ஒரு டப்பா குறையுதுன்னுதான் தோணும். இந்த டப்பா கட்டற வேலையிலிருந்து எப்ப முழு விடுதலை கிடைக்குமோ?’ என்று விரக்தியுடன் சொன்னார்.

வயதான காலத்தில் வேலைகளைச் சுருக்கமாகச் செய்துவிட்டு, ஓய்வு எடுக்கக்கூட இப்போதுள்ள சூழல் விடுவதில்லை. பேரன், பேத்திகளைக் கவனித்துக்கொள்வதற்காக மீண்டும் தொடங்கிய இடத்திலிருந்து வேலையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது பெண்களுக்கு!

No comments:

Post a Comment