Thursday 16 October 2008

கவிஞர் கண்ணதாசன் கண்ட இஸ்லாம்!! ஒரு சிறப்பு பார்வை ...

இஸ்லாமியத் திருமறையின் பெருமைகளையெல்லாம் நன்குணர்ந்த கவிஞர் கண்ணதாசன் திருக்குர்அனின் சிறப்புகளையெல்லாம் ஓர் அழகிய கட்டுரையாக வழங்கியுள்ளார். கண்ணதாசனின் இஸ்லாமிய புலமைக்கு அந்தக் கட்டுரை சான்றாக அமைகின்றது. 'ஞானரதம்' 1978 மே இதழில் வெளியான அந்தக் கட்டுரையில் கவிஞர் கண்ணதாசன் கீழ்க் கண்டவாறு திருக்குர்ஆனின் சிறப்புக்களை எடுத்துறைக்கிறார்.

'உலகமெங்கும் பல மொழிகளில் இஸ்லாமியத் திருமறை திருக்குர்ஆன் வந்துள்ளது. இந்தத் திருமறை ஒரு ரமளான் மாதத்தில் துவக்கப் பட்டு பல கட்டங்களில் இருபத்து மூன்று ஆண்டுகளில் இறைவனால் கூறப்பட்டது.

மக்காவில் உபதேசிக்கப் பட்டது ஒரு பகுதி. மறு பகுதி மதினாவில் உபதேசிக்கப் பட்டது.

பெரும்பாலும் எல்லா மதத்து வேதங்களுக்குள்ளும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. எல்லாமே சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டவை. மக்களை ஒழுங்காக வாழ வைப்பவை.

இறைவனுக்கு இணை வைத்துப் பேசக் கூடாது: வணங்கக் கூடாது என்று இத்திருமறையிலேயே கூறப்படுகிறது. அதனால் பிற மத நூல்களை ஒப்புவமை கூற நான் விரும்பவில்லை.

பொது நோக்கில் இஸ்லாமியத் திருமறை சமூக வாழ்க்கையைப் பேசுகிறது: பொருளாதாரத்தைப் பேசுகிறது: லாபத்தில் எவ்வளவு சதவீதம் ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பதையும் கூறுகிறது: சொத்துப் பிரிவினை, பெண்ணுரிமை அனைத்தையும் விவரிக்கிறது.

இத்திருமறை ஒரு வேதமாக மட்டுமின்றிச் சமய மக்களுக்கு சிவில் சட்டமாகவும் பயன்படுகிறது.

எனக்குத் தெரிந்து ஒரு மூல வேதம் குடும்ப வாழ்க்கையை இவ்வளவு விவரமாக விவரிப்பது இத்திருமறை ஒன்றே!

திருக்குர்ஆனை முழுமையாகப் படித்தவர்கள் சராசரி குடும்ப வாழ்க்கையை ஒழுங்காக நடத்த முடியும்.

இது ஒரு தெய்வீக போதனை நூலாக மட்டுமின்றி சமூக வாழ்க்கைக்கான நியாய நூலாகவும் இருப்பதால் எல்லா மக்களும் இதைப் படிக்க வேண்டும்.

அல்லாஹ் எல்லையற்ற பேராளன்: கருணைக் கடல்: கஷடப்படுபவர்களை எப்போதும் அவன் திரும்பிப் பார்க்கிறான் - இந்தச் செய்தி ஒரு மனிதனை மத நம்பிக்கையில் அழுத்தமாக வேரூன்றச் செய்வதற்கு நிச்சயமாகப் பயன்படும்.

இறைவன் அனுப்பிய தூதுச் செய்தியை உலகுக்குத் தெரிவித்த திருத் தூதராகவே நபிகள் பெருமகனாரும் கருதப் படுகிறார்.

பெருமகனாருக்கு முன்னால் வேறு சில தூதர்களையும் வேறு சில வேதங்களையும் உலகின் பல்வேறு பாகங்களுக்கு இறைவன் அனுப்பியிருந்தான் என்ற செய்தியும் இதில் காணப்படுகிறது. நம்பிக்கை வைப்பதை இது மேலும் அதிகப் படுத்துகிறது.

இது ஒரு சமய நூல் மட்டும் அன்று: சரித்திர நூல்: சமூக நூல்.

எல்லா மதத்தவரும் இதைப் படிக்க வேண்டும்.

-கண்ணதாசன்,
ஞானரதம
மே, 1978

திருமறையின் தோற்றுவாய்க்கு கண்ணதாசனின் மொழி பெயர்ப்பு :

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்எல்லையில்லா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கின்றேன்.

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்உலகமெலாம் காக்கின்ற
உயர்தலைவன் அல்லாவே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்
சொந்தமென நிற்பவனாம்

அர் ரஹ்மானிர் ரஹீம்அவன் அருளாளன்:
அன்புடையோன்:

மாலிகி யவ்மித்தீன்

நீதித் திருநாளின்
நிலையான பெருந்தலைவன்:

இய்யாக்க நவ்புது
வ இய்யாக்க நஸ்தயீன்


உன்னையே நாங்கள்
உறுதியாய் வணங்குகிறோம்:
உன்னுடைய உதவியையே
ஓயாமல் கோருகிறோம்

இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம்நேரான பாதையிலே
நீ எம்மை நடத்திடுவாய்:

ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம்
ஹைரில் மஹ்லூபி அலைஹிம்
வலள்ளால்லீன்
எவர் மீது உன் கோபம்
எப்போதும் இறங்கிடுமோ
எவர்கள் வழிதவறி
இடம் மாறிப் போனாரோ
அவர்களது வழி விட்டு
அடியவரைக் காத்து விடு!

எவ்வளவு அழகாக எளிய தமிழில் கவிஞரின் மொழி பெயர்ப்பு வந்துள்ளது! இது அல்லாமல் திருக்குர்ஆன் முழுமைக்குமே விளக்கவுரை எழுத கண்ணதாசன் அவர்கள் விருப்பப் பட்டார். அந்த எண்ணம் முஸ்லிம் அன்பர்கள் சிலரின் எதிர்ப்பால் தடைப் பட்டுப் போயிற்று. குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர் குர்ஆனுக்கு உரை எழுதக் கூடாது என்று மார்க்க அறிஞர்கள் ஒரு சிலரின் எதிர்ப்பால் அந்த முயற்சி தடைப் பட்டது. குர்ஆன் என்பது எந்த ஒரு நபருக்கும் சொந்தமானதல்ல. உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒன்று.

'இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. குர்ஆன் மனிதர்களுக்கு நேர்வழியைக் காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும்'
-குரஆன் 2 : 185

என்று இறைவன் பல இடங்களில் மனித குலத்துக்கு சொந்தமானது என்று கூறியிருக்க எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கண்ணதானின் மொழி பெயர்ப்பை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்த்தனர். முகமது நபியை வெட்டுவதற்கு வாள் எடுத்து வந்த உமரை இஸ்லாமிய ராஜ்ஜியத்தின் ஜனாதிபதியாக்கியது இதே குர்ஆன் வசனங்கள் அல்லவா! கண்ணதாசன் குர்ஆனை மொழி பெயர்க்கும் காலங்களில் இறைவனின் வார்த்தைகளில் கட்டுண்டு மதுவையும், மாதுவையும் விடுவதற்கு மொழி பெயர்ப்பு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் அல்லவா!

இது சம்பந்தமாக கவிஞரே 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளி வந்த 'ஞானரதத்தில்' அறிக்கை ஒன்றும் விடுத்துள்ளார்:

'இஸ்லாமிய நண்பர்கள் பலரின் வேண்டுகோளுக்கினங்க திருக்குர்ஆன் உரை எழுதுவதை நான் நிறுத்தி விட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இஸ்லாமியத் திருமறையின் தமிழுரையைத் துவக்கி வைத்ததோடு அப்பணியை முடித்துக் கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'
-கண்ணதாசன், 30.12.1977

No comments:

Post a Comment