Sunday 18 December 2011

சண்டையிடும் குழந்தைகளை சமாளிக்கும் வழிகள்.....

  சண்டையிடும் குழந்தைகளை சமாளிக்கும் வழிகள்



இரண்டு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் ஏற்படும் குழந்தைகளுக்கான சண்டை சச்சரவுகளினை முடிந்த மட்டில் தடுப்பது எப்படி என்று அலசுவோம். பொதுவாக இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் அடிக்கடி நடக்கும் சண்டைகளை உறவினர்களிடம் சொல்லி சொல்லி கவலைப்படுவார்கள். ”இவர்கள் இரண்டுபேரும் எலியும் பூனையும் மாதிரி. எப்போதும் ஒரே சண்டை. சண்டைன்னா வெறும் வாய்ச்சண்டை இல்லை. கொடுவாள் தவிர, மற்ற எல்லாத்தையும் தூக்கியாச்சு.சேர்ந்தாப்ல பத்து நிமிஷம் இருந்தா, உடனே ஒரு சண்டை வந்துடுது. திட்டிப் பார்த்தாச்சு. அடிச்சும் பார்த்தாச்சு. கேட்கிறதா தெரியல. என்னைக்குத்தான் இந்த சண்டை ஓயப்போகுதோ தெரியல”  என்று அடிக்கடி கவலைப்பட ஆரம்பித்துவிடுவதுண்டு.என் பேனாவை எடுக்கிறான். என் புக்கை கிழிச்சிட்டான் என்று பஞ்சாயத்து வரும் போதெல்லாம் பல வீடுகளில் சொல்கிற தீர்ப்பு அவன்கூட சேராதேன்னு சொல்லியிருக்கேன்ல சேர்வதினால் தானே சண்டை வருகிறது. சேராதீர்கள் என்ற சொல் தவறானது.குழந்தைகள் தங்களுக்குள் பிரச்சனைகள் வந்தால் உணர்ச்சிகளை, சண்டை போட்டு தீர்த்து விடுகிறார்கள். வெறுப்பை சேர்த்து வைப்பது இல்லை. அதனால் அடுத்த நிமிடம் எதுவுமே நடக்காதது போல அவர்களால் இயல்பாக இருக்க முடிகிறது. ஒன்று சேராதீர்கள் என்பதற்கு பதில், இப்படி சொல்லலாம், இது உன் பேனா, இது அவன் சட்டை, இது உன் ரூம், இது அவன் ரூம், இவை நம் வீட்டில் உள்ளவை. தேவைப்படுகிற நேரத்தில் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். சண்டை வரவேண்டாம் என்று, ஒரு பொருள் தேவையென்றால்கூட இரண்டு பேர் இருக்கிற காரணத்தால், இரண்டு வாங்குகிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். கலர்கூட வேறு வேறாகத்தான் இருக்கும். இது அவர்களை சமாளிக்க உதவலாம். ஆனால் உறவை வளர்க்க உதவாது.

தெரிந்த சில யோசனைகள் :

உங்கள் உடன்பிறந்தவர்களை, குழந்தைகளுக்கு முன்னால் விட்டுக்கொடுத்து பேசாதீர்கள். உயர்வாக மட்டுமே பேசுங்கள்.

ஒரு குழந்தையைப் பற்றி இன்னொரு குழந்தையிடம் குறை சொல்லாதீர்கள்.

குறைகளோடு மற்றவர்களை ஏற்றுக் கொள்ளும் பழக்கத்தை நீங்களே முன்மாதிரியாக இருந்து ஏற்படுத்திக்கொடுங்கள்.

தின்பண்டங்களை பங்கு பிரிக்கும்போது யார் பங்கு பிரிக்கிறார்களோ, அவர்கள்தான் கடைசியில், தங்கள் பங்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என குழந்தைகளுக்கு சொல்லுங்கள். அப்போது, அவன் மட்டும் கூட எடுத்துக் கொண்டான் என்ற பிரச்சனை வராது.

இவன் செய்தது சரியா? நீயே சொல் என்று உங்களிடம் வந்தால், ‘கண்டிப்பா நான் கருத்து சொல்ல மாட்டேன். நான் சொல்லணும்னா நாளைக்குச் சொல்றேன்’ என்பதே உங்கள் பதிலாக இருக்க வேண்டும். நீங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ். உங்களுக்குள்ள கருத்து வேறுபாடுகள் வர்றது சகஜம்தான். இதை நீங்களே சரி பண்ணிடுவீங்க. நான் இதுல தலையிட மாட்டேன். இதையெல்லாம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஒப்பிட்டு பேசிப் பேசி, சகோதரர்கள விரோதிகளாக்குவது.குழந்தைகளை தொட்டதற்கெல்லாம் ஒப்பிடுவது ‘உன்னைவிட சின்னவன்தானே.. அவன் எப்படி படிக்கிறான் பாரு. நீயும்தான் இருக்கியே..’
இயல்பாகவே, யாருடன் ஒப்பிட்டு பேசுகிறோமோ, அவர்கள்மீது இனம்புரியாத வெறுப்பு தோன்றும். எனவே ஒப்பிட்டு பேசிப் பேசி சகோதரர்களை நிரந்தர சண்டைக் காரர்களாக மாற்றி விடாதீர்கள்.

குழந்தைகளுக்கு முன்னால் சண்டை போடாதீர்கள். ஏனெனில் குழந்தைகள் உங்களை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்.

அதே போல, ‘அவன் சின்னப்பையன். அவனோட போய் சண்டை போடுற. நீதான் பெரிய பையன். நீதான் விட்டுக்கொடுக்கணும்’ என்று பேசாதீர்கள். இந்த நியாயமெல்லாம் வளர்கிற வயசில் புரியாது. இந்த அறிவுரையை, இரண்டு பேரிடமும் சொல்லுங்கள். அப்போதுதான், பெற்றோர்கள் நம்மை சமமாக நடத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்வார்கள். ஒற்றுமையாக இருப்பார்கள்.

கோபத்தில், இவன் எனக்கு அண்ணனே இல்லை என்றால், அப்போதே இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று பாயாதீர்கள். பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தில் அதை சுட்டிக்காட்டி, கிண்டல் செய்யுங்கள். “கோபத்தில்கூட இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது” என்று உறுதி எடுத்துக்கொள்ள தூண்டுங்கள்.

இருவரில் யார் முதலில் சமாதானமாக போக முயற்சிக்கிறார்களோ, அவர்களே உங்கள் அபிமானத்திற்கு உரியவர்கள் என்பதைப் புரிய வையுங்கள்.

மற்றவர்களிடம் உங்கள் குழந்தைகளை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் நிறைகளை மட்டும் சொல்லி அறிமுகப்படுத்துங்கள்.நம்குழந்தைகளை அவமானப்ப்டுத்தாதீர்கள்

மாறாக ஒரு பையனை பாராட்டியும் ஒரு பையனை குறையும் சொன்னால் நாம் அவர்களை அறிமுகப் படுத்தவில்லை. அவமானப்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

நண்பர்களே ! சண்டை போடாத குழந்தைகளே இல்லைதான் எனினும் இளம்வயதில் நடக்கும் சண்டைகள், பின்னால் சொத்துக்காக சண்டை போடும் அளவிற்கு அவர்களை சுயநலமிகளாக மாற்றிவிடக்கூடாது

No comments:

Post a Comment