Wednesday 16 November 2011

தமிழ் தமிழன் என்றால் ஏன் பலருக்கு எரிகிறது?


மிகவும் கசப்பான உண்மையை நான் இங்கே  சொல்லப்போகிறேன். இது பலருக்கும் தெரிந்திருக்கலாம். 

தமிழ் தமிழன் என்று சொன்னாலே தமிழ் நாட்டில் உள்ள சிலருக்கு அல்லது பலருக்கு ஏன் எரிகிறது என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே உள்ளது. இதற்கான காரணமாக நான் கருதுவதை இங்கே  எழுதுகிறேன். இது எந்த அளவுக்கு சரி அல்லது தவறு என்பதை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.

௧. தமிழ்நாட்டில் வசிக்கும்  சிலபலர்   தன்னை தமிழன் என்றே  நினைப்பது இல்லை. 
(தமிழன்  என்றால்   என்ன அதை எப்படி வரையறை செய்வது? இனிமேல் தான் வரையறுக்கப்படவேண்டும் என நினைக்கின்றேன்.) 
 தமிழ் பேசும் அனைவரும் தமிழர்களா?  இதற்கு பதில் இல்லை என்று தமிழ் பேசும் பலரே  கூறுவார்கள். காரணம் அவர்களின் தாய் மொழி வேறு ஒன்றாக இருக்கும். அப்படி தாய் மொழி தமிழாகவே சிலருக்கு இருந்தாலும் அவர்கள் மூதாதையர்களின் மொழி வேறு ஒன்றாக இருக்கும். 

தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கு வழி வந்தவர்களும், மலையாள வழி வந்தவர்களும், கன்னட வழி வந்தவர்களும் தங்களை தமிழன் என்று சொல்லிக் கொள்வதில்லை.மேலும் தமிழ் மொழியை பற்றி பெருமைகள் பேசினால் இவர்களுக்கு எரிகிறது.தங்கள் மொழியை பற்றி பேசவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மைதான் இதற்கு காரணம். பாதுகாப்பின்மையாக கூட கருதலாம்.  இதற்கு விதிவிலக்காக  சிலபலர் உண்டு. (இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தமிழன் தமிழை  உயர்த்தி பேசுகிறானே தவிர மற்ற மொழிகளை தாழ்த்தி பேசவில்லை.) 

௨. கிருத்துவர்களும், இசுலாமியர்களும் தங்களை மதத்தின் பிரதிநிதியாக பார்க்கிறார்களே தவிர மொழியின் பிரதிநிதிகளாக பார்ப்பதில்லை. மதத்திற்கு  தரும் முக்கியத்துவத்தை தமிழுக்கு தருவதில்லை. இதற்கும் விதி விளக்குகள் உண்டு. (மதத்தை விட மொழிதான் பழமையானதும் போற்றத்தக்கதும் எனபதை இவர்கள் உணர வேண்டும். எப்பொழுது நினைத்தாலும் மதம் மாறலாம். ஆனால் மொழி மாற முடியாது.)

௩.பெரியார் தீண்டாமையை ஒழிக்கும் தன் பாதையில்  சில பல பிராமணர்களை நீங்கள் ஆரியர்கள் சமஸ்கிருதம்  தான் உங்கள் மொழி என்று  தமிழுக்கு எதிரியாக்கிவிட்டார்.  இதற்கு விதிவிலக்காக  சிலபலர் உண்டு.

௪ தமிழ் தமிழன் என்று தமிழர்களை தன் சுய நலத்திற்காகவும் குடும்ப நலத்திற்காகவும் சிலர் பயன் படுதிக்கொண்டதால் இன்று உண்மையாக தமிழ் தமிழன் என்பவனையும் சில பல  உண்மையான தமிழர்கள் சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.

௫. கடந்த பல வருடங்களாக பலரும்  ஆங்கில வழியில் கல்வி கற்று வருவதால் அவர்களுக்கு தமிழ் மொழியின் மீது பற்றில்லாமல் போய்விட்டது.  சிலர் தமிழில் அப்படி என்ன இருக்கிறது, நாம் ஆங்கிலத்தில் படித்து இன்று நன்றாகத்தானே இருக்கிறோம், பின்பு ஏன் இவர்கள் இன்னும் தமிழ் தமிழன் என்று கூப்பாடு போடுகிறார்கள் என்று நினைக்கிறார்கள்.  இதற்கு விதிவிலக்காக  சிலபலர் உண்டு.

இந்த சில காரனங்களால் தான் இன்று தமிழ் தமிழன் என்றால் பலருக்கும் எரிகிறது. 

நான் அனைவரும் ஜாதி மதம் போல் மொழி என்ற வட்டத்தில் அனைவரும் தங்களை அடைத்து கொள்ள வேண்டும் என்று கூறவில்லை. மாறாக மொழிக்கு முக்கியத்துவம்  கொடுங்கள் என்று தான் கூறுகிறேன். (ஜாதி மதம் என்ற வட்டமே தேவையற்றது என்றே நான் நினைக்கின்றேன்) 

ஆனால் மொழியை அவ்வாறு ஒதுக்க முடியாது ஒதுக்கவும்  கூடாது.
மனிதன் கண்டுபிடிப்பில் நான் மிகவும் உயர்ந்ததாகவும் சிறந்ததாகவும் கருதுவது மொழியைத்தான். மொழியின் பெயரால் சண்டை இடுங்கள் என்று நான் கூறவில்லை. அனைத்து மொழியையும் அன்போடு பாருங்கள் என்றுதான் கூறுகிறேன். அனைத்து மொழிகளையும் ஏற்றத்தாழ்வின்றி பார்க்க வேண்டும் 

தாஜ்மஹாலை முகமதியர்களின் சின்னமாக பார்க்காமல் எப்படி காதலின் சின்னமாக கொண்டாடுகிறோமோ அவ்வாறே தமிழின்  தொன்மையை நாம் பார்க்க வேண்டும். (இதற்கு சமஸ்கிருதம் விதிவிலக்கல்ல).

அதே நேரத்தில் அவர் அவர்களது தாய்மொழியை காப்பது தாய் தந்தையை காப்பது போல் அவர் அவர்களின் கடமை என்று உணர்ந்தால். மொழியின் பெயரால்  சண்டையும் வராது, அச்சமும் வராது, எரிச்சலும் வராது.

No comments:

Post a Comment