Wednesday 28 September 2011

அணுமின்சாரம் -ஒரு ஆய்வு ....


அணுமின்சாரம் சிறந்த மின்சாரமாக இருந்திருந்தால் உலகநாடுகள் அதிக அளவில் அணு உலைகளை அமைத்திருக்கும். ஆனால், உலகின் 31 நாடுகளில் மட்டுமே அணு உலைகள் அமைக்கப்பட்டன. அதிலும் ஒருநாடு, லிதுவேனியா தனது கடைசி அணு உலையை மூடிவிட்டது. இப்போது ஐ.நா. அவையில் உறுப்புநாடுகளாக உள்ள 192 நாடுகளில் வெறும் 30 நாடுகளில் மட்டுமே அணு உலைகள் உள்ளன.

அதிலும் உலகின் அணு உலைகளில் முக்கால் பங்கு வெறும் 6 நாடுகளில் மட்டுமே உள்ளன. அவை. அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான், ரசியா, செர்மனி, தென் கொரியா. இவற்றில் - செர்மனி, ஜப்பான் நாடுகள் அணு உலைகளுக்கு விடைகொடுக்கப்போவதாக அறிவித்துள்ளன.

2002 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 444 அணு உலைகள் இருந்தன. இப்போது 437 அணு உலைகள் மட்டுமே உள்ளன. அதாவது - உலகளவில் அணுமின் திட்டங்கள் அதிகமாகவில்லை. குறைந்து வருகின்றன.
அணுமின்சாரம்தான் எதிர்காலத்தின் மின்சாரம்" என்பது ஒரு அயோக்கியத்தனமான கூற்று. இதனை அப்துல் கலாம் அவர்கள் கூறிவருகிறார். இப்போது சுமார் 4,800 மெகாவாட் அளவாக உள்ள இந்திய அணுமின் உற்பத்தியை 50,000 மெகாவாட் அளவாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இந்திய அணுசக்தி துறை 1970 ஆம் ஆண்டில் வெளியிட்ட கணிப்பில் 2000 ஆவது ஆண்டில் இந்தியாவில் 43,000 மெகாவாட் அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறியது. ஆனால், 2011 ஆம் ஆண்டில் கூட 4,870 மெகாவாட் அளவுதான் எட்ட முடிந்தது.

உலகளவில் 2000 ஆம் ஆண்டில் 4,450 ஜிகாவாட் (ஒரு ஜிகாவாட் = 1000 மெகாவாட்) அளவு அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று பன்னாட்டு அணுசக்தி முகமை 1974 ஆம் ஆண்டிலேயே அறிவித்தது. ஆனால், 2011 ஆம் ஆண்டில் கூட 375 ஜிகாவாட் அளவுதான் உலகம் முழுவது அணுமின்சாரம் உற்பத்தி ஆகிறது.

அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டில் அந்நாட்டு அதிபர் நிக்சன் அங்கு 1000 அணு உலைகள் அமைக்கப்போவதாகக் கூறினார். ஆனால், அங்கு ஒட்டுமொத்தமாக 253 அணு உலைகள் தொடங்க உத்தரவிடப்பட்டு, 71 நிலையங்கள் தொடங்குவதற்கு முன்பே கைவிடப்பட்டன, 50 நிலையங்கள் கட்டுமானம் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டன. 28 நிலையங்கள் தொடங்கிய பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டன. இப்போது 104 அணுமின் நிலையங்கள் மட்டுமே உள்ளன. அதுமட்டுமல்லாமல் கடந்த 37 ஆண்டுகளாக அமெரிக்காவில் புதிய அணுமின் நிலையம் தொடங்கப்படவில்லை.


உலகிலேயே அதிக அணு உலைகள் உள்ள பகுதி மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆகும். அங்குள்ள 18 நாடுகளில் எட்டு நாடுகள் அணுமின்சாரத்திட்டங்கள் இல்லாத பகுதி என அறிவித்து விட்டன. 4 நாடுகள் புதிய அணு உலைகள் தொடங்க மாட்டோம் எனக் கூறிவிட்டன. செர்மனி நாடு 2022 க்குள் அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாகக் கூறிவிட்டது. அங்கு வெறும் மூன்று நாடுகள் மட்டுமே அணுமின்சாரத்தை ஆதரிக்கின்றன. ஐரோப்பா முழுவதிலும் கடந்த 30 ஆண்டுகளாக புதிய அணுமின் திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை.

இப்போது உலகின் மொத்த மின் உற்பத்தியில் 13% அணுமின்சாரம் ஆகும். இது 2050 ஆம் ஆண்டில் 6% ஆகக் குறையும் என மதிப்பிட்டுள்ளது பன்னாட்டு அணுசக்தி முகமை. எனவே, அணுமின்சாரம்தான் எதிர்கால மின்சாரம் என்பது காதில் பூ சுற்றும் வேலை.


இந்த உணர்வோடு, நாம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பையும், மக்களின் நியாயமான கேள்விகளையும், உண்மையான பயத்தையும் போக்கும் வகையில் ஒவ்வொன்றாக பார்ப்போம். அதாவது ஒரு அணுமின் நிலையத்தைப்பற்றியும் அதன் பாதுகாப்பை பற்றி நாம் முக்கியமாக பார்த்தோமேயானால், நான்கு பாதுகாப்பு விஷயங்கள் முக்கியமானவை. 

1. Nuclear Criticality Safety
 - நீடித்த தொடர் அணுசக்தி கதிர்வீச்சினால் எதிர்பாராத விதமாக விபத்து நேர்ந்தால் அதில் இருந்து எப்படி பாதுகாப்பது என்பது பற்றிய தொழில் நுட்பம்

2. Radiation Safety 
- அணுக்கதிர் வீச்சுள்ள எரிபொருள்களை எப்படி கையாளுவது என்பது பற்றியும், உலக தரத்திற்கேற்ப அதை எப்படி எந்த முறையில் பாதுகாப்பாக உபயோகிப்பது என்பது பற்றிய வழிமுறை

3. Thermal Hydraulic safety 
- அணுஉலையில் எரிபொருளை குளிர்விக்கும் அமைப்பு மின்சார தடையால் இயங்கவில்லை என்றால், அதை எப்படி மின்சாரம் இல்லாமலேயே இயங்க வைத்து மாற்று மின்சாரம் வரும் வரை உருகி வெப்பநிலை கூடி வெடிக்காமல் தடுக்கும் அமைப்பை எப்படி மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் இயக்குவது.

4. Structural integrity Safety? 
அணுஉலையும் அது தொடர்பான மற்ற அமைப்புகளின் கட்டமைப்பையும், அது அமைக்கப்பெறும் இடத்தின் வலிமையையும், இயற்கைப்பேரிடர் நேர்ந்தாலும் அதை எப்படி நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற வழிமுறை

இந்த நான்கு அமைப்புகளும் முறையாக அமைக்கப்பட்டிருக்கிறதா, தரத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறதா என்று தான் முதலில் பார்க்கவேண்டும். 



ஒரு அணுஉலையை நிறுவுவதற்கு இடத்தை தேர்ந்தெடுக்கும் முன்பாக மிக கடுமையான தேர்வு முறை பின் பற்றப்படுகிறது. அந்த இடத்தில், அதாவது பூகம்பத்தின் விளைவுகள் எப்படி இருக்கும், அது எவ்வித பூகம்ப வரையரைக்குள் வரும், அதன் பூகோளத்தன்மை, அடிப்படை அமைப்பு, பூகம்பம் வந்தால் ஏதேனும் பாதிப்பு நிகழுமா இல்லையா, பாறைகளின் தன்மை எப்படி இருக்கிறது, சுனாமி வர வாய்ப்பு உண்டா, அப்படி வந்தால் அது எப்படி பட்ட தன்மையானதாக இருக்கும், வெள்ளம், மழை, பக்கத்தில் உள்ள அணைக்கட்டு உடைந்தால் அதனால் பாதிப்பு ஏற்படுமா, விமான நிலையம் பக்கத்தில் இருக்கிறதா இல்லையா, நச்சு மற்றும் வெடிக்கும் தன்மையுள்ள பொருள்கள பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்க இடம் இருக்கிறதா இல்லையா, இராணுவ அமைப்புகள் அருகில் உள்ளனவா, அந்த பகுதியில் சுற்றுச்சூழல் அமைப்பு எவ்விதம் அமைந்துள்ளது, கடல் உயிரனங்களின் வாழ்வாதாரம், தேவையான பரந்த நிலப்பரப்பு, தண்ணீர், மின்சாரத்தேவை இருக்கிறதா இல்லையா போன்ற பல்வேறு காரணிகளை ஆராய்ந்து தான் அணுஉலை அமைக்க ஒரு இடத்தை அரசு தேர்வு செய்கிறது. இதில் ஏதாவது ஒன்று குறை இருந்தால் கூட அந்த இடம் அணு மின்சார உற்பத்திக்கு ஏதுவான இடம் இல்லை என்ற முடிவுக்கு வந்து, அதற்கான அங்கீகாரம் கிடைக்காது. 

எனவே அணுஉலை அமைக்கும் முன்பாகவே இத்தகைய அம்சத்தையும் ஆராய்ந்து பார்த்து முடிவு எடுத்த பின்புதான் கூடம்குளம் இடம் அணுஉலை அமைப்பிற்கான Environmental Impact Assessment (EIA),
 

அதாவது இந்த அணு உலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றத்தைப்பற்றி ஒரு மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் மற்றும் அதன் தொடர்புடையோர் கருத்தரிந்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் 2006 ம் ஆண்டின் வழிமுறைப்படி தேவையான பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அதற்கான AERB Code of Practice on Safety in Nuclear Power Plant Sitting வழிமுறைப்படி, இடம் தேர்வுக்கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டு அரசு அதற்கு முறைப்படி அனுமதி கொடுத்துள்ளது. எனவே, அணுஉலை சம்மந்தமாக செய்யப்படும் எந்த ஒரு அனுமதியும் எவ்வித சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காத வகையில் அரசு மிக கடினமான வரைமுறைகளுடன் நிறைவேற்றி இருக்கிறது. ஜப்பான் புக்குஸிமா விபத்திற்கு பிறகு பூகம்பமும், சுனாமியும் ஒன்று சேர்ந்து வந்தாலும் கூட கூடங்குளம் அணு உலை தாங்கும்.
 

தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பகுதி பற்றிய அச்சம் தேவையற்றது (Exclusion and sterilization zone)
 

அணுஉலையை சுற்றி 1.5 கிலோமீட்டர் தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான பகுதி, அங்கு தான் குடியிருப்பு தடைசெய்யப்பட்ட பகுதி, அந்த பகுதி அணுஉலைக்கான இடத்திற்குள்ளேயே வருவதால், அதற்கு வெளியே குடியிறுக்கும் மக்களை வெளியேற்றுவது என்ற கேள்விக்கு இடமில்லை.
 

இதற்கடுத்தாற்போல், வரக்கூடிய பகுதி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட பகுதியாகும். அங்கு ஏற்கனவே வசிக்கும் மக்கள் எப்பொழுதும் போல் இருக்க, அந்த மக்கள் தொகை பெருக்கம் இயற்கையாக வளர எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஆனால் பாதுகாப்பு காரணம் கருதி அந்த பகுதியில் அதிகமான மக்கள் புதிதாக குடியேறுவது, அந்த 5 கிலோமீட்டர் பகுதிக்குள் புதிய தொழிற்சாலைகள் போன்றவை உருவாவது தான் கட்டுப்படுத்தப்பட வேண்டும், அதனால் அதிக மக்கள் குடியிருப்பு, அதாவது 20000 மக்கள் தொகைக்கும் மேல், அந்த பகுதியில் ஏற்படுத்தப்படக்கூடாது என்பது ஒரு வழிகாட்டு நெறிமுறை தானே தவிர, கட்டாயம் இல்லை.



தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment