Monday 1 March 2010

வைகை அணை (Vaigai dam)-ஒரு பார்வை..




வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையே வைகை அணை. பல பேர் வைகை அணை மதுரையில் உள்ளது என எண்ணிக்கொண்டிருப்பீர்கள் ஆனால் வைகை அணை தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ளது. 111அடி உயரம் உள்ள இந்த அணையில் 71அடி நீரை சேமிக்க முடியும். 


ஜனவரி மாதம் 1959 ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. அணையை சுற்றிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்காக்களும், விளையாட்டுத் திடல்களும் அமைந்துள்ளன. உல்லாச ரயிலும் இங்கு உண்டு. அணையின் முன்னால் ஒரு சிறிய பாலம் உள்ளது.  அதில் நின்று அணையின் அழகை ரசிக்கலாம், உங்கள் காலடியில் தண்ணீர் போவதையும் கண்டு மகிழலாம். பூங்காக்கள் முழுவதும் அழகிய பூக்களால் அலங்கரிப்பட்டுள்ளது. 




ஒரு பூங்காவில் தண்ணீர் ஆறு போல் மேலிருந்து கீழ் வரை வரும்படி செயற்கை அமைப்பும் செய்யப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் சில மீட்டர் தூரம் வரை பாய்ந்து இறுதியில் சின்ன அணை போன்ற அமைப்பின் வழியாக வெளிவந்து குண்டோதரன் வாயில் விழுகிறது.  ஆனால் இந்த தண்ணீர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே பாய்கிறது. இந்த பூங்கா "little brindavan" என்றே அழைக்கப்படுகிறது.


இந்த அணையின் நீர் திண்டுக்கல் மற்றும் மதுரையைச் சார்ந்த விவசாயிகளுக்கு பாசனத்திற்காகவும், மதுரை மக்களுக்கு குடிநீராகவும் பயன்படுகிறது. இந்த அணையின் அருகே தமிழ்நாடு அரசின் விவசாய ஆராய்ச்சி மையமும் அமைந்துள்ளது. அணையின் மிக அருகே அமைந்துள்ள தமிழ்நாடு மின்சாரத் துறையின் மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. (ஒரு அணையினால எவ்வளவு பயன்)


சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அணை முழுவதும் வண்ண மயமான மின்சார விளக்குகளால் ஜொலிக்கிறது. 


இங்கு செல்ல உகந்த நேரம் என்று எதுவுமில்லை.  எப்போதெல்லாம் அணை நிரம்புகிறதோ அதுவே சரியான நேரம்.  எனவே இங்கு செல்ல உகந்த நேரத்தை வருண பகவானே முடிவு செய்கிறார் நீங்களும் முடிவு செய்யலாம், பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அணை நிரம்புகிறது என்று கூறினால் அப்போது வைகை அணைக்கு செல்லலாம்.


எப்படி செல்வது?
1)தேனி மற்றும் ஆண்டிப்பட்டியில் இருந்து பல பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
2)அருகில் உள்ள ரயில் நிலையம் - திண்டுக்கல் மற்றும் மதுரை
3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை


கட்டணம்:
உள்நுழைய : ரூ.4
உல்லாச ரயில் - ரூ.10


நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை. 


குறிப்பு : உல்லாச ரயில் நிலையம், மின் விளக்கு ஜொலிப்பது, தண்ணீர் பாய்வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே. 


அணையில் நீர் இருக்கும்போது படகு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யலாம், சுற்றுலாத் துறை செயல்படுத்துமா?  நீங்களும் இங்கு செல்லலாமே. 

No comments:

Post a Comment