Saturday 6 February 2010

இந்தியாவுக்கு மரபணு மாற்று விதைகள் தேவையா ? ஒரு சிறப்பு விளிப்புனர்வுப்பார்வை..



டாக்டர். சுமன் ஷாஹை, சர்வதேச அளவில் குறிப்பிடத்தகுந்த மரபியல் விஞ்ஞானி. மரபணு மாற்றுப்பயிர்கள் குறித்து, 40 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பலநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் கௌரவப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது 'ஜீன் கேம்பெய்ன்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் இவர், இதன் மூலம் ஜார்கண்ட், பீஹார் மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களுக்கு உதவி வருகிறார். பத்மஸ்ரீ, போர்லாக் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கும் இவர், தொடர்ந்து, மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர். 'மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறார். சென்னையில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற, சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக, சமீபத்தில் வந்திருந்தார் சுமன் ஷாஹை. அப்போது அவருடனான சந்திப்பில் நம்முடைய கேள்விகளும்... அவருடைய பதில்களும் இங்கே... 
''இந்தியாவுக்கு மரபணு மாற்று விதைகள் தேவையா?''
''தேவையே இல்லை. இங்கேயே பாரம்பரிய விதைகள், அதிலிருந்து உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி விதைகள் என நிறைய இருக்கின்றன. 'விவசாயிகளின் தேவை என்ன?’ என்று ஆட்சியாளர்கள் புரிந்துகொள்வதில்லை. விவசாயத் துறையையும், தொழில்துறை போல உருவாக்கி விளைச்சலைப் பெருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். மரபணு மாற்று விதைகளால்தான் உற்பத்தியைப் பெருக்கமுடியும் என்கிற குருட்டு நம்பிக்கையில செயல்படுகிறார்கள், ஆட்சியாளர்கள். அவர்கள் நினைப்பது போல, மரபணு மாற்று விதைகளால் எந்த பிரச்னையையும் தீர்க்க முடியாது. இதனால் பலன் அடையப் போகிறவர்கள் பன்னாட்டு கம்பெனிக்காரர்களே.''
''விளைச்சலைக் காரணம் காட்டித்தானே மரபணு மாற்று விதைகளை முன்னிறுத்துகிறார்கள்?''
''விளைச்சல் குறைவுக்குக் காரணம், போதுமான தண்ணீர் வசதி இல்லாததுதான். முன்பு 3 போகம் பயிர் செய்த விவசாயிகள், இன்று ஒரு போகம் பயிர் செய்வதே பெரிய விஷயமாக இருக்கிறது. 5 டன் விளைந்த இடத்தில், 1 டன்தான் விளைகிறது. அதற்கான தீர்வுகளை ஆராய்ந்து சரிசெய்யாமல், குறுக்கு வழியில் போக நினைக்கிறார்கள். குறுக்கு வழி நிரந்தரமல்ல.''
''மரபணு மாற்று விதைகளால் இந்தியாவில் என்ன மாதிரி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று பயப்படுகிறீர்கள்?''
''மரபணு மாற்று விதைகளை இந்தியாவுக்குள் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் அனுமதித்தாலும், ஒரு கட்டத்தில் மரபணுமாற்றப்பட்ட விதைகள் மட்டும்தான் பூமியில் இருக்கும். குறிப்பாக, இந்தியாவில் மான்சான்டோவின் மரபணு விதைகளை அனுமதித்தால், இந்திய விதை கம்பெனிகளும் அதையேதான் தயாரித்து விற்பனை செய்யும். எண்ணற்ற பாரம்பரிய ரகங்கள் அழியும். விவசாயிகள் விதைகளுக்கென்று அதிகத் தொகையை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்தியாவின் பல்லுயிரினப் பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும். உயிரினச் சங்கிலியில் ஒன்றைச் சார்ந்துதான், இன்னொன்று. இந்தச் சமநிலை வெகுவாக பாதிக்கப்படும்.
கொசுவை ஒழிக்க, டி.டி.டி கொண்டு வந்தார்கள். ஆனால், கொசுக் களை ஒழிக்க முடியவில்லையே... அதுபோலத்தான் மரபணு மாற்றுப்பயிர்களும். ஏற்கெனவே, மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை அறிமுகப்படுத்தியதால் ஏற்பட்ட தற்கொலைச் சாவுகளை நாடே அறியும். இந்த நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும்.''
''இவ்வளவு பிரச்னை இருந்தும், மரபணு மாற்று விதைகளை மத்திய அரசு தொடர்ந்து ஆதரிப்பது ஏன்?''
''அரசியல்... அரசியல்... அரசியல் என்பதைத் தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்கிற பூதத்தைக் கொண்டு வந்து, மக்களை மூளைச்சலவை செய்கிறார்கள். இதற்கு விஞ்ஞானிகளும் துணை போகிறார்கள். விஞ்ஞானிகளுக்கு உண்மை தெரிந்தாலும், வெளியே பேசமாட் டார்கள். அந்தளவுக்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இது அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும் சேர்ந்து, இந்த தேசத்துக்கு எதிராக செய்யும் கூட்டுச்சதி! விஞ்ஞானிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விவசாயிகளைப் பற்றியோ, மண்ணைப் பற்றியோ அக்கறையில்லை.''
''ஆட்சியாளர்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதைக் கொண்டு வருகிறார்கள்?''
''எந்த ஆதாரமும் கிடையாது. மரபணு மாற்றுப்பயிர்களை அரசியல் ரீதியாக அணுகுகிறார்களே தவிர, ஆராய்ச்சி ரீதியாக அணுகவில்லை. ஒரு புதிய தொழில்நுட்பம் என்று பார்க்கிறார்களே ஒழிய, அது ஏற்படுத்தப்போகும் விளைவுகளைப் பற்றி அறியவில்லை. ஆராய்ச்சியாளர்களும் மேலிடத்து உத்தரவுகளுக்கு ஏற்பவே செயல் படுகிறார்கள். அரசு எப்படியாவது இரண்டாம் பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.''
''மரபணு மாற்றுப்பயிர்களை மக்களால் தடுக்க முடியாதா?''
''மரபணு மாற்றுப் பயிர்கள் குறித்து, அறிவியல் ரீதியாக, முதலில் மக்களுக்கு விளக்க வேண்டும். மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட்டால் மட்டுமே, அதைத் தடுக்க முடியும். விவசாயம் தற்சார்பு உடையதாக மாற்றப்பட வேண்டும். பாரம்பரிய ரகங்கள், இயற்கை வேளாண்மை போன்றவற்றின் மூலமே இதைத் தடுக்க முடியும். இதோடு, மரபணு மாற்றுப்பயிர்களால் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களையும் மக்கள் தவிர்க்க வேண்டும்.'
'தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளாரே... இது சாத்தியமா?'
''உத்தரப் பிரதேசம், பீஹார், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட 10 மாநில முதலமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்த விதைகளை, தங்கள் மாநிலங்களில் அனுமதிக்காமல் இருக்க, மாநில முதல்வர்களுக்கு அதிகாரம் இருக்கிறது.
இன்றைக்கு விவசாயிகளுக்கு, மத்திய-மாநில அரசுகள் செய்யவேண்டியது ஆராய்ச்சிகளை அல்ல, ஆபத்திலிருந்து காப்பாற்றும் முயற்சிகளைத்தான். விவசாயத்துக்கான தண்ணீர், பயிர் செய்வதற்கான தொழில்நுட்பங்கள், தரமான இயற்கை உரங்கள், பயிர்க் காப்பீடு, கடன் வசதி இவைதான் விவசாயத்துக்கான இன்றையத் தேவை. ரசாயன உரங்களோடே வாழும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதனால் கை அரிப்பு, மூச்சுத் திணறல் என நிறைய பக்க விளைவுகளைச் சந்திக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.''
நன்றி - விகடன்.

No comments:

Post a Comment