Friday 29 January 2010

தமிழரின் நீர் மேலாண்மை பற்றிய சிறப்பு கட்டுரை !! ஒரு சிறப்பு பார்வை..

முன்னுரை:
இயற்கைச் சூழல் தமிழகத்தை சிரான தட்பவெப்ப நிலையில் வைப்பதில்லை. வரலாறு காணாத வகையில் வெள்ளமும், அதனைத் தொடர்ந்து கடும் வறட்சியும் மாறிமாறி நிகழ்ந்து கொண்டிருக்கும்.
எனவே மழைநீரைச் சேமிப்பதிலும், சேமித்த நீரைத் திறம்படப் பயன்படுத்துவதிலுமே தமிழகத்தின் வேளாண்மை சார்ந்துள்ளது. இதற்குச் சான்றாக ஆயிரக்கணக்கான நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய பிறகட்டுமானங்கள் சங்ககாலம் தொட்டு இன்றளவும் இருப்பதைக் காணலாம். அவற்றின் சிறப்பே, அவை எல்லாம் புதைபொருள் ஆகிவிடாமல் இன்றும் பயன்படுகின்றன என்பதே ஆகும். நாம் காணும் எண்ணற்ற கண்மாய்களும், ஏரிகளும் தமக்குள் ஒப்பற்ற செய்திகளைப் புதைத்துப் கொண்டுள்ள வரலாற்றுப் பெட்டகங்கள், இந்த ஏரிகள் அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்பங்கள், தண்ணீரைப் பகிர்வதிலும், சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும் தமிழர்கள் கடைப்பிடித்த நீர் மேலாண்மைக் கோட்பாடுகள் இன்றளவும் ஏற்புடையவையாக உள்ளன. சங்க இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் காணப்படும் தொன்மையான ஆனால் இன்றும் என்றும் பயன்படக் கூடிய நீர் மேலாண்மைத் தொழில் நுட்பங்கள் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.
கண்மாய்களின் தொன்மம்:
திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆத்தூர். அங்கு கரிசல் குளம், பகடைக் குளம், புல்வெட்டிக் குளம் என்று மூன்று அடுக்கில் குளங்கள் உள்ளன. ஒரே கண்மாயில் இரண்டு குறுக்குக் கரைகள் அமைத்து மூன்றாகப் பிரிக்கப்பட்ட இந்தக் கண்மாய் மிக அருமையான தொழில்நுட்பம் கொண்டது. மூன்று கண்மாய்களும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்த நீர் மட்டம் அமைந்துள்ளது. இந்தக் கண்மாய் இருக்கும் இடத்திற்கருகில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் நீர் நிலைகளுக்கு அருகிலேயே இடுகாடுகளும், முதுமக்கள் தாழிகளும் அமைக்கப்படும். எனவே இக்கண்மாய் சங்க காலத்தைச் சேர்ந்தது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2000 ஆண்டுகளுக்கு மேலாக இக்கண்மாய் பயன்பாட்டில் உள்ளது என்பது இதன் சிறப்பு. இது போன்று, முதுமக்கள் தாழிகள் 50-க்கு மேற்பட்ட ஏரிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஏரிகளின் வடிவமைப்பு:
சங்கப் புலவர் கபிலர் எந்த வடிவில் ஏரி இருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறார்.
அறையும் பொறையும் மணந்த தாய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தென்நீர்ச் சிறுகுளம் கீழ்வது மாதோ
தேர்வன் பாரி தன் பறம்பு நாடே.
ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால் அதிக நீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு, எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும் போது ஏற்படும் இது ஏரி அமைப்பதில் மிகவும் சிக்கனமாக வடிவமைப்பு.
“சிறுபஞ்சமூலம்” நூலில் காரியாசான், ஏரிகள் அமைக்கப்பட வேண்டிய வரைபடத்தைத் தருகிறார்.
குளந்தொட்டு கோடு பதித்து, வழி சித்து
உளந்தொட்டு உழவயலாக்கி – வளந்தொட்டு
பாடு படுங்கிணற் றோடென்றிவ்வைம் பாற்
கடுத்தான் ஏகுசுவர்க்கத் தினிது.
ஒரு ஏரியைக் கீழ்க்கண்ட 5 அங்கங்களுடன் அமைப்பவன் சொர்க்கத்திற்குப் போவான் என்பது இப்பாடலின் பொருள்.
1. குளம் (குளம் தொட்டு). 2. கலிங்கு (கோடு பதித்து). 3. வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் போகும் கால்கள் ஆகிய வழிகளை அமைத்தல் (வழி சித்து).
4. பண்ணை மேம்பாட்டுப் பணிகள் மூலம் ஆய்க்கட்டுப் பகுதிகளை உருவாக்குதல் (உழுவயலாக்கி). 5. பொதுக்கிணறு அமைத்தல் (கிணறு).
முதல் நான்கு அங்கங்களும் கொண்டவை நாம் சாதாரணமாகப் பார்க்கும் ஏரிகள். ஆனால் ஏரிகளில் நீர் குறைவாக இருக்கும் போது, ஏரி மதகுகள் மூலம் தண்ணீர் பாய்ச்சுவது, அதிக நீர் விரயமாக்கும் வழி. அந்த நேரங்களில், மதகுகள் மூலம் நீர் பாய்ச்சுவதை விட, நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது சிறந்த நீர் மேலாண்மை வழி, எல்லோரும் கிணறு தோண்ட முடியாது. ஆகவே பொதுக் கிணறு அமைத்து அனைவரும் தண்ணீரைப் பாய்ச்சிக் கொள்வது சிறந்த வழியாகும். தற்போது மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றை இணைத்து பயன்படுத்த வேண்டும் என்ற கோட்பாடு உலகெங்கும் பரவி வருகிறது. இந்த சிறந்த நீர்மேலாண்மை உத்தி, சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தில் இருந்ததென்பதும் அது இன்று மீண்டும் பயனுக்கு வருகிறது என்பதும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் செய்தியாகும்.
ஏரிக்கரைகள்:
மண் கரைகள் அல்லது மண் அணைகள் கட்டும் போது, நீர்க் கசிவைத் தடுப்பதற்காக, களி மண்ணால் ஆன உட்சுவர் ஒன்றை அமைத்து அதனை மூடி, மண் கரைகள் அமைப்பதும் வழக்கம். உலகெங்கும் இன்றளவும் இந்தத் தொழில் நுட்பம் பயன்படுகிறது ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மிகப் பழமையான ஏரிகளில் இது போன்ற ஊடு சுவர்கள் இல்லை. நீர்க்கசிவும் இல்லை. தவிர அப்பகுதியில் கிடைத்த மண்ணைக் கொண்டே இந்த ஏரிகள் அமைத்திருந்தது வியப்பூட்டுகிறது. இதன் தொழில்நுட்பம் என்னவென்ற கேள்விக்கு சங்க இலக்கியங்களில் விடை கிடைக்கின்றது. ஏரிக்கரைகள் “அரை மண்” பயன்படுத்திக் கட்டப்பட்டன என்று சங்க இலக்கியச் செய்தி கூறுகிறது. அப்பகுதியில் கிடைக்கும் மண்ணோடு, மண்ணை இறுக்கும் சில பொருட்களைச் சேர்த்து, அரைத்து, “அரை மண்” உருவாக்கி ஏரிக் கரைகளை அமைத்தனர். இறுகிய மண்ணாலும், பிற பொருட்களாலும், நீர்க்கசிவு தடுக்கப்பட்டுள்ளது. வீரணாம் ஏரியில் புதிய மதகு ஒன்றை அமைப்பதற்காக, கரையை வெட்டிய போது அது பாறை போல் இறுகி இருந்ததையும், நடுவில் ஊடுசுவர் அல்லது களிமண் இல்லாததும் காணப்பட்டது. தற்போது புதிய நீர்த்தேக்கங்கள் அமைப்பதற்காக, பொருத்தமான மண்ணைத் தேடி வெகு தொலைவிலிருந்து கொண்டு வந்தும், நீர்க்கசிவுகள் ஏற்படுவதைக் கண்கூடாகக் காணும் போது நமது முன்னோர்களின் தொழில்நுட்பத்திறன் வியப்பூட்டுகிறது.
தண்ணீர் பங்கீட்டு முறைகள்:
ஏரிகளில் பாசனத்திற்காகத் தண்ணீர் வெளியேறுவதற்கு மடை, மதகு, குமிழி போன்ற அமைப்புகள் இருக்கின்றன. இவை எல்லாம் காலங்காலமாகப் பயன்படுகின்றன. இந்த மடைகள் அனைத்தும் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டே காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கதிகாரத்தில் “நீர்வழிச் சூத்திரம்” என்ற பாடல் உள்ளது.
ஒரு நாளின் நாழிகையை ஒல்லா மனத்தின்
உரு நாழிகைக்கு ஈத்து மானே – தருமிலக்கம்
சேர்ந்ததற்கு வேறானது இன்னாழிகைக் கீந்து
பார்த்த தினம் பேரே பகர்.
ஒரு குளத்தின் நீர் முழுவதையும் பாய்ச்ச எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதனைக் கணக்கிட இப்பாடல் உதவுகிறது. இதன் உரை ஆசிரியர் மாதிரிக் கணக்கு ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார். ஒரு ஏரியில் உள்ள ஆயக்கட்டுக்கு 4 நாழிகையில் நீர்பாயும் மதகு ஒன்று, 6 நாளிகையில் பாயும் மதகு ஒன்று, 12 நாழிகையில் பாயும் மதகு ஒன்று இருக்கும் போது, மூன்று மதகுகளையும் திறந்தால் எவ்வளவு நேரத்தில் ஆயக்கட்டு முழுவதற்கும் நீர் பாயும்? என்பது கணக்கு. இதற்கு விடை காணும் வழி பாடலில் உள்ளது.
ஒரு நாளின் நாழிகை =60
ஒரு நாழிகைக்கு ஈந்து
முதல் மடை 60/4 = 15
2ம் மடை 60/6 = 10
3ம் மடை 60/12 = 5
………
மொத்தம் 30
………
“இந்நாழிகைக்கு ஈந்து” 60/30 = 2
மூன்று மதகுகளையும் திறந்து விட்டால் ஆயக்கட்டு முழுமைக்கும் ஆதாவது 2 நாழிகையில் நீர் பாய்ந்து விடும் என்பதே இப்புதிருக்கு விடை.
இப்பாடல் தரும் சூத்திரம் மூலம் 1. குளத்தின் கொள்ளளவு எவ்வளவு?. 2. பாசன மதகுகளின் எண்ணிக்கை?. 3. மதகுகளிலிருந்து வெளிவரும் தண்ணீரின் அளவு என்ன?. 4. பாசன வயலின் பரப்பு, மண் வகை, இருப்பிடம் ஆகியவற்றிற்கேற்ப இம்மதகுகள் திறக்கப்பட வேண்டிய கால அளவு என்ன?. 5. அனைத்து மடைகளையும் திறந்தால், குளத்திலிருந்து எவ்வளவு நீர் வெளியேறும்?. ஆகியவற்றை அறியலாம். பண்டையத் தமிழர்கள் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு, அதன் பிறகே ஏரிகளையும், மதகுகளையும் அமைத்துள்ளனர்.
18 கிராமங்களில் உள்ள நிலங்களுக்கு தூசி – மாமண்டூர் ஏரியிலிருந்து நீர் பாய்கிறது. ஏரிக்கரையின் வலது மற்றும் இடது கோடிகளில் ஒவ்வொரு மேட்டு மடைகள் உள்ளன. அம்மடைகளுக்கு அடுத்து இரண்டு பள்ள மடைகள் உள்ளன. வலதுபுற மேட்டு மடையும், பள்ள மடையும் 9 கிராம வயல்களுக்கு நீர் பாய்ச்சுகின்றன. இடதுபுற மேட்டு மடையும் பள்ள மடையும் மீதமுள்ள 9 கிராமங்களுக்கு நீர் பாய்ச்சுகின்றன. சண்டை சச்சரவின்றி சமபங்கு வழங்குவது போல இம்மடைகள் அமைத்திருப்பதை இன்றும் காணலாம். இதன் அடிப்படையிலேயே, தண்ணீர் ஏரியிலிருந்து வெளிவரும் தூம்பிற்கு “நாழிகை வாயில்” போன்ற பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாறன்சேந்தன் கல்வெட்டில் “கணிக் கூற்றோடு நீர்” என்ற சொற்றொடர் உள்ளது. இதன் பொருள் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு அந்நிலத்தில் பாயக்கூடிய நீரின் அளவு என்பதாகும். இதே போல் “நீர்க்கிசைந்த வண்ணம்”, நீர்க்கீய்ந்த வண்ணம்” என்ற சொற்றொடர்கள் “நீர்ப்பங்கீட்டு முறைப்படி” என்ற பொருளில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபனின் (கி.பி.815-860) கல்வெட்டு ஒன்று ஸ்ரீகண்ட வாய்க்காலில் வரும் நீரை ஒழுங்குப்படுத்தி, எந்தெந்த நிலங்களுக்கு, எவ்வளவு நேரம் நீர் பாய்ச்ச வேண்டும்? இந்த நீர் பாய்ச்சலில் யார் யாருக்கு எந்த வரிசைக் கிராமத்தில் பாய்ச்ச வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இந்த ஒழுங்குமுறை தவறியவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது “சுழற்சி முறைப் பாசனம்” என்று குறிப்பிடப்படும் நீர் மேலாண்மை வழிமுறையை கி.பி. 9-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது.
சிந்து நதிப்பாசனப் பகுதியில் முகலாயர் ஆட்சியில் உருவான “வாரபந்தி” என்ற சுழற்சி முறைப் பாசனம், பாலாற்று ஏரிகளுக்காக 18-ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட “மாமூல் நாமா” என்ற சுழற்சி முறை, ஆகியவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக தமிழர்கள் தண்ணீர் பகிர்வு முறையில் அறிவியல் பூர்வமாகச் சிந்தித்து நீர் விரயமாகாமல் பங்கீடு செய்தது அவர்களின் மேலாண்மைத் திறமைக்குச் சான்றாகும்.
புதுக்கோட்டை மாவட்டம் நாஞ்சூர் ஏரியில் தண்ணீர் பங்கீடு செய்வதற்கு “முறைப்பானை” என்ற வழக்கம் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்ததாக, அவ்வூரார் சொல்கின்றனர். இந்த வழக்கம் எப்போது தொடங்கியது என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது இல்லை. 10 முதல் 12 லிட்டர் கொள்ளவு கொண்ட ஒரு செப்புப் பானையில் அடிப்பாகத்தில் ஒரு சிறிய துளை இடப்படும். இது போன்ற துளை இடுவதற்கான ஊசியின் அளவுகள் குறித்த கல்வெட்டுச் செய்திகள் உள்ளன. மூன்று கற்களைச் பரப்பி அதன் மேல் இந்தப் செப்புக் பானையை வைப்பார்கள். பானையில் முழுவதும் நீர் நிரப்பப்படும். துளையிலிருந்து நீர் வடியும். செம்புத் தண்ணீர் முழுவதும் காலியானால், ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ந்து விடும். இதுவே “முறைப்பானை” எனப்பட்டது. இதனைக் கண்காணிக்கவும், நீர்ப் பாய்ச்சவும் “குமுழிப்பள்ளன்” என்ற பணியாள் இருந்திருக்கிறார். காலை முதல் மாலை வரை இம்முறையில் நீர் பகிரும் காலம் கணக்கிடப்பட்டது. இதே போன்ற முறைகள் ஆப்பிரிக்காவில் 1000 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
நீர் உரிமை:
ஆற்றிலிருந்து நீர் எடுத்து வரும் வாய்க்காலுக்கு மேல்பகுதியில் மற்றொரு புதிய வாய்க்கால் வெட்டக்கூடாது என்பதை, “காலுக்கு மேல் கால் கல்லலாகாது” என்று குருவித் துறை பெருமாள் கோவில் கல்வெட்டு கூறுகிறது, மேல் பகுதியில் புதிய வாய்க்கால் வெட்டுவது பழைய பாசன தாரர்களின் உரிமையைப் பாதிக்கும் என்பதாலேயே இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் இன்று ஏற்றுக் கொள்ளப்படும் “முன்னுரிமை” (RIPARIAN RIGHT) என்ற உரிமை பற்றி அன்றே கூறியிருப்பது தமிழர்களின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. புதுக்கோட்டைக் கல்வெட்டு ஒன்று கீழ்க்கண்ட செய்தியைத் தருகிறது.
“ஆலத்தூர் ஊரார், பெருங்குமிழி மூலம் 180 நாழிகை தண்ணீர் பெறும் ஆயக் கட்டுப் பரப்பிலிருந்து 12 மாநிலத்தையும் 17 நாழிகை நீர் பெறும் உரிமையையும், அவ்வூர் கோவில் நாட்டியப் பெண்ணிற்கு ஏலத்தின் மூலம் விற்றனர்”. நிலத்தோடு, நீருக்கும் உரிமை இருந்தது இதன் மூலம் தெரிகிறது. தற்போது இது போன்ற உரிமை இல்லாததால் தண்ணீர் பெறுவதில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. நீருக்கு உரிமை கோர முடியவில்லை.
கிராமப் பொதுச் சொத்து:
ஏரிகள், குளங்கள், போன்ற நீர் நிலைகள் கிராமப் பொதுச் சொத்தாக இருந்தன. அவற்றைப் பராமரிப்பதிலும், நிர்வாகத்திலும் விவசாயிகளுக்கு மட்டுமின்றி சலவைத் தொழிலாளர், மீன் பிடிப்போர் மற்றம் கால்நடை வளர்போர் போன்று ஏரி நீரைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும் உரிமை இருந்தது. தண்ணீரிலும் உரிமை இருந்தது. சலவைத் தொழிலாளர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேவை. எனவே விவசாயத்திற்குப் பயன்படுத்தும் போதே குறிப்பிட்ட அளவு தண்ணீரை மீதம் வைக்கும் வழக்கம் இருந்தது இன்றும் பல கிராமங்களில் உள்ளது.
பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட “அய்யங்கார் குளத்தின்” நடுவில், ஒரு ஆழமான சிறிய குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குளத்தில் உள்ள தண்ணீரை மதகுகள் மூலம் வெளியேற்ற முடியாது. பாசன காலம் முடிந்து, குளம் வற்றிய பின்பும், கோடை காலத்தில், இந்த நடுக்குளத்தில் தண்ணீர் இருக்கும். பாசனம் அல்லாத பிற தேவைகளுக்கு இந்தத் தண்ணீர் பயன்பட்டது. காஞ்சிபுரம் அருகில் இன்றும் இக்குளத்தைக் காணலாம்.
மீன் பிடிப்போரும், சலவைத் தொழிலாளர்களும் பகல் பொழுதில் எப்போதும் குளக்கரையில் இருப்பதால், அவர்களிடம் குளங்கரைக் காவல் மற்றும் மடை காவல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகக் கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கம் இன்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், நிலவரி வருவாயைக் கருத்தில் கொண்டு, குளப்பராமரிப்பு ஆயக்கட்டுதாரர்களிடம் மட்டும் ஒப்படைக்கப்பட்டது. இதுவே மற்றவர்களுக்கு ஏரிகளின் மீது அக்கறை இல்லாமல் போகும்படி செய்துவிட்டது.
மழைநீர் சேகரிப்பு:
கிராமப்புறங்களில் மழைநீர் சேகரிப்புக்கு உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், ஊருணிகள் மற்றும் கோவில் குளங்கள் அனைத்தும் இன்றும் அப்பணியினைச் செவ்வனே செய்கின்றன. நகர்ப்புறங்களில் மழைநீர் சேகரிப்பு முயற்சி இராஜஇராஜன் (கி.பி. 10ம் நூற்றாண்டு) காலத்திலேயே தஞ்சையில் தொடங்கப்பட்டது. தஞ்சைப் பெரியகோவில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் முழுமையும் சேமிக்கும் இடமாகச் சிவகங்கை குளத்தை இராஜஇராஜன் அமைத்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. அதற்குப் பின்னர் தஞ்சையை ஆண்டு செல்வப்ப நாயக்கன், செல்வப்பன் ஏரியைப் (சேப்பன வாரி) வெட்டி அதில் தஞ்சை நகரில் பெய்யும் மழை நீரைச் சேகரித்து, வண்டல் கலந்த நீர் தெளிந்த பின்னர், தனிக்குழாய் மூலம் சிவகங்கைக் குளத்தில் சேமிக்கும்படி அமைத்தான். பிறகு நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் நகரில் உள்ள முக்கிய குளங்களுக்கும், கிணறுகளுக்கும், அரண்மனைக்கும் விநியோகம் செய்த தடயங்கள் கிடைத்துள்ளன.
முடிவுரை:
இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டவை மிகச்சிலவே. தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளும், குளங்களும், ஊரணிகளும் ஒப்பற்ற வரலாற்றுச் சின்னங்கள் 100 ஆண்டுகளே ஆன கட்டிடத்தை இடிக்கும் போது ஒட்டு மொத்தமாகக் குரல் கொடுக்கும் தமிழர்கள், 2000 ஆண்டு பழமை வாய்ந்த ஏரிகளை அழிக்கும் போது பாராமுகமாக இருப்பது ஏன் என்று விளங்கவில்லை. கட்டுமானங்கள், அதன் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை, தூர்வாருகிறோம், புதுப்பிக்கிறோம் என்று சொல்லி சிதைத்துக் கொண்டிருப்பவர்களும் நாம்தான். இச்சிதைவைத் தடுக்க இயலாத நிலையில், அவை பற்றிய செய்திகளையவது பதிவு செய்து வைக்க வேண்டியது தமிழர்களின் கடமை.  
நன்றி: முனைவர் பழ. கோமதிநாயகம்  தமிழர் கண்ணோட்டம் (பொங்கல் சிறப்பிதழ்)


No comments:

Post a Comment