Tuesday 22 September 2009

உலக ரோஜா தினம்!!

உலக ரோஜா தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இரண்டாம் சீசனுக்கு ஊட்டிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.ஊட்டி தாவரவியல் பூங்கா தோற்றுவிக்கப்பட்டு நூற்றாண்டு கடந்ததை கொண்டாடும் வகையில், 1996ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், ஊட்டி விஜயநகரப் பகுதியில் ரோஜா பூங்கா உருவாக்கப்பட்டது. இதற்கு, "நூற்றாண்டு ரோஜா பூங்கா' என பெயரிடப்பட்டது. இப்பூங்கா தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பில், ஐந்த தளங்களில் உருவாக்கப்பட்டது. இதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளில், 3,800 ரக ரோஜாக்கள் தற்போது வரை வைக்கப்பட்டுள்ளன. தற்போது, பூங்காவை ஒட்டியுள்ள ஒரு ஏக்கர் பரப்பிலான தேயிலை எஸ்டேட்டில், தேயிலைச் செடிகள் அகற்றப்பட்டு இந்த பகுதியிலும் ரோஜா பூங்காவை விரிவாக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. ஆசியாவிலேயே அதிக ரோஜா ரகங்கள் கொண்ட பூங்காவாக, ரோஜா பூங்கா திகழ்ந்து வருவதால், ஜப்பானில் நடந்த சர்வதேச ரோஜா கருத்தரங்கில், "கார்டன் ஆப் தி எக்சலன்ஸ்' விருது கடந்த 2006ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த பூங்காவுக்கான அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான பல்வேறு சிறப்புப் பணிகளை, ரோஜா பூங்கா நிர்வாகம் செய்து வருகிறது. 

உலக ரோஜா தினம்:உலகில் உள்ள மலர்களில் ரோஜா மலர்களுக்கென தனித்துவமான வரலாறு உண்டு. காட்டு ரோஜாக்களை, வீட்டு ரோஜாக்களாக மாற்றியவர்களில், உலக அழகி என்று வர்ணிக்கப்படும் "கிளியோபாட்ரா' வுக்கும், ஜூலியஸ் சீசருக்கும் முக்கிய பங்கு உள்ளதென வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் காலத்திலேயே பல்வேறு ரோஜா மலர்களைக் கண்டுபிடித்ததும், ரோஜாக்களில் பானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது குறித்த தகவல்களும் உள்ளன.அதேபோல, ரோஜா மலர்களின் நிறங்களுக்கும் ஒவ்வொரு "சென்டிமென்ட்' உண்டு. மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை, வெள்ளை ஆகிய ரோஜாக்கள் நட்பு, காதல், சோகம், சமாதானம் உட்பட பல்வேறு உணர்வுகளை வெளிக்காட்டுவதாக உள்ளன. இதன் காரணமாகத் தான் "காதலர் தினம்' வரும் போது, உலகில் அதிக விற்பனையாகும் மலர்களில் ரோஜா மலருக்கு என்றுமே முதலிடம் உள்ளது. 

இத்தகைய சிறப்பு தகுதிகள் வாய்ந்த ரோஜா மலருக்கென ஒரு தினத்தைக் கொண்டாட, "அமெரிக்கன் ரோஜா சங்கம்' முதன் முதலில் தீர்மானம் கொண்டு வந்தது. உலகம் முழுவதும் ரோஜா தினம் செப்., 22ல் ஆண்டுதோறும் கொண்டாடப் படுகிறது.இன்று ரோஜா தினம் கொண்டாடப்படுவதால், ஊட்டிக்கு இரண்டாம் சீசனுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர். 
இந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாட, உள்ளூர் ரோஜா ஆர்வலர்கள் திட்டமிட்டிருந்தாலும், கன மழை பெய்தால் தங்களின் நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்க நேரிடுமென தெரிவித்துள்ளனர். அதே நிலையில் தான், ஊட்டி ரோஜா பூங்கா நிர்வாகமும் உள்ளது. ஊட்டியில் காலநிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகளை குதூகலப்படுத்தும் விதத்திலான நிகழ்ச்சி நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment