Thursday 30 July 2009

ஏழை முஸ்லிம்களுக்கு வறுமையில் இருந்து மீள நிதியுதவி செய்யும் 'பைத்துல்மால் !! ஒரு தவகல்..

தமிழகத்தில் உள்ள 'பைத்துல் மால்' எனும் ஏழைகள் நிதியம், பல்லாயிரக்கணக்கான ஏழை முஸ்லிம்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தல், கல்வியில் முன்னேற்றுதல், திருமணம், மருத்துவ சிகிச்சைக்கு உதவுதல் ஆகிய பணியில் ஈடுபட்டு வருகிறது.ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் முக்கிய முஸ்லிம் பிரமுகர், ஆலிம் எனப்படும் மதகுரு ஆகியோரை நிர்வாகிகளாகக் கொண்டு இந்த பைத்துல்மால்கள் அமைக்கப்படுகின்றன. இவர்கள் வரவு, செலவு கணக்குகளை முறைப்படி பேண வேண்டும்.தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பைத்துல்மால்கள் எனும் ஏழைகள் நிதியம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிதியம் மூலம், வறுமையில் வாடும் முஸ்லிம்களுக்கு பொருளாதார ரீதியான உதவிகள் வழங்கப்படுகின்றன.

முஸ்லிம்கள் அதிகமாக உள்ள கீழக்கரை, காயல்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பைத்துல்மால்கள் பிரசித்தம்.
85 கிராம் தங்கம் அல்லது அதன் மதிப்புக்கு மேல்பொருட்கள், பணம் வைத்திருக்கும் முஸ்லிம்கள் ஆண்டுதோறும் இரண்டரை சதவீதம் ஜகாத் எனும் ஏழை வரி வழங்க வேண்டும் என்பது முஸ்லிம்களின் 5 கட்டாயக் கடமைகளில் ஒன்று. ஜகாத் தொகையை கூட்டுசேர்ந்து வசூலிக்கப் பட்டு, தேவையான ஏழை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய வழிமுறை. 

இதன்படி, தமிழகத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பைத்துமால் கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பைத்துல்மால்களில் அரசி டமிருந்து உதவித் தொகை கிடைக்கப் பெறாத முதியோர், விதவைகளுக்கு மாத உதவித் தொகை வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள பைத்துல்மாலின் நிதி நிலைமைக் கேற்ப ரூ.500 முதல் ஆயிரம்வரை மாத ஓய்வூதியம் வழங்கப் படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பைத்துல்மால்கள் மூலம் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாத ஓய்வூதியம் பெற்று பயனடைகின்றனர்.

இதுதவிர, கல்வி உதவித் தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம்வரை மாணவரின் படிப்புக்கேற்ப நிதி உதவி அளிக்கப்படுகிறது. இதேபோல, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவி, மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் பைத்துல்மால்களை உருவாக்கி ஒருங்கிணைக் கும் பணியில் ஈடுபட்டுள்ள காங் கிரஸ் கட்சி பிரமுகர் எஸ்.எம்.இதாய துல்லா, இதுகுறித்து 'தி இந்து' விடம் கூறியதாவது:
ஜகாத் எனும் ஏழை வரியை கூட்டுசேர்ந்து, குர்-ஆனில் தெரிவித்துள்ளபடி தேவையுடைய ஏழைகளுக்கு வழங்கவேண்டும். பெரும்பாலான முஸ்லிம்கள் இந்த நடைமுறைப்படி ஜகாத் தொகையை ஏழைகளுக்கு வழங் காமல் அவரவர் விரும்பிய நபர்களுக்கு வழங்கி வந்தனர்.

ஜகாத் எப்படி, யாருக்கு வழங்க வேண்டும் என்ற விதிமுறை தெரியாததால் பலர் அவ்வாறு செய்து வந்தனர். அவர்களுக்கு நபிகளாரின் வாழ்க்கை நடை முறைகளில் இருந்து உரிய ஆதா ரங்களுடன் விளக்கம் அளித்து 'பைத்துல்மால்' எனும் ஏழைக ளுக்கான நிதியம் உருவாக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.



தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் மொஹல்லாக்கள் (பள்ளிவாசல்களைச் சுற்றியுள்ள முஸ்லிம்களின் குடியிருப்புகள்) உள்ளன. ஆனால், இதில் 15 சதவீதம் அளவுக்கே பைத்துல்மால்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து மொஹல்லாக்களிலும் பைத்துல்மால்கள் அமைக்கப்பட வேண்டும் என்கிற லட்சி யத்தை நோக்கி செயலாற்றி வருகிறோம்.
முஸ்லிம்கள் வட்டி தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், வறுமையில் வாடும் பலர் வட்டிக்கு கடன் பெற்று தொழில் தொடங்குவது, மருத்துவம், கல்வி, திருமணம் ஆகியவற்றுக்காக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்க்கவும், கல்லாமை, இல் லாமை, இயலாமை ஆகியவற்றை நீக்கவும் பைத்துல்மால்கள் உதவியாக உள்ளன.
வசதிபடைத்த முஸ்லிம்கள் முறைப்படி ஜகாத் எனும் ஏழை வரியைக் கணக்கிட்டு அந்தந்த பகுதியில் அமைந்துள்ள பைத்துல் மால்களுக்கு வழங்கினால், மிகவும் வறுமையில் வாழும் பல ஆயிரம் முஸ்லிம்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க முடியும் ...

ஆக்கம் மற்றும் தொகுப்பு  : மு , அஜ்மல் கான்.

No comments:

Post a Comment